Asian-games 2023: 19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா உள்பட 45 நாடுகளை சேர்ந்த 12,400 வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டுள்ளனர். இந்நிலையில், இந்த போட்டி தொடரின் 13-வது நாளான இன்று பல்வேறு போட்டிகள் நடைபெற்று வருகிறது. அதில் இந்தியா பதக்கங்களை அள்ளி வருகிறது.
இந்நிலையில், ஆசிய விளையாட்டு போட்டி வரலாற்றில் முதல் முறையாக இந்தியா 100 பதக்கம் வெல்லும் சாதனையை நெருங்கி வருகிறது. ஆசிய விளையாட்டு தொடரில் இந்தியா இதுவரை 22 தங்கம், 34 வெள்ளி, 39 வெண்கலம் என மொத்தம் 95 பதக்கங்களை வென்று பதக்க பட்டியலில் 4ம் இடத்தில் உள்ளது.
இறுதி சுற்றில் இந்தியா
இன்று ஆசிய விளையாட்டு ஆண்கள் கபடி அரையிறுதி போட்டியில் பாகிஸ்தானை 61-14 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி இந்தியா இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இதேபோல், பெண்கள் கபடியில் இந்தியா 61-17 என்ற புள்ளிகள் கணக்கில் நேபாளத்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
ஆசிய விளையாட்டு தொடரில் இன்று நடைபெற்ற ஆண்கள் கிரிக்கெட் அரை இறுதி போட்டியில் இந்திய அணி வங்கதேச அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன்மூலம் இந்தியா இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இதேபோல், அரையிறுதிக்கு முன்னேறியுள்ள பெண்கள் ஹாக்கி அணிக்கும் ஒரு பதக்கம் கிடைக்கும்.
பேட்மிண்டன் ஆண்கள் இரட்டையர் அரையிறுதி சுற்றில் இந்தியா 21-17, 21-12 என்ற நேர் செட்களில் மலேசியாவை வீழ்த்தி அபார வெற்றிபெற்றது. இதன்மூலம் இந்திய இணை சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி, சிரங் சந்திரசேகர் ஷெட்டி ஆகியோருக்கு குறைந்தபட்சம் வெள்ளிப்பதக்கம் உறுதியாகியுள்ளது.
6வது சுற்றுக்கு பிறகு இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் இரண்டாமிடத்தில் இருந்தன. ஆனால் இரு அணிகளுக்கும் விளையாட இன்னும் மூன்று சுற்றுகள் உள்ளன. அட்டவணையில் தங்கள் இடத்தை தக்க வைத்துக் கொள்ள முடிந்தால், இந்தியாவுக்கு மேலும் இரண்டு பதக்கங்கள் கிடைக்கும். எனவே, இந்தியா 100 பதக்கம் வெல்லும் சாதனையை உறுதி செய்யும் என்பது தெளிவாகிறது.
ஆசிய போட்டியில் இன்று பதக்கங்களை அள்ளிய இந்தியா
இன்று நடந்த ஹாக்கி ஆண்கள் இறுதிப்போட்டியில் 5-1 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தி இந்தியா தங்கப்பதக்கம் வென்று அசத்தியது.
பிரிட்ஜி ஆண்கள் குழு இறுதிப்போட்டியில் 17-12 என்ற புள்ளி கணக்கில் ஹாங்காங் அணியிடம் தோல்வியடைந்து இருந்தாலும் இந்தியாவுக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்துள்ளது.
மல்யுத்தம் ஆண்கள் பிரிஸ்டைல் 57 கிலோ வெண்கலப்பதக்கத்திற்கான போட்டியில் இந்திய வீரர் ஆமென் 11-0 என்ற புள்ளி கணக்கில் சீன வீரரை வீழ்த்தி வெண்கலப் பதக்கம் வென்றார். மல்யுத்தம் பெண்கள் பிரிஸ்டைல் 62 கிலோ பிரிவில் இந்திய வீராங்கனை சோனம் வெண்கலப்பதக்கம் வென்றார்.
வில்வித்தை ஆண்கள் ரிகர்வி குழு இறுதிப்போட்டியில் தென்கொரியாவிடம் தோல்வியடைந்த இந்தியா வெள்ளிப்பதக்கம் வென்றது. ஆசிய விளையாட்டு பெண்கள் செபக் டக்ரா போட்டியில் இந்தியா வெண்கல பதக்கம் வென்றது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.