ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரில் அடிலெய்டில் நடைபெற்ற முதல் போட்டியில் ஆஸ்திரேலியா வென்ற நிலையில், மெல்போர்னில் நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது. தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3-வதுடெஸ்ட் போட்டி சிட்னி மைதானத்தில் நேற்று தொடங்கியது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில், காயத்தில் இருந்து மீண்டு வந்த தொடக்க வீரர் டேவிட் வார்னருடன், புதுமுக வீரர் புகவஸ்கி களமறங்கினர். இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டேவிட் வார்னர் 5 ரன்களில் நடையை கட்டினார். அடுத்து களமிறங்கிய லபுசேஸன் தொடக்க வீரர் புகவஸ்கியுடன் ஜோடி சேர்ந்து ரன்குவிப்பில் ஈடுபட்டார். இவர்களை பிரிக்க இந்திய அணி மேற்கொண்ட முயற்சிகள் பலன் அளிக்கவில்லை.
இதில் 2 முறை கேட்ச் கண்டத்தில் இருந்து தப்பிய தொடக்க வீரர் புகவஸ்கி அரைசதம் கடந்து 62 ரன்களில் வெளியேறினார். 2-வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 100 ரன்கள் சேர்த்தது. அடுத்து களமிறங்கிய முன்னணி வீரர் ஸ்டீவ் ஸ்மித் கடந்த 2 போட்டிகளில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து கடும் விமர்சனத்திற்கு உள்ளான நிலையில், இந்த போட்டியில் பார்முக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கினார். இதனால் தொடக்கத்தில் நிதாமாக விளையாடிய அவர் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் பந்துகளை கவனமுடன் எதிர்கொண்டு மிகவும் எச்சரிக்கையுடன் விளையாடினார்.
இதனால் ஆஸ்திரேலிய அணியின் ரன் வேகமும் சீராக இருந்தது. நேற்றை ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியஆணி 2 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் குவித்திருந்தது. லபுஸ்சேன் 67 ரன்களுடனும் (149 பந்து, 8 பவுண்டரி), ஸ்மித் 31 ரன்களுடனும் (64 பந்து, 5 பவுண்டரி) களத்தில் இருந்தனர். தொடர்ந்து இன்று நடைபெற்ற 2-வது நாள் ஆட்டத்தில், சிறப்பாக விளையாடி அரைசதம் கடந்து, சதத்தை நோக்கி முன்னேறிய லபுசேஸன் 91 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அபாரமாக விளையாடி சதம் கடந்த ஸ்டீவ் ஸ்மித் 226 பந்துகளில்,131 ரன்களிலும் (ரன்அவுட்) வெளியேறினர். அடுத்து களமிறங்கிய மேத்யூ வேட் 13 ரன்களிலும், மீச்செல் ஸ்டார்க் 30 பந்துகளில் 2 பவுண்டரி 1 சிக்சருடன் 24 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
முடிவில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 105.4 ஓவர்களில், 338 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணி தரப்பில் ஜடேஜா 4 விக்கெட்டுகளும், பும்ரா, அறிமுக வீரர் சைனி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், சிராஜ் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணியில் ரோகித் சர்மா சுப்மான் கில் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இருவரும் சிறப்பாக விளையாடி ரன்கள் சேர்த்த நிலையில், அணியின் ஸ்டோர் 70 ரன்களை எட்டிய போது (77 பந்து 3 பவுணடரி 1 சிக்சர்)26 ரன்களில் ரோகித் ஆட்டமிழந்தார். அதனைத் தொடர்ந்து களமிறங்கிய புஜாரா ஒருபுறம் தடுப்பாட்டத்தில் ஈடுபட மறுமுனையில் இளம் வீரர் சுப்மான் கில், 101 பந்துகளில், 50 ரன்கள் (8 பவுண்டரி) குவித்து ஆட்டமிழந்தார்.
2-வது நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 96 ரன்கள் குவித்துள்ளது. புஜாரா 9 (53) ரன்களுடனும், ரஹானே 5 (40) ரன்களுடனும் களத்தில் உள்ளனர். 3-வது நாள் ஆட்டம் நாளை நடைபெறவுள்ளது. முன்னதாக இந்த போட்டியில் ஒரு சிக்சர் அடித்த்தன் மூலம் இந்திய அணியின் தொடக்க ஆட்டகாரர் ரோகித் சர்மாவின் மொத்த சிக்சர் எண்ணிக்கை 424 ஆக உயர்ந்து உள்ளது. இதன் மூலம் அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளும் சேர்த்து அதிக சிக்சர் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையை அவர் பெற்றுள்ளார்.