உலகக் கோப்பை 2019 கிரிக்கெட் தொடரில், இந்திய அணியின் செயல்பாடு மெச்சத்தக்க வகையில் குறிப்பிட முடியாது என்றாலும், நிச்சயம் குறை சொல்வதற்கு அங்கு இடமே இல்லை. இங்கிலாந்துக்கு எதிரான போட்டியைத் தவிர, வேறு எந்தப் போட்டியிலும் இந்திய அணி சரண்டர் ஆகவில்லை. உலகக் கோப்பையில் இந்திய அணியின் பயணம் குறித்த ஒரு பார்வை இங்கே,
இந்தியா vs தென்னாப்பிரிக்கா
இந்தியாவின் உலகக் கோப்பை பயணம், இரண்டாவது வாரத்தில் இருந்து தொடங்கியது. சவுத்தாம்ப்டனில் நடைபெற்ற தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் போட்டியில், ஸ்பின்னுக்கு உதவும் களத்தில், முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணியை இந்தியா 227-9 என்று கட்டுப்படுத்தியது. பிறகு, சேஸிங் செய்த இந்திய அணி ரோஹித் ஷர்மாவின் 122 ரன்கள் உதவியுடன் 47.3 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 230 ரன்கள் எடுத்து வென்றது.
இந்தியா vs ஆஸ்திரேலியா</strong>
லண்டன் கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 352 ரன்கள் குவித்தது. ஷிகர் தவான் 117 ரன்கள் எடுத்தார். ரோஹித் ஷர்மா 57 ரன்களும், விராட் கோலி 82 ரன்களும் எடுத்து பக்க பலமாக நின்றனர். உலகக் கோப்பையில் சதம் அடித்து, தனது வருகையை அழுத்தமாக பதிவு செய்த ஷிகர் தவான், துரதிர்ஷ்டவசமான இப்போட்டியின் போது விரலில் காயம் ஏற்பட, உலகக் கோப்பையில் இருந்து விலகினார்.
இந்தியா vs நியூசிலாந்து
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இப்போட்டியில், மழை விடாமல் விளையாடியதால், இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்து அளிக்கப்பட்டது. பயிற்சிப் போட்டியில், நியூசிலாந்திடம் இந்தியா தோல்வி அடைந்திருந்ததால், இப்போட்டியின் மீது ரசிகர்களுக்கு அதிக எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், கடைசியில் எல்லாம் புஸ்ஸானது.
இந்தியா vs பாகிஸ்தான்
பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டம் என்றால் அதைப் பற்றி நாம் விளக்கத் தேவையில்லை. உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் இருந்த ஆட்டம் இது. இந்தியாவை தோற்கடித்த பிறகு, எப்படி கொண்டாடுவது என்று பாக்., வீரர்கள் ரிகர்சல் எடுத்து பார்த்தது தான் ஹைலைட். இப்போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 336 ரன்கள் எடுத்தது. ரோஹித் ஷர்மா 140 ரன்கள் விளாசினார். தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தான், சிறப்பான தொடக்கம் தந்தாலும், சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்த வண்ணம் இருந்தன. இடையில் மழை பெய்ய, டிஎல்எஸ் விதிப்படி இந்தியா 89 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
இந்தியா vs ஆப்கானிஸ்தான்</strong>
இந்திய அணிக்கும் சரி, இந்திய ரசிகர்களுக்கும் சரி, பிபி உச்சக்கட்டத்தில் எகிறிய ஆட்டம் இது. முதலில் ஆடிய இந்தியா 224 ரன்கள் மட்டும் எடுக்க, சேஸிங் செய்த ஆப்கானிஸ்தான் கடைசி ஓவர் வரை இந்தியாவை அச்சுறுத்தியது. டெத் ஓவர்களில் பும்ரா காட்டிய மெகா சிக்கனமும், கடைசி ஓவரில் ஷமி கைப்பற்றிய ஹாட்ரிக் விக்கெட்டும் இந்தியாவுக்கு போன உசுரை மீண்டும் கொண்டு வந்து சேர்த்தது.
இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ்
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 268 ரன்கள் எடுக்க, தொடர்ந்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 143 ரன்களில் அடங்கிப் போனது. 16 ரன்களை மட்டும் விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை ஷமி கைப்பற்ற இந்தியா மிக எளிதான வெற்றியை பதிவு செய்தது.
இந்தியா vs இங்கிலாந்து
உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு முதல் தோல்வியை பரிசளித்த போட்டி இது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து, 338 ரன்களை எடுத்தது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஜேசன் ராய் – ஜானி பேர்ஸ்டோ ஜோடி, இந்திய பந்துவீச்சாளர்களை நாலா பக்கமும் சிதறடித்தது. அவர்கள் அடித்த அடிக்கு, இங்கிலாந்து 400 ரன்களை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. தொடர்ந்து களமிறங்கிய இந்தியா, ரோஹித் ஷர்மா சதம் அடித்தும் தோல்வியைத் தழுவியது. இதனால், 31 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வி அடைந்தது.
இந்தியா vs வங்கதேசம்
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் தொடக்க வீரர்கள் ரோஹித் – ராகுல் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 180 ரன்கள் குவித்தது. ரோஹித் மீண்டும் சதம் அடித்தார். 315 ரன்கள் இலக்கை துரத்திய வங்கதேசம், 286 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்த வெற்றியின் மூலம், உலகக் கோப்பையில் தனது அரையிறுதி இருப்பை உறுதி செய்தது இந்தியா.
இந்தியா vs இலங்கை
முதலில் ஆடிய இலங்கை 264 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து சேஸிங் செய்த இந்திய அணியில், ரோஹித் ஷர்மா தனது ஐந்தவாது உலகக் கோப்பை சதத்தை பூர்த்தி செய்தார். இதன் மூலம், ஒரு உலகக் கோப்பையில் ஐந்து சதங்கள் அடித்த முதல் கிரிக்கெட் வீரர் எனும் புதிய உலக சாதனையை ரோஹித் படைக்க, இந்தியா மிக எளிதாக வென்றது. இலங்கையை இந்தியா வீழ்த்தியதாலும், தென்னாப்பிரிக்காவிடம் ஆஸ்திரேலியா தோற்றதாலும், லீக் சுற்றில் புள்ளிப்பட்டியலில் இந்திய அணி முதலிடம் பிடித்து அசத்தியது.
இந்தியா vs நியூசிலாந்து – முதல் அரையிறுதிப் போட்டி
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 46.1 ஓவரில் 211-5 ரன்கள் என்று எடுத்திருந்த போது, மழை குறுக்கிட்டதால், மறுநாள் மீண்டும் போட்டி நடைபெற்றது. அதாவது, நியூசிலாந்து முதல் நாளில் விட்ட இடத்தில் இருந்து ஆட்டத்தைத் தொடங்கியது. இரண்டாவது நாள் நடைபெற்ற போட்டியில், நியூஸி., 239 ரன்கள் எடுத்தது. 240 ரன்கள் இலக்கை துரத்திய இந்தியா, முதல் 3 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது. விரைவில் 6 விக்கெட்டுகளை இழந்து மெகா தோல்வியை எதிர்நோக்கிய இந்தியா ரவீந்திர ஜடேஜா – தோனி கூட்டணியில் அபார ஆட்டத்தால் மெல்ல மெல்ல இலக்கை நோக்கி பயணித்தது. இந்திய அணி 10 பந்துகளில் 23 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், கப்திலின் அபார த்ரோவால் தோனி ரன் அவுட் ஆக்கப்பட, இந்தியா 221 ரன்களில் கட்டுப்பட்டது. உலகக் கோப்பையில் இருந்தும் வெளியேறியது.
அரையிறுதிப் போட்டியோடு உலகக் கோப்பையில் இருந்து இந்திய அணி வெளியேறியதில் இருந்து, தோல்வி குறித்து விவாதிப்பதை விட, தோனியின் ஓய்வு குறித்தே அதிகம் கருத்துகள் பகிரப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.