/indian-express-tamil/media/media_files/2024/11/03/At0t1XZs1ostXjbsjqTE.jpg)
ஆஸ்திரேலிய ஏ கிரிக்கெட் அணியுடன், இந்திய ஏ கிரிக்கெட் அணியினர் டெஸ்ட் போட்டி விளையாடி வரும் நிலையில், இந்திய வீரர்கள் பந்தை சேதப்படுத்தியதாக நடுவர் கூறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்திரேலியாவின் மெக்கே நகரில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவின் ஏ அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இப்போட்டியின் நான்காம் நாளான இன்று, ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு 86 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், விளையாடுவதற்காக புதிய பந்தை நடுவர் ஷான் க்ரைக் அளித்தார்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Cricket Australia clears India A of ball-tampering allegations; Ishan Kishan not to be reported for umpire ‘exchange’
எதற்காக புதிய பந்து என இந்திய வீரர்கள் கேட்ட போது, நீங்கள் பந்தை சேதப்படுத்தியதால் பந்து மாற்றப்பட்டதாகவும், இது குறித்து விவாதம் செய்யாமல் தொடர்ந்து விளையாட வேண்டுமெனவும் நடுவர் கூறியுள்ளார்.
அப்போது இந்திய விக்கெட் கீப்பர் கிஷான், புதிய பந்துடன் தான் விளையாட வேண்டுமா எனக் கேட்டதற்கு, ஆம் புதிய பந்துடன் நீங்கள் விளையாட வேண்டுமென நடுவர் பதிலளித்துள்ளார்.
இதனால் அதிருப்தி அடைந்த கிஷான், நடுவரின் இந்த முடிவு முட்டாள்தனமானது எனக் கூறியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த நடுவர், கிஷானின் இந்த செயல் பொருத்தமற்றது என எச்சரித்து, இந்திய அணியினரின் செயலால் தான் பந்து மாற்றப்பட்டதாகக் கூறினார்.
இந்நிலையில், விவகாரம் தொடர்பாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் விளக்கமளித்துள்ளது. அதன்படி, இந்திய வீரர்கள் பந்தை சேதப்படுத்தவில்லை எனவும், பந்து மோசமான நிலையை எட்டியதால் தான் மாற்றப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும், கிஷானை நடுவர் எச்சரித்திருந்தாலும், அது குறித்து மேலும் புகாரளித்து நடவடிக்கை எடுக்கப்போவதில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.