Emerging Asia Cup 2023: India A vs Pakistan A Final Tamil News: இளம் வீரர்களுக்கான ஆசிய கோப்பை (Emerging Asia Cup 2023) தொடர் இலங்கை மண்ணில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 8 அணிகள் பங்கேற்ற இந்த தொடரின் முதல் அரையிறுதியில் இலங்கை ஏ அணியை 60 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய பாகிஸ்தான் ஏ இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. தொடர்ந்து நடந்த 2வது அரையிறுதியில் வங்கதேச ஏ அணியை 51 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா ஏ அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இந்த நிலையில், இந்தியா ஏ - பாகிஸ்தான் ஏ அணிகள் பலபரீட்ச்சை நடத்தும் இறுதிப்போட்டி கொழும்பில் உள்ள ஆர்.பிரேமதாச மைதானத்தில் நாளை மதியம் 2 மணிக்கு நடைபெற உள்ளது.
பொதுவாக, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போட்டிகளில் எந்த வெற்றியை ருசிக்கும் என்பதை கணிப்பது கடினம், ஆனால், இந்தப் போட்டியில் இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என்று சொல்லலாம். ஏன்னென்றால், லீக் சுற்றில் பாகிஸ்தானை இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றியை பதிவு செய்து இருந்தது. எனவே, இந்திய அணி வீரர்கள் அதே உத்வேகத்துடன் களமிறங்குவார்கள்.
மறுபுறம், பாகிஸ்தானும் ஒரு திறமையான அணியாக உள்ளது. அந்த அணியில் உள்ள பல வீரர்கள் கணிசமான சர்வதேச மற்றும் பாகிஸ்தான் சூப்பர் லீக் (பி.எஸ்.எல்) போட்டிகளில் விளையாடிய அனுபவம் கொண்டவர்களாக உள்ளனர். ஆல்-ரவுண்டர் முகமது வாசிம், கேப்டன் முகமது ஹாரிஸ், தொடக்க ஆட்டக்காரர் சாஹிப்சாதா ஃபர்ஹான் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷத் இக்பால் ஆகியோர் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடியவர்கள். அதே சமயம் அமட் பட் மற்றும் ஒமெய்ர் யூசுப் போன்ற வீரர்கள் பி.எஸ்.எல்-லில் சிறப்பாக செயல்பட்டவர்கள். எனவே, இவ்விரு அணிகள் மோதும் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.
நேருக்கு நேர்
இந்தியா ஏ - பாகிஸ்தான் ஏ அணிகள் இதுவரை 5 போட்டிகளில் நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் இந்தியா 4 முறையும், பாகிஸ்தான் ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளது.
இறுதிப்போட்டியில் இரு அணிகளும் கடைசியாக 2013ல் மோதின. அப்போது சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி கோப்பையை வென்று அசத்தியது. இந்தப் போட்டியில் 93 ரன்களை குவித்த கே.எல் ராகுல் ஆட்ட நாயகன் விருதை வென்றார்.
இரு அணிகளின் வீரர்கள் பட்டியல்:
பாகிஸ்தான் ஏ அணி
சைம் அயூப், சாஹிப்சாதா ஃபர்ஹான், உமைர் யூசுப், தயப் தாஹிர், காசிம் அக்ரம், முகமது ஹாரிஸ் (கேப்டன் / விக்கெட் கீப்பர்), முபாசிர் கான், அமத் பட், முகமது வாசிம் ஜூனியர், சுஃபியான் முகீம், அர்ஷத் இக்பால், ஹசீபுல்லா கான், மெஹ்ரான் மும்தாஸ், மெஹ்ரான் மும்தாஸ்.
இந்திய ஏ அணி
சாய் சுதர்சன், அபிஷேக் சர்மா, நிகின் ஜோஸ், யாஷ் துல் (கேப்டன்), நிஷாந்த் சிந்து, ரியான் பராக், துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), ஹர்ஷித் ராணா, மானவ் சுதர், ஆர்.எஸ்.ஹங்கர்கேகர், யுவராஜ்சிங் தோடியா, பிரப்சிம்ரன் சிங், ஆகாஷ் சிங், நிதீஷ்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil