33-வது ஒலிம்பிக் திருவிழா பிரான்ஸ் தலைநகர் பாரீசில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில், இந்திய தரப்பில் 117 வீரர் - வீராங்கனைகள் பங்கேற்று உள்ளனர்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: India at Olympics 2024 Day 4 Live Updates
இந்நிலையில், பாரீஸ் ஒலிம்பிக் போட்டியின் 4-வது நாளான இன்று நடைபெற்ற துப்பாக்கி சுடுதல் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவுக்கான வெண்கல பதக்க போட்டியில் தகுதி சுற்றில் வெற்றி பெற்ற இந்தியாவின் சரப்ஜோத் சிங் - மனு பாக்கர் இணை, தென் கொரியாவின் ஜின் ஓ யே - வோன்ஹோ லீ ஜோடியை எதிர்கொண்டது.
மிகவும் பரபரப்பாக அரங்கேறிய இந்தப் போட்டியில் தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடிய இந்திய இணை 16-10 என்ற கணக்கில் தென் கொரிய ஜோடியை வீழ்த்தி வெண்கல பதக்கம் வென்று அசத்தியது. இதில் முதல் 2 இடங்களை பிடித்த துருக்கி மற்றும் செர்பிய அணிகள் முறையே தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களுக்கான இறுதி போட்டியில் விளையாடுகின்றன.
இந்திய இணை சரப்ஜோத் சிங் - மனு பாக்கர் ஆகியோரின் சிறப்பான வெற்றி மூலம் நடப்பு தொடரில் இந்தியாவுக்கு 2-வது பதக்கம் கிடைத்துள்ளது. மேலும் இந்தியா வென்ற இந்த 2 பதக்கங்களிலும் மனு பாக்கர் இடம்பெற்றுள்ளது அசத்தி இருக்கிறார். இந்த போட்டியின் 3-வது நாளில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனு பாக்கர் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் வெண்கலம் வென்று இந்தியாவின் பதக்க கணக்கை தொடங்கி வைத்தார்.
/indian-express-tamil/media/post_attachments/b8b5846adc6aed0fd487ffba02a7d5b191133ae86dead3c3d932d174cab37007.jpg)
வரலாறு படைத்த மனு பாக்கர்
10 மீட்டர் கலப்பு அணிகள் பிஸ்டல் போட்டியில் சரப்ஜோத் சிங்குடன் இணைந்து வெண்கலப் பதக்கத்தை வென்றதன் மூலம், மனு பாக்கர் ஒரு ஒலிம்பிக் போட்டிகளில் தனது 2வது பதக்கத்தை வென்று வரலாறு படைத்துள்ளார்.
124 நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே ஒலிம்பிக்கில் 2 ஒலிம்பிக் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்கிற பெருமையும் மனு பாக்கர் பெற்றுள்ளார். ஒலிம்பிக் போட்டிகளில் 2 பதக்கங்களைப் பெற்ற 2வது இந்திய வீராங்கனை என்கிற சாதனையையும் அவர் படைத்தார். (பிவி சிந்து: 2016, 2020 - மனு பாக்கர்: 2024, 2024)
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“