இந்தியா ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் கடந்த 26-ந் தேதி தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 195 ரன்களும், இந்திய அணி 326 ரன்களும் எடுத்தது. இதனையடுத்து 131 ரன்கள் பின்தங்கிய நிலையில், 2-வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 200 ரன்களில் சுருண்டது. இதனையடுத்து 70 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 16 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 70 ரன்கள் குவித்து வெற்றி இலக்கை எட்டியது.
இந்த வெற்றியின் மூலம் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. ஏற்கனவே அடிலெய்டில் கடந்த 17-ந்தேதி தொடங்கிய பகல் இரவு டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தற்போது இந்திய அணி இதற்கு பதிலடி கொடுத்துள்ளது.
தனது மனைவிக்கு குழந்தை பிறக்க இருப்பதால் முதல் டெஸ்ட் போட்டியுடன் கேப்டன் விராட்கோலி நாடு திரும்பினார். மேலும் காயம் காரணமாக முன்னணி வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி தொடரில் இருந்து வெளியேறிய நிலையில், இந்திய அணி ஆஸ்திரேலியாவை எப்படி சமாளிக்க போகிறது என்பது குறித்து பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது. இதில் கேப்டன் விராட்கோலி இருந்தும் முதல் டெஸ்ட் போட்டியின் 2-வது இன்னிங்சில் இந்திய அணி 36 ரன்களில் சுருண்டு பெரும் விமர்சனத்திற்கு உள்ளானது.
ஆனால் இந்த விமர்சனங்களுக்கெல்லாம் பதிலடி கொடுக்கும் வகையில் பொறுப்புக்கேப்டன் ரஹானே அட்டகாசமான கேப்டன்சியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. அதிலும் பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியை இரு இன்னிங்சிலும் 200 ரன்களுக்கு சுருட்டியது ரஹானேவின் கேப்டன் தந்திரத்தை காட்டுகிறது. மேலும் இந்த போட்டியில் ஆஸ்திரேலிய வீரர்கள் ஒருவர் கூட அரைசதத்தை கடக்கவில்லை. முதல் இன்னிங்சில் லபுசேஸன் 48 ரன்கள் எடுத்ததே ஆஸ்திரேலிய அணியின் தனிநபர் அதிகபட்ச ஸ்கோராகும்.
இந்நிலையில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியை மெல்போர்ன் மைதானத்தில் குறைந்த ரன்களில் சுருட்டி வரலாற்று வெற்றி பெற்ற இந்திய அணிக்கு முன்னாள் வீரர்கள் பல பாராட்டு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இந்த வெற்றி குறித்து இந்திய அணி கேப்டன் விராட்கோலி தனது ட்விட்டர் பதிவில், அணியின் கூட்டு முயற்சிக்கும், இளம் வீரர்களின் அற்புதமான முயற்சிக்கு கிடைத்த வெற்றி. இன்னும் வெற்றிகளை குவித்து முன்னோக்கி செல்ல வேண்டும் என தெரிவித்துள்ளார்.
வீரேந்தர் சேவாக்
மெல்போர்ன் மைதானத்தில் மிக சிறந்த வெற்றி இது. ரஹானே அணியை வழிநடத்திய விதம், இளம் வீரர்களின் உறுதி மற்றும் அபாரமான பந்துவீச்சு இதுவே வெற்றிக்கு முக்கிய காரணம என தெரிவித்துள்ள சேவாக் கில் சில் என சுப்மான் கில்லுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.
பிஷன் பேடி
8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது மகிழ்ச்சி. அனைத்தையும் செய்துவிட்டு கேப்டன் ரஹானே அமைதியாக இருப்பது, வெற்றிக்கான தடைகளை உடைத்தது என அனைத்துமே மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த நிலை தொடர்ந்தால் இந்திய தொடரை வெல்வது நிச்சயம் இன்ஷாஅல்லாஹ் .. !! என தெரிவித்துள்ளார்.
விவிஎஸ் ல்க்ஷ்மன்
இந்த வெற்றியில் நல்ல அனுகுமுறை தெரிந்தது. கேப்டன் ரஹானே அணியை அற்புதமாக வழிநடத்தினார். இந்த போட்டியில் அறிமுக வீரர்களாக களமிறங்கிய கில், சிராஜ் இருவரும் அற்புமாக விளையாடினார்கள். அவர்கள் மிகுந்த நம்பிக்கையுடன் விளையாடியது தெரிந்தது. என தெரிவித்துள்ளார்.
சச்சின் தெண்டுல்கர்
இந்திய அணியின் கோலி, ரோகித், ஷமி இல்லாமல் கிடைத்த வெற்றி சிறப்பு வாய்ந்தது. கடந்த போட்டியில் தோல்வியில் இருந்து மீண்டு வந்த இந்திய அணிக்கு இது சிறப்பாக வெற்றி. மேலும் வெற்றிகள் குவிக்க பாராட்டுக்கள் என தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.