/indian-express-tamil/media/media_files/2025/04/16/t6dYQDGCQfhvQH1yR5mt.jpg)
2030 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை நடத்த கனடா, நைஜீரியா மற்றும் இன்னும் இரண்டு நாடுகளுடன் இந்தியா போட்டா போட்டியில் உள்ளது.
24-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி 2030 ஆம் ஆண்டு நடைபெற உள்ளது. இந்தப் போட்டியை நடத்த இந்தியா விருப்பம் தெரிவித்து, காமன்வெல்த் விளையாட்டு கூட்டமைப்பிடம் அதிகாரப்பூர்வமாக விண்ணப்பித்துள்ளது. இதற்கான கடிதத்தை இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் பி.டி. உஷா சமர்ப்பித்துள்ளார். போட்டிகளை குஜராத்தின் அகமதாபாத்தில் நடத்த முன்மொழியப்பட்டுள்ளது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: India to tussle with Canada, Nigeria and two more countries to host Commonwealth Games 2030
காமன்வெல்த் விளையாட்டு போட்டியை நடத்துவதற்கான ஏலத்துக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் மார்ச் 31 ஆம் தேதி ஆகும். அதற்கு முன்பாக பி.டி. உஷாவிடமிருந்து கடிதம் பெறப்பட்டதாக காமன்வெல்த் விளையாட்டு கூட்டமைப்பு உறுதிப்படுத்தி உள்ளது. இந்நிலையில், 2030 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை நடத்த கனடா, நைஜீரியா மற்றும் இன்னும் இரண்டு நாடுகளுடன் இந்தியா போட்டா போட்டியில் உள்ளது.
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை எந்த நாடு எடுத்து நடத்த விரும்புகிறார்கள்? எனக் கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், பல ஆண்டுகளாக எந்த நாடும் அந்தக் கேள்விக்கு பதிலளிக்கக் கையை உயர்த்தவில்லை. இந்த நிலையில், தற்போது இந்தியா உட்பட குறைந்தது ஏழு நாடுகள் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியை நடத்த களத்தில் இறங்கியுள்ளதாக காமன்வெல்த் விளையாட்டு கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் எதிர்காலப் போட்டிகளை நடத்த ஆர்வமுள்ள ஏழு நாடுகளிடமிருந்து அதிகாரப்பூர்வ கடிதங்கள் பெறப்பட்டதாகவும், குறிப்பாக, கனடா மற்றும் நைஜீரியாவிடம் இருந்தும், பெயரிடப்படாத இன்னும் இரண்டு நாடுகளிலிருந்தும் கடிதங்களைப் பெற்றுள்ளதாகவும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிக்கான நிர்வாகக் குழு தெரிவித்துள்ளது. மேலும், 2034 ஆம் ஆண்டு நடைபெறும் போட்டியை நடத்த விரும்பும் இரண்டு நாடுகளில் நியூசிலாந்தும் ஒன்று என்றும் குறிப்பிட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் எதிர்காலம் நிச்சயமற்றதாகவே காணப்பட்டது. சமீபத்தில், ஆஸ்திரேலியாவின் விக்டோரியா நகரம் அடுத்த ஆண்டு, அதாவது 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதில் இருந்து விலகியது. ஏனெனில் ஆஸ்திரேலிய அரசு இந்த 12 நாள் விளையாட்டு போட்டிக்காக 7 பில்லியன் ஆஸ்திரேலிய டாலர்களை (4.8 பில்லியன் அமெரிக்க டாலர்கள்) செலவிட முன்வரவில்லை. போட்டிகளை நடத்துவதற்கான ஆரம்ப மதிப்பீடு 2.6 பில்லியன் ஆஸ்திரேலிய டாலர்கள் ஆகும்.
இதேபோல், நிதி சிக்கல்கள் காரணமாக தென் ஆப்பிரிக்காவின் டர்பன் நகரம் 2022 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை நடத்துதில் இருந்து விலகியது. அதனால், போட்டிகள் இங்கிலாந்தின் பர்மிங்காம் நகருக்கு மாற்றப்பட்டது. 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை நடத்த தயாராகி வந்த பர்மிங்காம் 2022 போட்டிகளை நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதையடுத்து, 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை நடத்த ஸ்காட்லாந்து முன்வந்தது. அதன்படி, 23-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள், ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் அடுத்தாண்டு ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 2, 2026 வரை நடைபெறுகிறது. இருப்பினும், இந்த முறை விளையாட்டுத் திட்டத்தில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
இது தொடர்பாக காமன்வெல்த் விளையாட்டு கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கையில், “காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கான செலவுகள் வரலாற்றுச் சிறப்புமிக்க செலவுகளிலிருந்து கணிசமாகக் குறைக்கப்படும். இதனால் போட்டிகளை நடத்தும் பாதையை பன்முகப்படுத்தவும், மேலும் புதிய நாடுகள் போட்டிகளை நடத்தவும் முடியும். விளையாட்டு மற்றும் தங்குமிடங்களுக்கு ஏற்கனவே உள்ள இடங்களைப் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதன் மூலமும், தொடர்ச்சியான விநியோக உகப்பாக்கம் மூலம் இது அடையப்படும், கூடுதல் உள்கட்டமைப்பு ஏற்கனவே உள்ள தேசிய மேம்பாட்டுத் திட்டங்களின் ஒரு பகுதியாக இல்லாவிட்டால், விளையாட்டுகளைப் பொருட்படுத்தாமல் இது நடக்கும்.” என்று அதில் கூறப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.