இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையே ஆஸ்திரேலியாவில் உள்ள கான்பெர்ரா மனுகா ஓவல் மைதானத்தில் நடந்த முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த நடராஜன் சிறப்பாக பந்துவீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டி, 3 டி20, 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இந்தியா - ஆந்திரேலியா அணிகள் இடையே நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஆஸ்திரேலிய அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
இதையடுத்து, இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையே கான்பெர்ராவில் உள்ள மனுகா ஓவல் மைதானத்தில் இன்று (டிசம்பர் 4) முதலாவது ஒரு நாள் போட்டி நடைபெற்றது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்ததால், இந்திய அணி பேட்டிங் செய்தது. இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷிகர் தவான், கே.எல்.ராகுல் களம் இறங்கினார்கள். ஆனால், ஷிகர் தவான் 1 ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். கேப்டன் விராட் கோலியும் 9 ரன்களில் பந்துவீசிய மிட்செல் ஸ்வெப்சன்னிடம் கேட்ச் கொடுத்து அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். அடுத்து வந்த சஞ்சு சம்சன் 23 ரன்களிலும் மனிஷ் பாண்டே 2 ரன்களிலும் ஹர்திக் பாண்ட்யா 16 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். மறுமுனையில் சிறப்பாக விளையாடிய கே.எல்.ராகுல் 51 ரன்களில் ஆட்டமிழந்தார். கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடிய ஜடேஜா 23 பந்துகளில் 44 ரன்கள் அடித்தார். இதன் மூலம், இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் எடுத்தது.
இதனால், ஆஸ்திரேலிய அணி 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியது.
ஆஸ்திரேலியாவின் தொடக்க ஆட்டக்காரர்களாக டிஆர்சி ஷார்ட் மற்றும் ஆரோன் ஃபின்ஸ் இருவரும் களம் இறங்கினர். ஷார்ட் நிதானமாக விளையா ஃபின்ச் அடித்து விளையாடினார்கள். ஆனாலும், ஷார்ட் 34 ரன்னில் நடராஜன்பந்தில் பாண்ட்யாவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அதே போல, ஃபின்ச் சாஹல் பந்தில் பாண்ட்யாவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். ஒரு நாள் போட்டிகளில் அதிரடியாக விளையாடிய ஸ்டீவ் ஸ்மித் 12 ரன்னில் சாஹல் பந்தில் சஞ்சு சாம்சன்னிடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். கிளென் மேக்ஸ்வெல் 2 ரன்னில் நடராஜன் பந்தில் லெக் பை விக்கெட் முறையில் அவுட் ஆகி வெளியேறினார். இதற்கு அடுத்து மாய்ஸெஸ் ஹென்ரிக்ஸ் 30 ரன்னிலும் மேத்யு வேட் 7 ரன்னிலும் அவுட் ஆனார்கள். மிட்செல் ஸ்டார்க் 1 ரன்னில் நடராஜன் பந்துவீச்சில் போல்ட் அவுட் ஆனார். ஆஸ்திரேலியா அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 150 ரன்கள் மட்டும் எடுத்தது. இதனால், இந்திய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலிய அணியின் சீன் அப்பாட் 12 ரன்களுடனும் மிட்செல் ஸ்வெப்சன் 12 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இறுதி வரை களத்தில் இருந்தனர்.
இந்த போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் யார்க்கர் புயல் நடராஜன் சிறப்பாக பந்துவீசி 4 ஓவர்கள் வீசி 30 ரன்களை கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதே போல, யுஸ்வேந்திர சாஹல் 25 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால், இந்த போட்டியின் சிறந்த வீரராக சாஹல் தேர்வு செய்யப்பட்டார்.
தமிழகத்தைச் சேர்ந்த நடராஜன், தனது முதல் டி20 சர்வதேச போட்டியில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி நிரூபித்துள்ளார்.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.