உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் நேருக்கு நேர் மோதும்

இந்தியா-பாகிஸ்தான் அணிகள் உலக கோப்பையில் விளையாடும் போது நேருக்கு நேர் சந்திக்கும் வாய்ப்பு வருமா? வராதா? என்ற சந்தேகம் இருந்து கொண்டே இருக்கும்.

பன்னிரெண்டாவது உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், முன்னாள் சாம்பியனான இந்திய அணியும் பாகிஸ்தான் அணியும் நேருக்கு நேர் மோதும் என தெரிகிறது.

12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு (2019) இங்கிலாந்தில் மே 30-ந்தேதி முதல் ஜூலை 14-ந்தேதி வரை நடக்கிறது. இதில் பங்கேற்கும் 10 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும். இதற்கான போட்டி அட்டவணை இன்னும் வெளியிடப்படவில்லை.

இந்த நிலையில் உலக கோப்பை போட்டி அட்டவணை குறித்து கொல்கத்தாவில் நடந்து வரும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) செயல் அதிகாரிகள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில் கலந்து கொண்ட இந்திய கிரிக்கெட் வாரியத்தின் மூத்த நிர்வாகி ஒருவர் கூறியதாவது:

2019-ம் ஆண்டு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் மார்ச் 29-ந்தேதி முதல் மே 19-ந்தேதிக்குள் நடத்தி முடிக்கப்படும். ஐ.பி.எல். போட்டிக்கும், அடுத்து வரும் சர்வதேச போட்டிக்கும் குறைந்தது 15 நாட்கள் இடைவெளி இருக்க வேண்டும். அப்போது தான் இந்திய வீரர்களால் புத்துணர்ச்சியுடன் தயாராக முடியும் என்று லோதா கமிட்டி பரிந்துரை செய்திருக்கிறது.

உலக கோப்பையில் இந்திய அணிக்குரிய முதல் ஆட்டம் முதலில் ஜூன் 2-ந்தேதி நடப்பதாக இருந்தது. லோதா கமிட்டியின் பரிந்துரைப்படி ஐ.பி.எல். முடிந்து 15 நாட்கள் இடைவெளி அவசியம் என்பதை வைத்து பார்க்கும் போது, அந்த நாளில் நம்மால் விளையாட இயலாது. இதையடுத்து எங்களது நிலைப்பாட்டை ஐ.சி.சி.யிடம் சுட்டி காட்டி, உலக கோப்பையில் எங்களது தொடக்க ஆட்டத்தின் தேதியை மாற்ற வேண்டும் என்று கூறினோம். அதை அவர்கள் ஏற்றுக்கொண்டு இருக்கிறார்கள்.

இதன்படி உலக கோப்பையில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் ஜூன் 5-ந்தேதி தென்ஆப்பிரிக்காவுடன் மோதும். இந்தியா-பாகிஸ்தான் இடையிலான லீக் ஆட்டம் ஜூன் 16-ந்தேதி மான்செஸ்டரில் நடைபெறும். பொதுவாக, இந்தியா-பாகிஸ்தான் அணிகள் உலக கோப்பையில் விளையாடும் போது அவ்விரு அணிகள் நேருக்கு நேர் சந்திக்கும் வாய்ப்பு வருமா? வராதா? என்ற சந்தேகம் இருந்து கொண்டே இருக்கும். ஆனால் 1992-ம் ஆண்டுக்கு பிறகு இந்த உலக கோப்பையில் ‘ரவுன்ட் ராபின்’ முறை கடைபிடிக்கப்படுவதால் இந்தியா-பாகிஸ்தான் மோதுவது இந்த முறை தொடக்கத்திலேயே உறுதி செய்யப்பட்டு விட்டது.

அடுத்த 5 ஆண்டுகளில் (2019-23) இந்திய அணி விளையாடும் போட்டிகளின் பட்டியலும் கூட்டத்தில் இறுதி செய்யப்பட்டது. அடுத்த 5 ஆண்டுகளில் இந்திய அணி அதிகபட்சமாக 309 நாட்களில் சர்வதேச போட்டிகளில் (மூன்று வடிவிலான போட்டியையும் சேர்த்து) விளையாடும். முந்தைய சீசனை விட இது 92 நாட்கள் குறைவாகும். அதே சமயம் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளின் எண்ணிக்கை 15-ல் இருந்து 19 ஆக உயர்த்தப்படுகிறது. இந்த டெஸ்ட் போட்டியின் முடிவுகள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் ஒரு பகுதியாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.

இப்போதைக்கு இந்திய அணி பகல்-இரவு டெஸ்ட் போட்டிகளில் விளையாட வாய்ப்பில்லை. ஏனெனில் இளஞ்சிவப்பு நிற பந்தில் (பகல்-இரவு டெஸ்ட்) விளையாடுவது உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கு தயாராவதற்கு எந்த வகையிலும் உதவாது.

இவ்வாறு அந்த நிர்வாகி கூறினார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Sports news in Tamil.

×Close
×Close