ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டி, 3 டி20 போட்டி மற்றும் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடியது. இதில் முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இழந்த இந்திய அணி, அதன்பிறகு நடைபெற்ற டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி பதிலடி கொடுத்த்து.
தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 4- போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி கடந்த டிசம்பர் 17-ந் தேதி அடிலெய்டில் பகல் இரவு டெஸ்ட் போட்டியாக தொடங்கியது. இந்த போட்டியில், முதல் இன்னிங்சில் 53 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சில் பேட் செய்த இந்திய அணி வெறும் 36 ரன்களில் சுருண்டது. இதனால் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இந்த போட்டி முடிந்தவுடன் இந்திய அணி கேப்டன் விராட்கோலி, தனது மனைவியின் பிரசவ காலம் நெருங்கியதால் தொடரில் இருந்து விலகினார்.
மேலும் பந்துவீச்சாளர் முகமது ஷமி காயம் காரணமாக தொடரில் இருந்து வெளியெறினார். இதனால் இந்திய அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டார். இந்நிலையில், டிசம்பர் 26-ந் தேதி மெல்போர்னில் 2-வது டெஸ்ட் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 195 ரன்களும், இந்திய அணி 326 ரன்களும் எடுத்தது. 131 ரன்கள் பின்தங்கிய நிலையில், 2-வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 200 ரன்களில் சுருண்டது. இதன் மூலம் 70 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 1-1என்ற கணக்கில் சமன் செய்தது. இந்த போட்டியில் இந்திய அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர் உமேஷ் யாதவ் காயமடைந்தார். அவருக்கு பதிலாக தமிழக வீரர் நடராஜன் சேர்க்கப்பட்டார்.
தொடர்ந்து கடந்த ஜனவரி 7-ந் தேதி 3-வது டெஸ்ட் போட்டி சிட்னியில் தொடங்கியது. இந்த போட்டியில் ஐபிஎல் தொடரில் அசத்திய நவதீப் சைனி அறிமுக வீரராக களமிறங்கினார். இதில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 338 ரன்களும், இந்திய அணி, 244 ரன்களும் எடுத்தது. 94 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 2-வது இன்னிங்சில் 312 ரன்கள் குவித்து டிக்ளர் செய்தது. இதனால் 407 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 280 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்த்து. அதன்பிறகு 6-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த அஸ்வின், விஹாரி ஜோடி 266 பந்துகளை சந்தித்து 53 ரன்கள் குவித்தது.
5-வது நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 334 ரன்கள் குவித்தது. இதனால்இந்த போட்டி டிராவில் முடிந்தது. இந்த போட்டியில் சாதனை ஜோடி அஸ்வின் விஹாரி இருவருமே காயம் காரணமாக வெளியேற மற்றொரு சுழற்பந்து வீச்சாளர் ஜடேஜாவும் காயமடைந்து வெளியேறினார். இதனால் கடந்த 15-ந் தேதி தொடங்கிய 4-வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில், தமிழகத்தை சேர்ந்த வாஷிங்டன் சுந்தர் டி.நடராஜன் ஆகியோர் அறிமுக வீரர்களாக களமிறங்கினர். இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 369 ரன்கள் குவித்தது. தொடர்ந்து பேட் செய்த இந்திய அணி 336 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இதனையடுத்து 33 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 294 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் இந்திய அணிக்கு 328 ரன்கள் வெற்றி இலக்கான நிர்ணையிக்கப்பட்ட நிலையில், 4-வது நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 6 ரன்கள் எடுத்திருந்தது. தொடர்ந்து இன்று நடைபெற்ற 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டத்தில் ரோகித் சர்மா 7 ரன்களில் ஆட்டமிழந்தாலும் அதன்பிறகு ஜோடி சேர்ந்த சுப்மான் கில், புஜரா ஜோடி அணியை வெற்றியை நோக்கி அழைத்து சென்றது. சிறப்பாக விளையாடிய சுப்மான் கில் டெஸ்ட் போட்டிகளில் தனது 2-வது அரைசதத்தை பதிவு செய்தார்.
புஜரா தனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களின் பொறுமையை சோதித்துக்கொண்டிருக்க மறுமுனையில் சிறப்பாக விளையாடி சத்ததை நெருங்கிய கில் 91 ரன்களில் லியோன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய கேப்டன் ரஹானே 24 ரன்களும், ஆஸ்திரேலிய பந்துவீச்சை சோதித்த புஜாரா 211 பந்துகளில் 54 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய பண்ட் ஒருபுறம் போராட மறுமுனையில், மயங்க் அகர்வால் 9 ரன்களில் ஆட்டமிழக்க, வாஷிங்டன் சுந்தர் சற்று நேரம் தாக்குபிடித்து 29 பந்துகளில் 22 ரன்கள் குவித்தார். பண்ட் – சுந்தர் ஜோடி 6-வது விக்கெட்டுக்கு 53 ரன்கள் சேர்த்தது.
விக்கெட் சரிந்தாலும் ரிஷப் பண்ட் அதிரடியாக விளையாடி ரன்கள் சேர்த்து இந்திய அணியை வெற்றிக்குஅழைத்து சென்றார். கடைசி கட்டத்தில் இந்திய அணியின் வெற்றிக்கு 3 ரன்கள் தேவைஎன்ற நிலையில், பவுண்டரி அடித்த பண்ட் இந்தியாவின் வரலாற்று வெற்றியை உறுதி செய்தார். 97 ஓவர்களில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 329 ரன்கள் குவித்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கடைசிவரை களத்தில் இருந்த பண்ட் 138 பந்துகளில் 9 பவுண்டரி 1 சிக்சருடன் 89 ரன்கள் குவித்தார். ஆஸ்திரேலிய அணி தரப்பில் கம்மின்ஸ் 4 விக்கெட்டுகளும், லியோன் 2 விக்கெட்டுகளும், ஸ்டார்க் 1 விக்கெட்டும் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது.
இந்த வெற்றி குறித்து இந்திய கேப்டன் ரஹானே கூறுகையில்,
இது எங்களுக்கு சிறந்த வெற்றி. இந்த வெற்றி குறித்து சொல்ல வார்த்தைகள் இல்லை. அடிலெய்ட் டெஸ்ட் தோல்விக்கு பிறகு எங்கள் வீரர்கள் வெற்றிக்காக உறுதியுடன் போரடியதை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன். புஜாரா சாதாரணமாக பேட் செய்வார், ஆனால் இன்று அவர் விளையாடிய விதம் அற்புதமானது. நெருக்கடியான நேரத்தை சிறப்பாக கையாண்டார். இறுதி கட்டத்தில் ரிஷாப் மற்றும் வாஷிங்டன் ஆடிய விதம் நன்றாக இருந்தன. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் 20 விக்கெட்டுகளை வீழ்த்தியது முக்கியமானது. ஜடேஜாவுக்கு பதிலாக களமிறங்கிய சுந்தர் ஆட்டத்தின் போக்கை மாற்றினார். அடிலெய்ட் பற்றி நாங்கள் எதுவும் விவாதிக்கவில்லை. முடிவைப் பற்றி கவலைப்படாமல் மீதமுள்ள போட்டிகளை வெற்றியுடன் முடிக்க எண்ணினேம். இப்போது அது நடந்துவிட்டது. இது அணியின் கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி என தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன் கூறுகயைில்,
தொடரை வெல்வதற்காக நாங்கள் பிரிஸ்பேன் வந்தோம், ஆனால் தொடர் வெற்றிக்கு முழுமையாக தகுதி பெற்ற இந்திய அணி தொடரை வென்றுள்ளது. இந்த தோல்வியில் இருந்து நாங்கள் நிறைய விஷயங்களைத் கற்றுக்கொள்ள வேண்டும். வெற்றிக்கு இந்திய அணி தகுதியானவர்கள். எங்கள் பந்து வீச்சாளர்களும் சிறப்பாக செயல்பட்டனர். இந்த தொடர் வெற்றிக்கு இந்திய அணிக்கு வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.
நடராஜன் கையில் கோப்பை:
இந்த தொடரில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு ஆலன் பார்டர் - சுனில் கவாஸ்கர் வெற்றிக்கோப்பை வழங்கப்பட்டது. இநத கோப்பையை பெற்றுக்கொண்ட இந்திய அணி கேப்டன் ரஹானே டி நடராஜனை அழைத்து கோப்பையை ஏந்தும்படி கேட்டுக்கொண்டார். அதன்படி டி நடராஜன் கோப்பையை ஏந்தி நிற்க இந்திய அணி வீரர்கள் போட்டோ எடுத்துக் கொண்டனர். ரஹானேவின் இந்த செயல் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது.
ஆஸ்திரோலியா வெற்றிக்கு முற்றுப்புள்ளி :
பிரிஸ்பேன் மைதானத்தில் கடந்த 1988-ம் ஆண்டுக்கு பின்னர் தோல்வியை சந்திக்காமல் இருந்த ஆஸ்திரேலிய அணி 32 வருடங்களுக்கு பிறகு முதல் தோல்வியை சந்தித்துள்ளது. கடந்த 1988-ம் ஆண்டு நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்த ஆஸ்திரேலிய அணி அதன்பிறகு பிரிஸ்பேன் மைதானத்தில் 32 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் 7 போட்டிகள் டிரா செய்த நிலையில், 25 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.