ஸ்ரேயாஸ் ஐயர், மனீஷ் பாண்டே, லோகேஷ் ராகுல்.... மறுபடியும் முதல்ல இருந்தா!!? வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணித் தேர்வு! - ஒரு பார்வை

ஆட்டத்தின் சூழல், கிளைமேட் அது இதுவென்று நீங்கள் ஆயிரம் காரணம் சொன்னாலும், எந்த ரோலுக்காக அவரை தேர்வு செய்தீர்களோ, அவரிடம் இருந்து அதை அட்லீஸ்ட் 25...

வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி இன்று(ஜூலை.21) அறிவிக்கப்பட்டிருக்கிறது. அணியில் நாம் எதிர்பார்த்ததை விட பெரிய அளவிலான மாற்றங்கள் இல்லையென்றாலும் சில கேள்விகள் நம்மில் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

டி20 அணியை பிசிசிஐ வெளியிட்ட போது, நமக்கு கிடைத்த முதல் சர்ப்ரைஸ் கேப்டன் விராட் தலைமையில் இந்திய அணி ஆடுகிறது என்பது. கோலிக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரது இன்க்லூஷன் உண்மையில் ஆச்சர்யமே!. ரோஹித் துணை கேப்டனாக நியமிக்கப்பட, காயத்தால் உலகக் கோப்பையில் இருந்து வெளியேறிய ஷிகர் தவன் மீண்டும் அணிக்கு திரும்பி இருக்கிறார்.

டி20யை பொறுத்தவரை, ஒரு ரசிகனாக நாம் நிச்சயம் தேர்வு செய்யப்பட்டிருக்கும் அணியை கொண்டாடலாம்.

டி20 அணி: விராட் கோலி(c), ரோஹித் ஷர்மா(wc), ஷிகர் தவான், லோகேஷ் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், மனீஷ் பாண்டே, ரிஷப் பண்ட்(wk), க்ருனால் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், ராகுல் சாஹர், புவனேஷ் குமார், கலீல் அஹ்மது, தீபக் சாஹர், நவ்தீப் சைனி.

ஷ்ரேயாஸ் ஐயர், மனீஷ் பாண்டே, க்ருனால் பாண்ட்யா, வாஷிங்டன் சுந்தர், தீபக் சாஹர் ஆகியோர் மீண்டும் அணிக்கு கம் பேக் கொடுத்திருக்கின்றனர். மும்பை இந்தியன்ஸ் அணியில் மாயன்க் மார்கண்டேவை ஓவர்டேக் செய்து கடந்த ஐபிஎல் சீசனில் அசத்திய ஸ்பின்னர் ராகுல் சாஹர், பெங்களூரு அணியில் மணிக்கு 150 கி.மீ. வேகத்தில் பந்து வீசி தாக்கத்தை ஏற்படுத்திய நவ்தீப் சைனி இந்திய அணியில் இடம் பெற வேண்டும் என்பதே நமது எதிர்பார்ப்பாகவும் இருந்தது. அதை தேர்வர்கள் சிறப்பாக நிறைவேற்றி இருக்கிறார்கள். சைனி போன்ற வெப்பன்கள் எதிர்காலத்தில் பும்ராவுக்கு தோள் கொடுக்க நிச்சயம் தேவை. விக்கெட் கீப்பராக நாம் எதிர்பார்த்த ரிஷப் பண்ட் இடம்பிடிக்க, முற்றிலும் சரியான கலவையுடன் டி20 அணி தேர்வு செய்யப்பட்டது. இந்தியாவின் ஸ்பின் ட்வின்ஸ்களுக்கு டி20 தொடரில் வாய்ப்பளிக்கவில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

ஒருநாள் அணி: விராட் கோலி(c), ரோஹித் ஷர்மா(wc), ஷிகர் தவான், லோகேஷ் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், மனீஷ் பாண்டே, ரிஷப் பண்ட்(wk), ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், யுவேந்திர சாஹல், கேதர் ஜாதவ், புவனேஷ் குமார், கலீல் அஹ்மது, முகமது ஷமி,  நவ்தீப் சைனி.

இந்தப் பட்டியலை வாசித்த உடன் உங்களுக்கு தோன்றிய அதே சந்தேகம் தான், எங்களுக்கும்…

கேதர் ஜாதவ் எதற்கு?

உலகக் கோப்பைத் தொடரில் சரியாக விளையாடவில்லை என்பதற்காக அணியில் இருந்தே நீக்கப்பட்ட கேதர் ஜாதவுக்கு மீண்டும் வெஸ்ட் இண்டீஸ் அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டிருப்பது ஏன்? அவர் சரியாக விளையாடாதது மட்டுமல்ல, அடிக்கடி காயத்தில் சிக்கிக் கொள்வதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். பேட், சப்போர்ட் ஸ்பின் எனும் ரோலுக்கு தான் கேதர் தேர்வு செய்யப்பட்டார். ஆனால், உலகக் கோப்பையில் பேட், பந்து என இரண்டிலும் அவரது பங்களிப்பு? பந்து வீச அவருக்கு பெரிதாக வாய்ப்பே தரப்படவில்லையே… ஆட்டத்தின் சூழல், கிளைமேட் அது இதுவென்று நீங்கள் ஆயிரம் காரணம் சொன்னாலும், எந்த ரோலுக்காக அவரை தேர்வு செய்தீர்களோ, அவரிடம் இருந்து அதை அட்லீஸ்ட் 25 சதவிகிதமாவது உங்களால் பெற முடிந்ததா?

இருந்தாலும், கேதர் மீடியம் ஹிட்டர் என்பதை மறுக்க முடியாது. உலகக் கோப்பையில் அவர் ஃபெயிலானாலும், மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுக்கலாம்.. அதற்கு அவர் தகுதியானவர் என்ற அடிப்படையிலேயே தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.

மற்றபடி ப்ரித்வி ஷா காயத்தில் இருந்து மீளாததால் தேர்வு செய்யப்படவில்லை என்றும், 19 வயது இளம் பேட்ஸ்மேன் ஷுப்மன் கில் வெயிட்டிங் லிஸ்ட்டில் இருப்பதால் இப்போதைக்கு தேர்வு செய்யப்படவில்லை என்றும் தேர்வுகுழுத் தலைவர் எம்எஸ்கே பிரசாத் இன்று தெரிவித்திருக்கிறார்.

தினேஷ் கார்த்திக் ஒட்டுமொத்தமாக கழட்டி விடப்பட்டிருக்கிறார். முதுகு வலியால் ஹர்திக் பாண்டாவுக்கு தொடர் முழுவதிலும் இருந்து ஓய்வு அளிக்கப்பட்டிருக்கிறது.

டெஸ்ட் அணி:

விராட் கோலி(c), அஜின்க்ய ரஹானே(wc), ஷிகர் தவான், மாயங்க் அகர்வால், லோகேஷ் ராகுல், புஜாரா, ஹனுமா விஹாரி, ரோஹித் ஷர்மா, ரிஷப் பண்ட்(wk), ரிதிமான் சாஹா, ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், இஷாந்த் ஷர்மா, முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, உமேஷ் யாதவ்.

எதிர்பார்த்த அணி தான். மாயங்க் அகர்வால், ஹனுமா விஹாரிக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டிருப்பதை பார்க்க அழகாக இருக்கிறது. மாயங்க்கிற்கு ஒருநாள் தொடரிலும் வாய்ப்பு கிடைத்திருந்தால், இன்னும் அழகாக இருந்திருக்கும். ரிதிமான் சாஹா, ரிஷப் பண்ட் எனும் இரு விக்கெட் கீப்பர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில், யாரை முதன்மை விக்கெட் கீப்பராக கொண்டு டெஸ்ட் போட்டியில் இந்தியா ஆடப் போகிறது என்று தெரியவில்லை. அனுபவத்தின் அடிப்படையில் சாஹாவுக்கு வாய்ப்பளித்தால், இந்தியாவின் அடுத்த விக்கெட் கீப்பர் வாரிசாக பிசிசிஐ உருவாக்க நினைக்கும் ரிஷப் பண்ட் உட்கார வைக்கப்படுவாரா?

ரவிச்சந்திர அஷ்வினுக்கு மீண்டும் டெஸ்ட் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஓய்வில் இருந்து பும்ரா மீண்டும் அணிக்கு திரும்புகிறார். இஷாந்த், ஷமி, உமேஷ் என்று தனது Front Line ஃபாஸ்ட் பவுலர்களை களமிறக்குகிறது இந்தியா. ஆனால், டி20, ஒருநாள் தொடரில் விளையாடும் புவனேஷ் டெஸ்ட்டில் சேர்க்கப்படவில்லை.

டெஸ்ட் போட்டிகள் நடைபெறவுள்ள ஆன்டிகுவா மற்றும் ஜமைக்கா சபீனா பார்க் பிட்ச்களில் பெரிதாக ஸ்விங்கிற்கு வேலை இல்லை என்பதால், புவனேஷின் எக்ஸ்க்லூஷன் நல்ல முடிவு எனலாம். 1958ல் கேரி சோபர்ஸ் பாகிஸ்தானுக்கு எதிராக இதே சபீனா பார்க் ஸ்டேடியத்தில் 365 ரன்கள் குவித்ததை மறக்க முடியுமா என்ன!

ஒட்டுமொத்தத்தில் மூன்று வடிவிலான கிரிக்கெட்டுக்கும் தரம் வாய்ந்த இந்திய அணியை பிசிசிஐ தேர்வு செய்திருக்கிறதா என்றால், டி20 மற்றும் டெஸ்ட்டுக்கு இரண்டு கைகளையும் தூக்கலாம்.

ஆனால் ஒருநாள் அணி?

ஒருநாள் போட்டிகளில் இந்திய அணியின் பலவீனம், தலைவலி, டென்ஷன் என ஒட்டுமொத்த உருவமாக நிற்பது மிடில் ஆர்டர் தான். தேர்வு செய்யப்பட்டிருக்கும் இந்த அணியில் மிடில் ஆர்டர் என்ன செய்யப் போகிறது என்று தெரியவில்லை.

லோகேஷ் ராகுல்,

ஷ்ரேயாஸ் ஐயர்,

மனீஷ் பாண்டே 

ஆகிய இம்மூவர்கள் தான் மிடில் ஆர்டரில் ஆடப் போகிறார்கள். ஏற்கனவே இவர்களை முயற்சி செய்து பார்த்து, அதில் ஷ்ரேயாஸ் ஐயர் தவிர மற்ற இரு வீரர்களிடம் இருந்து பெரியளவில் இம்ப்ரஸ் கிடைக்கவில்லை. லோகேஷ் ராகுல் தொடக்க வீரராக நன்றாக ஆடுகிறாரே தவிர, மிடில் ஆர்டரில் குறைந்த பட்ச கன்சிஸ்டன்சி கூட அவரிடம் இல்லை. மனீஷ் பாண்டே டி20க்கு ஓகே… ஒருநாள் போட்டிகளுக்கு? சர்வதேச போட்டிகளில் டி20யை விட ஒருநாளில் குறைவாக ஆவரேஜ் வைத்திருக்கிறார். இவரிடம் இருந்து எந்தளவுக்கு கன்சிஸ்டன்சி கிடைக்கும் என்று தெரியவில்லை.

ஆகையால், மீண்டும் இந்திய அணி, மிடில் ஆர்டர் தேர்வில் சறுக்கப் போகிறதா அல்லது எழுந்து நிற்க குறைந்தபட்ச முயற்சியாவது எடுக்கப் போகிறதா என்பதை இந்த மூன்று பேட்ஸ்மேன்களின் செயல்பாட்டை வைத்து முடிவு செய்து கொள்ளலாம்.

என்ன தேடுறீங்க….? தோனி பெயரையா?? அவரு தான் ரெண்டு மாசம் லீவு-ல போயிட்டாரே… இன்னும் ஏன் அவரையே நோண்டிக்கிட்டு… அந்த மனுஷன கொஞ்சம் ஃப்ரீயா இருக்க விடுங்கப்பா!!

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Sports News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
×Close
×Close