India Women vs Ireland Women; cricket updates in tamil: தென் ஆப்ரிக்க மண்ணில் பெண்கள் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் ‘பி’ பிரிவில் உள்ள இந்திய பெண்கள் அணி தனது முதல் இரு ஆட்டங்களில் பாகிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது. தொடர்ந்து இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 11 ரன் வித்தியாசத்தில் தோல்வி கண்டது. இதனால் இந்தியா 2 வெற்றி, ஒரு தோல்வி என புள்ளி பட்டியலில் 4 புள்ளியுடன் 2-வது இடத்தில் உள்ளது.
இந்தநிலையில், ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய பெண்கள் அணி தனது கடைசி லீக்கில் இன்று (திங்கட்கிழமை) அயர்லாந்து அணியை எதிர்கொள்கிறது.

நடப்பு உலகக் கோப்பை தொடரில் அரைஇறுதிக்கு முன்னேற இன்றைய ஆட்டத்தில் இந்தியா கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும். தோற்றால், இங்கிலாந்து-பாகிஸ்தான் மோதும் கடைசி லீக் ஆட்டத்தின் முடிவுக்காக காத்திருக்க வேண்டி வரும். ஏற்கனவே 3 ஆட்டங்களிலும் தோற்று அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்ட அயர்லாந்து ஆறுதல் வெற்றிக்காக போராடும். எனவே, இவ்விரு அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.
நேருக்கு நேர்
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்தியா- அயர்லாந்து அணிகள் இதற்கு முன்பு ஒரு முறை மோதியுள்ளன. 2018-ம் ஆண்டில் நடந்த அந்த ஆட்டத்தில் இந்தியா 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இரு அணி விளையாடும் வீரர்கள் விவரம்
இந்திய பெண்கள்: ஸ்மிருதி மந்தனா, ஷஃபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹர்மன்பிரீத் கவுர்(கேப்டன்), ரிச்சா கோஷ்(விக்கெட் கீப்பர்), தேவிகா வைத்யா, தீப்தி ஷர்மா, பூஜா வஸ்த்ரகர், ஷிகா பாண்டே, ராஜேஸ்வரி கயக்வாட், ரேணுகா தாகூர் சிங்
அயர்லாந்து பெண்கள்: ஆமி ஹண்டர், கேபி லூயிஸ், ஆர்லா ப்ரெண்டர்காஸ்ட், எமியர் ரிச்சர்ட்சன், லூயிஸ் லிட்டில், லாரா டெலானி(கேப்டன்), ஆர்லீன் கெல்லி, மேரி வால்ட்ரான் (விக்கெட் கீப்பர்), லியா பால், காரா முர்ரே, ஜார்ஜினா டெம்ப்சே
இந்தியா பேட்டிங்
இந்தியா அணியில் தொடக்க வீராங்கனைகளாக ஷஃபாலி வர்மா மற்றும் ஸ்மிருதி மந்தனா களமிறங்கினர். இருவரும் தொடக்க முதலே அதிரடியாக ஆடினர். ஸ்மிருதி மந்தனா பவுண்டரிகளாக விளாசினார். இருவரையும் பிரிக்க முடியாமல் அயர்லாந்து பவுலர்கள் திணறினார். இந்திய அணி 62 ரன்கள் எடுத்திருந்தப்போது, தனது முதல் விக்கெட்டை இழந்தது. ஷபாலி வர்மா 24 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அவர் டெலானி பந்தில் ஆமி ஹண்டரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
அடுத்ததாக கேப்டன் ஹர்மன்பிரீத் களமிறங்கி நிதானமாக ஆடினார். மறுமுனையில் வெளுத்து வாங்கிய ஸ்மிருதி மந்தனா அரை சதம் விளாசினார். இந்திய அணி 100 ரன்களை கடந்த நிலையில், ஹர்மன்பிரீத் அவுட் ஆனார். அவர் டெலானி பந்தில் ப்ரெண்டர்காஸ்ட்டிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அதனைத் தொடர்ந்து களமிறங்கிய ரிச்சா கோஷ் டக் அவுட் ஆகி வெளியேறினார். அவர் டெலானி பந்தில் கேபியிடம் கேட்ச் கொடுத்தார். முதல் மூன்று விக்கெட்களையும் அயர்லாந்து கேப்டன் டெலானி வீழ்த்தினார்.
அடுத்ததாக களமிறங்கிய ஜெமிமா ரோட்ரிக்ஸ் தொடக்கம் முதலே அதிரடியாக ஆடினார். அணியின் எண்ணிக்கை 143 ஆக இருந்தப்போது, 18.4 ஓவரில், அதுவரை சிறப்பாக விளையாடி வந்த ஸ்மிருதி மந்தனா அவுட் ஆனார். அவர் ப்ரெண்டர்காஸ்ட் பந்தில் கேபியிடம் கேட்ச் கொடுத்தார். ஸ்மிருதி மந்தனா 56 பந்துகளில் 87 ரன்கள் விளாசினார். இதில் 3 சிக்சர்கள் மற்றும் 9 பவுண்டரிகள் அடங்கும்.
அடுத்ததாக களமிறங்கிய தீப்தி சர்மா முதல் பந்திலே டக் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்தாக பூஜா களமிறங்கி 2 ரன் எடுத்தார். கடைசி பந்தில் ரோட்ரிக்ஸ் ஸ்டெம்பிங் முறையில் வெளியேறினார். இதனால் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 155 ரன்கள் எடுத்தது. அயர்லாந்து தரப்பில் டெலானி 3 விக்கெட்களையும், ப்ரெண்டர்காஸ்ட் 2 விக்கெட்களையும், கெல்லி 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
அயர்லாந்து பேட்டிங்
அயர்லாந்து அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக ஏமி ஹண்டர் மற்றும் கேபி லீவிஸ் களமிறங்கினர். ஏமி ஹண்டர் 1 ரன் எடுத்த நிலையில், ரன் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து களமிறங்கிய ப்ரெண்டர்காஸ்ட் டக் அவுட் ஆகி வெளியேறினார். அவரை ரேணுகா சிங் வீழ்த்தினார். இதனால் அயர்லாந்து அணி 1 ரன்னுக்கு 2 விக்கெட்களை இழந்து தடுமாறியது.
இதனைத்தொடர்ந்து ஜோடி சேர்ந்த கேபி மற்றும் கேப்டன் டெலானி இருவரும் சிறப்பாக ஆடி ரன்களை சேர்த்தனர். கேபி அதிரடியாக ஆடி, பவுண்டரிகளாக விளாசினார். அயர்லாந்து அணி 8.2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 54 ரன்கள் எடுத்த நிலையில், மழைக் குறுக்கிட்டது. அப்போது கேபி 32 ரன்களிலும், டெலானி 17 ரன்களிலும் களத்தில் இருந்தனர். ஆனால், ஆட்டம் மேற்கொண்டு தொடர முடியாத வகையில் தடைப்பட்டது. இதனையடுத்து டக்வொர்த் லூயிஸ் முறைப்படி இந்தியா வெற்றி பெற்றது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil