உலக சாம்பியன்ஷிப் ஆஃப் லெஜண்ட்ஸ் டி20 தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா சாம்பியன்ஸ் அணி பட்டம் வென்றது.
இங்கிலாந்தில் ஓய்வு பெற்ற முன்னாள் வீரர்கள் விளையாடும் உலக சாம்பியன்ஸ் ஆஃப் லெஜெண்ட்ஸ் 2024 டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வந்தது. இந்த தொடரின் இறுதிப் போட்டி இந்திய நேரப்படி நேற்று இரவு (சனிக்கிழமை) பர்மிங்காம் நகரில் நடைபெற்றது. இறுதிப் போட்டியில் இந்தியா சாம்பியன்ஸ்- பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணிகள் மோதின. இந்தியா-பாகிஸ்தான் என்பதால் போட்டி அனல் பறந்தது. ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எகிறன.
இந்நிலையில், யுவராஜ் சிங் தலைமையிலான இந்தியா சாம்பியன்ஸ் மற்றும் யூனிஸ் கான் தலைமையிலான பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணிகள் இறுதிப் போட்டியில் களம் கண்டன. முதலில் ஆடிய பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக சோயப் மாலிக் 36 பந்துகளில் 41 ரன்கள் சேர்த்தார். கம்ரான் அக்மல் 19 பந்துகளில் 24 ரன்களும், ஷான் மக்சூத் 12 பந்துகளில் 21 ரன்களும் எடுத்தனர். சோஹைல் தன்வீர் கடைசி ஓவரில் அதிரடியாக ஆடினார். அவர் 9 பந்துகளில் 19 ரன்கள் சேர்த்தார்.
இந்திய அணி சிறப்பாக பந்துவீசி ரன்களை கட்டுப்படுத்தின. இதையடுத்து 157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி அளித்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ராபின் உத்தப்பா 8 பந்துகளில் 10 ரன்களிலும், ரெய்னா 4 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
ஆங்கிலத்தில் படிக்க: India vs Pakistan: Ambati Rayudu, Yusuf Pathan drag India Champions to World Championship of Legends title
அதன் பின் அம்பத்தி ராயுடு மற்றும் குர்கீரத் சிங் ஜோடி சேர்ந்தனர். இந்த ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 60 ரன்கள் சேர்த்தனர். குர்கீரத் நிதானமாக ஆடி 33 பந்துகளில் 34 ரன்கள் சேர்த்தார். மறுபுறம் அம்பத்தி ராயுடு அதிரடி காட்டினார். இவர் 30 பந்துகளில் 50 ரன்கள் சேர்த்தார்.
பிறகு வந்த யூசுப் பதான் ரசிகர்களுக்கு விருந்தளித்தார். 16 பந்துகளில் 30 ரன்கள் சேர்த்து இந்தியாவை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார். இந்திய அணி 19.1 ஒவரில் 5 விக்கெட் இழந்து 159 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி உலக சாம்பியன்ஷிப் ஆஃப் லெஜண்ட்ஸ் 2024 பட்டத்தை வென்றது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“