Ravichandran Ashwin, West Indies vs India, 1st Test Tamil News: வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், 3 ஒரு நாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதலில் டெஸ்ட் தொடர் நடத்தப்படுகிறது. இதன்படி, இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி டொமினிகாவில் உள்ள வின்ட்சர் பார்க் மைதானத்தில் நேற்று தொடங்கியது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 150 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டமிழந்தது. இந்திய அணி தரப்பில் அஸ்வின் 5 விக்கெட் , ஜடேஜா 3 விக்கெட், ஷார்துல் தாகூர், சிராஜ் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
இதனை தொடர்ந்து முதல் இன்னிங்சில் விளையாடி வரும் இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 80 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணியின் தொடக்க வீரர்களான ஜெய்ஸ்வால் 40 ரன்களுடனும், ரோகித் சர்மா 30 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
வரலாறு படைத்த அஸ்வின்
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் சுழல் மன்னனான அஸ்வின் வெஸ்ட் இண்டீசில் வரலாற்றுச் சாதனை படைத்து அசத்தியுள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இந்தப் போட்டியின் முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய அஸ்வின், ஆட்டத்தின் முதலாவது விக்கெட்டாக தொடக்க வீரர் டேகனரின் சந்தர்பால் விக்கெட்டை கைப்பற்றி அசத்தினார். அதன்பிறகு கேப்டன் கிரேக் பிராத்வைட், அலிக் அத்தானாஸ், அல்சாரி ஜோசப், ஜோமல் வாரிக்கன் ஆகியோரின் விக்கெட்டை கைப்பற்றினார்.
அஸ்வின் தொடக்க வீரர் டேகனரின் சந்தர்பால் விக்கெட்டை கைப்பற்றியதன் மூலம் சர்வதேச டெஸ்ட் அரங்கில் தந்தை மகன் விக்கெட்டை வீழ்த்திய முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார். டேகனரின் சந்தர்பாலின் தந்தை ஷிவ்நரைன் சந்தர்பால் ஆவார். அவர் 1994ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரை வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் விளையாடினார்.
12 வருடங்கள் முன்னதாக, அதாவது கடந்த 2011ம் ஆண்டில் இந்தியாவுக்கு சுற்றுப்பயணமாக வந்த வெஸ்ட் இண்டீஸ் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் முதல் போட்டி டெல்லியில் நடந்து. முதல் இன்னிங்சில் 118 ரன்கள் குவித்த ஷிவ்நரைன் சந்தர்பால் 2வது இன்னிங்சில் 47 ரன்னில் ஆட்டமிழந்தார். அவரது விக்கெட்டை அஸ்வின் கைப்பற்றி அசத்தி இருந்தார். இப்போட்டியில் அஸ்வின் மொத்தமாக 9 விக்கெட்டுகளை கைப்பற்றி ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்று இருந்தார்.
Historic moment in Indian Test cricket.
Ashwin becomes the first Indian to take father - son wicket in Tests. pic.twitter.com/7dRzdxWbVf— Johns. (@CricCrazyJohns) July 12, 2023
700 விக்கெட் சாதனை
அஸ்வின் இந்த ஆட்டத்தில் மற்றொரு சாதனையையும் படைத்தார். சர்வதேச கிரிக்கெட்டில் 700 விக்கெட்கள் வீழ்த்தி சாதனை படைத்த அவர் 700 விக்கெட் வீழ்த்திய 3வது இந்திய வீரர் என்கிற பெருமையைப் பெற்றார். இதில், டெஸ்ட் கிரிக்கெட்டில் 477 விக்கெட்டும், ஒருநாள் போட்டிகளில் 151 விக்கெட்டும், டி20 போட்டிகளில் 72 விக்கெட்டும் வீழ்த்தியுள்ளார்.
700 விக்கெட்களை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் அனில் கும்ப்ளே (953) முதல் இடத்திலும், ஹர்பஜன் சிங் (707) 2வது இடத்திலும் உள்ளனர் என்பது குறிப்பித்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.