India vs West Indies 2nd T20 Match Score: ரோகித் சர்மாவின் தீபாவளி வாண வேடிக்கையால் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக 2-வது டி 20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இதன் மூலமாக 3 போட்டிகள் கொண்ட தொடரை வென்றது.
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறது. டெஸ்ட், ஒருநாள் போட்டிகளில் உதை வாங்கிய விண்டீஸ், டி 20 போட்டித் தொடரையும் இழந்திருக்கிறது.
இந்தியா-விண்டீஸ் அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரின் முதல் ஆட்டத்தில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. இரு அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி உத்தரப்பிரதேசம் மாநில தலைநகர் லக்னோவில் புதிதாக கட்டப்பட்டுள்ள அடல் பிகாரி வாஜ்பாய் ஸ்டேடியத்தில் நேற்று தீபாவளி தினத்தன்று இரவு நடைபெற்றது. லக்னோ மைதானத்தில் நடைபெறும் முதல் சர்வதேச போட்டி இதுவாகும்.
டாஸ் வென்ற விண்டீஸ் அணி கேப்டன் பிராத்வெய்ட் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்தியா சார்பில் வழக்கம்போல ரோகித் சர்மாவும், ஷிகர் தவானும் களமிறங்கினர். தவான் சற்றே நிதானம் காட்ட, ரோகித் தீபாவளி பட்டாசை கொளுத்த ஆரம்பித்தார்.
முதல் விக்கெட்டுக்கு இருவரும்14 ஓவர்களில் 123 ரன்கள் சேர்த்த நிலையில் ஷிகர் தவான் 43 ரன்னில் அவுட்டானார். அடுத்து ஒன் டவுனில் இறக்கப்பட்ட அதிரடி வீரர் ரிஷப் பண்ட் 5 ரன்னில் வெளியேறி மீண்டும் அதிர்ச்சி அளித்தார். ஆனாலும் ரோகித் சர்மா அதிரடியாக ஆடி சதமடித்தார். அவர் 61 பந்துகளில் 8 பவுண்டரி, 7 சிக்சர்கள் அடித்து 111 ரன்கள் எடுத்து இறுதி வரை அவுட்டாகாமல் இருந்தார்.
ரோகித்துக்கு துணை நின்ற லோகேஷ் ராகுல் அவுட் ஆகாமல் 14 பந்தில் 26 ரன் எடுத்து வெற்றிக்கு துணை புரிந்தார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் இந்தியா 2 விக்கெட் இழப்புக்கு195 ரன்கள் எடுத்தது.
196 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விண்டீஸ் அணி களமிறங்கியது. இந்திய வீரர்களின் அபார பந்து வீச்சால் அந்த அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 124 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 71 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வென்றது.
3 போட்டிகள் கொண்ட டி 20 தொடரின் முதல் 2 ஆட்டங்களையும் வென்றதன் மூலமாக 2-0 என தொடரை வென்றது இந்தியா. 3-வது போட்டி சென்னையில் நடைபெற இருக்கிறது. நேற்றைய ஆட்டத்தில் ரசிகர்களுக்கு தீபாவளி வாணவேடிக்கை நிகழ்த்தி சதம் அடித்த ரோகித் சர்மா ஆட்ட நாயகன் விருது பெற்றார்.
விராட் கோலி டோனி என இரு முக்கிய வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்ட நிலையில் அந்தக் குறை தெரியாத வகையில் இந்திய அணி அபாரமாக வென்றது குறிப்பிடத்தக்கது.