WTC Final 2023 Ravichandran Ashwin - India bowling coach Paras Mhambrey Tamil News: இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2-வது உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி, இங்கிலாந்தில் உள்ள லண்டன் ஓவலில் நேற்று (புதன்கிழமை) மாலை 3 மணிக்கு தொடங்கியது. வருகிற ஞாயிற்றுகிழமை வரை நடைபெறும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்ய களமாடியது.
ஆஸ்திரேலிய அணியில் தொடக்க வீரர்களாக உஸ்மான் கவாஜா - டேவிட் வார்னர் ஜோடி களமிறங்கிய நிலையில், இதில் கவாஜா (0) ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட வார்னர் 43 ரன்னில் அவுட் ஆனார். அடுத்துவந்த லபுஷேன் 26 ரன்னில் அவுட் ஆனார். ஆஸ்திரேலிய அணி 76 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது.
பின்னர் ஜோடி சேர்ந்த ஸ்டீவ் ஸ்மித் - டிராவிஸ் ஹெட் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். அதிரடியாக ஆடிய டிராவிஸ் ஹெட் சதம் விளாசினார். ஸ்மித் அரைசதம் விளாசினார். இறுதியில் முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலியா 3 விக்கெட் இழப்பிற்கு 327 ரன்கள் குவித்துள்ளது. டிராவிஸ் ஹெட் 146 ரன்களுடனும், ஸ்டீவ் ஸ்மித் 95 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
அஸ்வின் இல்லை
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் இடம்பெறாத நிலையில், அவர் இடம்பெறாததது குறித்து சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கடும் விமர்சனம் செய்து வருகின்றனர். ஆஸ்திரேலிய பேட்டிங்கில் அதிக அளவில் இடதுகை பேட்ஸ்மென்கள் இருக்கும்போது இடதுகை பேட்ஸ்மென்களுக்கு எதிராக சிறப்பாக பந்து வீசும் அஸ்வினை அணியில் ஏன் சேர்க்கப்படவில்லை என்றும், டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் உலகின் நம்பர் 1 வீரராக உள்ள அவருக்கு இறுதிப்போட்டியில் விளையாட வாய்ப்பு வழங்கப்படாதது ஏன்? என்றும் கேள்வி எழுப்பி அணித் தேர்வு குழுவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
பயிற்சியாளர் விளக்கம்
இந்த நிலையில், அஸ்வினை ஆடும் லெவன் அணியில் சேர்க்காததற்கான காரணம் குறித்து இந்திய அணியின் பந்து வீச்சு பயிற்சியாளர் பரஸ் ஹம்ப்ரே விளக்கம் அளித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், 'அஸ்வின் போன்ற சாம்பியன் பந்துவீச்சாளரை அணியில் இருந்து நீக்குவது மிகவும் கடுமையான முடிவு. காலையில் ஆடுகளத்தின் தன்மை, சூழ்நிலையை பார்க்கும்போது கூடுதலாக வேகப்பந்து வீச்சாளர்கள் இருந்தால் சாதகமாக இருக்கும் என்று நினைத்தோம்.
கடந்த காலங்களில் இந்த முடிவு எங்களுக்கு சாதகமாக இருந்தது. வேகப்பந்து வீச்சாளர்கள் எங்களுக்கு சிறப்பாக செயல்பட்டுள்ளனர். ஆனால், கூடுதல் சுழற்பந்து வீச்சாளர்கள் இருந்தால் பலன் அளித்திருக்கும் என நீங்கள் நினைக்கலாம் ஆனால், ஆடுகள சூழ்நிலையை பார்த்து நாங்கள் இந்த முடிவு எடுத்தோம்.
குழு விவாதம் நடக்கும் போது, சில நாட்களுக்குள் பவுலர்களின் கலவை பற்றி பேசுவோம். ஆட்டத்திற்கு முன் மூன்று நான்கு நாட்கள் இங்கு பயிற்சி எடுத்தோம், விக்கெட்டைப் பார்த்து, வீரர்களுடன் உரையாடல் நடந்தது.
வீரர்களும் அதை (அணி சேர்க்கையின் முக்கியத்துவம்) புரிந்துகொள்கிறார்கள். இந்த ஆட்டத்தில் இந்தியா நிச்சயம் மீண்டு வர முடியும்.
இரண்டாவது புதிய பந்து கொஞ்சம் வேலை செய்தது. காலை அமர்வு முக்கியமானதாக இருக்கும். கடைசி இரண்டு செஷன்களில் நாங்கள் எதிர்பார்த்ததை விட விக்கெட் சிறப்பாக இருந்தது. நாம் இன்னும் சிறப்பாக பந்துவீசி இருக்கலாம். 12-13 ஓவர்களுக்குப் பிறகு, சிறப்பாக இல்லை. நாங்கள் விரும்பிய அளவுக்கு அதிகமான ரன்களை விட்டுக் கொடுத்ததாக உணர்கிறோம்'என்றார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.