இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை மறுநாள் புதன்கிழமை (ஜூலை 12 ஆம் தேதி) முதல் தொடங்க உள்ளது. சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இவ்விரு அணிகளும் நீண்ட நெடிய வரலாற்றைக் கொண்டுள்ளன. கடந்த பத்தாண்டுகளில் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் இந்தியா அணியே ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
வெஸ்ட் இண்டீஸ் அணி தங்கள் கிரிக்கெட் வரலாற்றில் கடினமான கட்டத்தை கடந்து கொண்டிருக்கிறார்கள். அந்த அணியினர் கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக ஒருநாள் உலகக் கோப்பைக்கு தகுதி பெறவில்லை. மறுபுறம், இந்தியாவும் கடந்த மாதம் ஆஸ்திரேலியாவிடம் தொடர்ந்து இரண்டாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் தோல்வியடைந்தது. இந்தத் தொடரில் இருந்துதான் இந்தியா அதன் அடுத்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியை தொடங்குகிறது. அதனை வெற்றியுடன் தொடங்கவும் ஆர்வமாக உள்ளது.
இந்த இரு அணிகளிலிருந்தும் பல புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர்கள் பேட்டிங்கில் ஜொலித்து உள்ளார்கள். அதேவேளையில், பந்து வீச்சாளர்களும் தங்களின் துல்லியமான பந்துவீச்சில் மூலமாக ஆதிக்கம் செலுத்தியுள்ளனர். வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஆம் நூற்றாண்டில் சில சிறந்த மற்றும் பயமுறுத்தும் பந்துவீச்சாளர்களை கொண்டிருந்தது. ஆனாலும், முன்னாள் இந்திய கேப்டன் கபில் தேவ் இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு இடையிலான டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.
1983 உலகக் கோப்பையை வென்ற இந்திய கேப்டன் கபில் தேவ் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 25 டெஸ்ட் போட்டிகளில் நான்கு ஐந்து விக்கெட்டுகளுடன் மொத்தம் 89 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அவரது சராசரி 24.89 ஆகவும், சிறந்த பந்துவீச்சு 9/83 ஆகவும் உள்ளது. அவரே பட்டியலில் முதலிடத்தையும் பிடித்துள்ளார்.
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் இரண்டாவதாக வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் மால்கம் மார்ஷல் உள்ளார். அவர் 17 டெஸ்ட் போட்டிகளில் 21.98 சராசரியில் 6 ஐந்து விக்கெட்டுகளுடன் 76 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். அவரது அசத்தலான வேகம் அடிக்கடி பேட்டர்களை அவசரப்படுத்தும். அதனால் அவர்கள் தங்களின் விக்கெட்டுகளை பறிகொடுப்பார்கள்.
இந்த பட்டியலில் மற்றொரு வெஸ்ட் இண்டீஸ் வீரராக ஆண்டி ராபர்ட்ஸ் உள்ளார். 5வது அதிக விக்கெட் எடுத்தவராக இருக்கும் அவர் 14 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடி நான்கு ஐந்து விக்கெட்டுகளுடன் 67 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த பட்டியலில் மூன்றாவது மற்றும் நான்காவது இடத்தை இந்தியாவின் அனில் கும்ப்ளே மற்றும் ஸ்ரீனிவாஸ் வெங்கடராகவன் பிடித்துள்ளனர். அவர்கள் முறையே 74 மற்றும் 68 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளனர்.
இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ்: டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.