இந்தியா, தென்னாப்பிரிக்கா இடையேயான இறுதி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்று ஒருநாள் தொடரை 5-1 என கைப்பற்றியுள்ளது.
செஞ்சூரியன் மைதானத்தில் இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகள் இடையேயான ஆறாவது மற்றும் இறுதி ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்று நடந்தது. இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி பீல்டிங்கை தேர்வு செய்ய, ஆம்லாவும், மார்க்ரமும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.
ஆம்லா 10 ரன்னிலும், மார்க்ரம் 24 ரன்னிலும் வெளியேற, அதிகம் எதிர்பார்க்கப்பட்ட டி வில்லியர்ஸ் 30 ரன்களில் சாஹல் பந்தில் போல்டாகி ஏமாற்றினார். இதன்பின், சோன்டோ மட்டும் அதிகபட்சமாக 54 ரன்கள் எடுக்க மற்ற வீரர்களை இந்திய பவுலர்கள் பெவிலியனுக்கு அனுப்பிக் கொண்டே இருந்தனர்.
முடிவில் அந்த அணி 46.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 204 ரன்கள் மட்டுமே எடுத்தது. இழப்பதற்கு ஒன்றுமில்லை என்று களமிறங்கிய தென்னாப்பிரிக்கா, இப்படியொரு இலக்கை நிர்ணயிக்கும் என யாரும் எதிர்பார்க்கவில்லை.
இதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித் மற்றும் தவானை லுங்கி ங்கிடி முறையே 18, 15 ரன்களில் வெளியேற்றினார். ஆனால், வழக்கம் போல இம்முறையும் சத வேட்டை நடத்திய கேப்டன் விராட் கோலி, ஒருநாள் போட்டிகளில் தனது 35வது சதத்தை நிறைவு செய்தார். இந்த ஒருநாள் தொடரில் விராட் கோலியின் மூன்றாவது சதம் இது. எப்போதாவது சதம் அடித்தால் பாராட்டலாம்.. எப்போதுமே சதம் அடித்தால் என்னவென்று சொல்வது? எனினும் வாழ்த்துகள் ரன் மெஷின் அவர்களே!.
இறுதியில், 32.1வது ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இந்திய அணி இலக்கை எட்டியது. இதன்மூலம், ஆறு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 5-1 என்ற கணக்கில் இந்திய அணி வென்று முதன் முறையாக தென்னாப்பிரிக்காவில் ஒருநாள் தொடரை கைப்பற்றியது. விராட் கோலி 129 ரன்களுடனும், ரஹானே 34 ரன்களுடனும் இறுதிவரை களத்தில் இருந்தனர்.
ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை விராட் கோலியே வென்றார்.
இதைத் தொடர்ந்து நாளை(பிப்.18) இரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் தொடங்கவுள்ளது. மாலை 6 மணிக்கு ஜோகன்னஸ்பெர்க்கில் இப்போட்டி தொடங்குகிறது.