மெல்போர்னில் நடந்த பாக்ஸிங் டே டெஸ்ட் கிரிக்கெட்டில், இந்திய அணி 137 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்று அசத்தியுள்ளது.
இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் கடந்த 26ம் தேதி தொடங்கியது. பாக்ஸிங் டே டெஸ்ட் என்றழைக்கப்படும் இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில், 7 விக்கெட் இழப்பிற்கு 443 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. புஜாரா 106 ரன்களும், விராட் கோலி 82 ரன்களும், மாயங்க் அகர்வால் 76 ரன்களும் எடுத்திருந்தனர்.
ஆனால், ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸில் 151 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பும்ரா 6 விக்கெட்டுகளை கைப்பற்றி, ஆஸ்திரேலியாவை நிலைகுலைய வைத்தார்.
இதைத் தொடர்ந்து, இரண்டாம் இன்னிங்ஸில் 8 விக்கெட் இழப்பிற்கு 106 ரன்கள் எடுத்து இந்தியா டிக்ளேர் செய்ய, ஆஸ்திரேலியாவுக்கு 399 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. முதல் இன்னிங்சை விட சற்று போராடிய ஆஸ்திரேலிய அணி, நேற்றைய நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 258 ரன்கள் எடுத்திருந்தது.
விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிந்தாலும், பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் சிறப்பாடி ஆடி 103 பந்துகளில் 61 ரன்கள் எடுத்து களத்தில் நின்றார். அவருக்கு பக்கபலமாக நாதன் லயன் 38 பந்துகளை சந்தித்து 6 ரன்களுடன் ஆடி வந்தார்.
கைவசம் 2 விக்கெட்டுகளே மீதமிருந்த நிலையில், வெற்றிக்கு 141 ரன்கள் தேவைப்பட்டது.
இந்நிலையில், இன்றைய ஐந்தாம் நாள் ஆட்டம் தொடங்கும் போது மழை பெய்ததால், ஆட்டம் 2.30 மணி நேரம் தாமதமாக தொடங்கப்பட்டது. கம்மின்சை 63 ரன்னில் பும்ராவும், லயனை 7 ரன்னில் இஷாந்தும் அவுட் செய்ய, இந்திய அணி 137 ரன்கள் வித்தியாசத்தில் வென்று வரலாறு படைத்தது.
இதன் மூலம் டெஸ்ட் தொடரில் 2-1 என்று இந்தியா முன்னிலையில் உள்ளது. முதல் இன்னிங்ஸில் 6, இரண்டாம் இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகள் என மொத்தம் இப்போட்டியில் 9 விக்கெட்டுகளை வீழ்த்தி, இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்த வேகப்பந்து வீச்சாளர் பும்ரா ஆட்ட நாயகன் விருதை வென்றார்.
இந்த வெற்றியின் மூலம், இந்திய கிரிக்கெட் அணி, தனது 150வது சர்வதேச டெஸ்ட் வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்த மாபெரும் சாதனையை படைக்கும் ஐந்தாவது டெஸ்ட் அணி இந்தியா தான். அதுமட்டுமின்றி, முதன் முறையாக 'பாக்ஸிங் டே' டெஸ்ட் கிரிக்கெட்டையும் வென்று இந்தியா அசத்தியுள்ளது.
நான்காவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி, ஜன.3ம் தேதி சிட்னியில் தொடங்குகிறது. இப்போட்டியை இந்திய அணி டிரா செய்தாலே போதும், ஆஸ்திரேலிய மண்ணில் முதன் முறையாக டெஸ்ட் தொடரை வென்று வரலாற்றை இந்திய அணி மாற்றி எழுதும்.