இங்கிலாந்தின் லீட்ஸ் நகரில் நேற்று நடைபெற்ற இந்தியா A vs இங்கிலாந்து வாரியம் XI அணிகளுக்கு இடையேயான ஒருநாள் போட்டியில் இந்திய A அணி 125 ரன்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளது.
ஜூன் மாதம் அயர்லாந்து செல்லும் இந்திய அணி, இரண்டு டி20 போட்டிகளில் மட்டும் விளையாடவுள்ளது. ஜூன் 27 மற்றும் 29 ஆகிய தேதிகளில் இந்தப் போட்டிகள் நடைபெறுகிறது. இதற்கு பின், ஜூலை மாதம் இங்கிலாந்து செல்லும் இந்திய அணி, அங்கு மூன்று ஒருநாள், மூன்று டி20, மற்றும் ஐந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் டெஸ்ட் தொடரை தவிர்த்து, ஒருநாள் மற்றும் டி20 தொடர்களுக்கான இந்திய அணி வீரர்கள் பட்டியல் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது.
இந்நிலையில், இந்திய A அணி, இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு XI அணி மற்றும் வெஸ்ட் இண்டீஸ் A அணிகள் மோதும் முத்தரப்பு ஒருநாள் தொடர் இங்கிலாந்தில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதில் இந்திய அணியும், இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு XI அணியும் நேற்று லீட்ஸ் நகரில் மோதின. முதலில் பேட்டிங் செய்த இந்திய A அணி, 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 328 ரன்கள் குவித்தது. ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் தொடக்க வீரராக களமிறங்கி அசத்திய ப்ரித்வி ஷா, இப்போட்டியிலும் தொடக்க வீரராக களமிறங்கி, 61 பந்தில் 70 ரன்கள் எடுத்தார்.
கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் 54 ரன்களும், இஷான் கிஷன் 50 ரன்களும், க்ருனல் பாண்ட்யா 34 ரன்கள் என அனைவரும் கணிசமான பங்களிப்பு அளிக்க இந்திய அணி, இங்கிலாந்து போர்டு அணிக்கு 329 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.
இதைத் தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து லெவன், 36.5 வது ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 203 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக மேத்யூ க்ரிட்ச்லே 40 ரன்கள் எடுக்க, பென் ஸ்லேட்டர் 37 ரன்கள் சேர்த்தார்.
இந்திய அணி சார்பில் தீபக் சாஹர் 7.5 ஓவர்கள் வீசி, 48 ரன்கள் விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அக்சர் படேல் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.