சமீபத்தில் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் செய்திருந்த இந்திய அணி, அங்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய போது, ரிஷப் பண்ட், டிம் பெய்ன் இடையே உருவான 'பேபி சிட்டர்' (குழந்தை பராமரிப்பவர்) வாக்குவாத விவகாரம் அனைவரும் அறிந்ததே.
ரிஷப் பண்ட் பேட்டிங் செய்துக் கொண்டிருந்த போது வம்பிழுத்த ஆஸி., கேப்டன் டிம் பெய்ன், "நான் என் மனைவியை அழைத்துக்கொண்டு சினிமா சென்றால், குழந்தையை பார்த்துக்கொள்ளும் பேபி சிட்டராக இரு. தோல்வி அடைந்தவுடன் நாட்டுக்குச் சென்றுவிடாதே" என்று கிண்டலாகக் கூறினார்.

ஆனால், உச்சகட்டமாக, டிம் பெய்ன் வீட்டுக்குச் சென்ற ரிஷப் பண்ட், அவரின் மனைவி குழந்தைகளுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டு ட்விட்டரில் வெளியிட்டார். இந்தக் காட்சியை ஆஸ்திரேலிய பிரதமர் முதல் ரசிகர்கள் வரை ரசித்தனர்.
இந்நிலையில், இம்முறை இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்யும் ஆஸ்திரேலியா, 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டி20 போட்டிகள் தொடரில் விளையாடுகிறது. வரும் 24-ம் தேதி பெங்களூரில் முதல் டி20 போட்டியும், 27-ம் தேதி விசாகப்பட்டினத்தில் 2-வது போட்டியும் நடைபெறுகிறது.
ஒருநாள் தொடர் மார்ச் 2-ல் ஹைதராபாத்திலும், மார்ச் 5-ம் தேதி நாக்பூரிலும், 3-வது போட்டி 8-ம் தேதி ராஞ்சியிலும், 10-ம் தேதி மொஹாலியிலும், 13-ம் தேதி 5-வது போட்டி டெல்லியிலும் நடக்கிறது.
இந்தத் தொடருக்கான முன்னோட்டமாக விளம்பரம் ஒன்று எடுக்கப்பட்டது. இந்த விளம்பரத்தில் நடித்துள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக், ஆஸ்திரேலிய ஜெர்சி அணிந்திருக்கும் குழந்தைகளைப் பராமரிப்பது போன்றும், ஆஸ்திரேலிய, இந்திய அணிகளுக்கு இடையிலான தொடர் குறித்து பேசுவது போன்றும் எடுக்கப்பட்டிருந்தது.
'பேபி சிட்டர்' கருவை வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த விளம்பரம் ஆஸ்திரேலிய அணியைக் குறைத்து மதிப்பிடும் வகையில் அமைந்துள்ளதாக கருதிய ஆஸி. அணியின் முன்னாள் வீரர் மாத்யூ ஹெய்டன், சேவாக்கிற்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில், "உங்களை எச்சரிக்கிறோம். ஆஸ்திரேலிய அணியை ஒருபோதும் நையாண்டி செய்து, நகைச்சுவையாக எடுக்காதீர்கள் வீரேந்திர சேவாக். உலகக் கோப்பை வரட்டும், நினைவில் வைத்துக்கொள்ளுங்கள், எந்த அணி பேபி சிட்டராக வரப்போகிறார்கள் என்று பார்க்கலாம்" எனக் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், சேவாக் நடித்துள்ள விளம்பரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள ரிஷப் பண்ட், "சிறந்த கிரிக்கெட் வீரராக எப்படி இருப்பது என்றும் சிறந்த பேபி சிட்டராக எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்றும் எனக்கு காட்டிவிட்டார். சேவாக் எப்போதுமே எனக்கு தூண்டுகோலாக இருந்து வருகிறார்" என்று பதிவிட்டு இருக்கிறார்.
ரிஷப்பின் இந்த ட்வீட்க்கு ஆஸ்திரேலிய ரசிகர்கள் சிலரும் வம்பிழுக்கும் வகையில் பதில் அளித்துள்ளனர். எப்போதும் இந்தியா - ஆஸ்திரேலியா தொடர் என்றால் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. ஆனால், பாண்டிங், கிளார்க் காலத்திற்குப் பிறகு அது மிஸ்ஸிங் என்பதே உண்மை!. அதுவும், ஸ்மித், வார்னர் நீக்கத்திற்குப் பிறகு ஆஸ்திரேலியா அதள பாதாளத்திற்கு போய்விட்டது எனலாம்.
இந்நிலையில், சேவாக்கின் விளம்பரமும், அதைத் தொடர்ந்த ஹெய்டனின் எச்சரிக்கையும் இன்னும் சில நாட்களில் தொடங்கவுள்ள இந்தியா - ஆஸ்திரேலியா தொடரை பெரும் எதிர்பார்ப்பிற்கு உள்ளாக்கியுள்ளது. பல தரமான சம்பவங்களை ரசிகர்கள் காணப்போவது உறுதி!.
