வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 5ஆவது டி20 ஆட்டத்தில் இந்திய அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடரை கைப்பற்றியது. வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் சுற்றுப்பயணம் செய்த இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில் 4 -1 என்ற கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்று, தொடரை கைப்பற்றியது.
கடந்த 29ம் தேதி நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்தியா 68 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடர்ந்து ஆகஸ்ட் 1ம் தேதி நடந்த ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் 5 விக்கெட் வித்தியாசத்திலும், ஆகஸ்ட் 2ம் தேதி நடந்த ஆட்டத்தில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றது. நான்காவது ஆட்டத்தில் 59 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.
நேற்று (ஆகஸ்ட் 7) 5ஆவது டி20 போட்டி அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் லாடர்ஹில் நகரில் நடைபெற்றது. ஏற்கனவே 3 போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை வென்ற நிலையில், கடைசி ஆட்டத்தில் கேப்டன் ரோகித் ஷர்மாவுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டது.
ஹர்திக் பாண்டியா தலைமையில் இந்தியா அணி களமிறங்கியது. ஸ்ரேயாஸ் ஐயர், சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், ரவி பிஷ்னாய் உள்ளிட்டோர் களமிறங்கினர். டாஸ் வென்ற இந்தியா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய இஷான் கிஷன் 11 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார். பின்னர் களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் நிதானமாக விளையாடி அரை சதம் அடித்தார். 40 பந்துகளில் 64 ரன்கள் விளாசினார். இளம் வீரர் தீபக் ஹூடா 38 ரன்கள் எடுத்து அணிக்கு வலு சேர்த்தார். 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் எடுத்தது.
189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது வெஸ்ட் இண்டீஸ் அணி. தொடக்க வீரராக களமிறங்கிய ஜேசன் ஹோல்டர் டக் அவுட் ஆகி வெளியேறினார். புருக்ஸ் 13 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். டிவோன் தாமஸ் 10 ரன்களிலும், கேப்டன் பூரான் 3 ரன்களிலும், ரோவ்மேன் பவல் 9 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். இந்திய பந்து வீச்சாளர்கள் தொடக்கம் முதலே சிறப்பாக பந்து வீசினர்.
சிம்ரன் ஹெட்மயர் மட்டும் தனி ஆளாக நின்று அரை சதம் கடந்தார். 15.4ஆவது ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெஸ்ட் இண்டீஸ் அணி 100 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணி 4-1 என்ற கணக்கில் தொடரை வென்றது. இந்த போட்டியில் மேலும் சிறப்பாக வெஸ்ட் இண்டீஸ் அணியின் 10 விக்கெட்டுகளையும் சுழற்பந்து வீச்சாளர்கள் எடுத்தனர். ரவி பிஷ்னாய் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகள் எடுத்தார். துல்லியமாக பந்து வீசி பேட்ஸ்மேன்களை திணறடித்தார். 16 ரன்கள் விட்டுகொடுத்து 4 விக்கெட்டுகள் எடுத்தார். அச்சர்பட்டேல், குல்திப் யாதவ் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர்.
வெஸ்ட் இண்டீஸ் வீரர் ரோவ்மேன் பவலின் விக்கெட்டை ரவி பிஷ்னாய் 4 முறை எடுத்துள்ளார். 3 முறை சர்வதேச போட்டிகளிலும் 1 முறை ஐபிஎல் போட்டியிலும் வீழ்த்தியுள்ளார்.