2020 ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகளில், டோக்கியோவில் இன்று பிரிட்டன் அணிக்கு எதிரான ஹாக்கிப் போட்டியில் வென்றதன் மூலம், இந்திய ஆண்கள் ஹாக்கி அணி அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. ஒலிம்பிக்கில் 41 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய ஆண்கள் ஹாக்கி அணி அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது.
பிரிட்டன் அணிக்கு எதிரான காலிறுதிப் போட்டியில், 3-1 என்ற கோல் கணக்கில் பிரிட்டன் அணியை வீழ்த்தியுள்ளது இந்திய ஆண்கள் ஹாக்கி அணி. இந்திய தரப்பில் ஹர்திக் சிங், தில்பிரீத் சிங், குர்ஜந்த் சிங் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். ஒலிம்பிக்கில் பிரிட்டன் அணியை 49 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணி வீழ்த்தியுள்ளது.
இந்திய அணி அரையிறுதிப் போட்டியில் உலக சாம்பியனான பெல்ஜியம் அணியை எதிர்கொள்கிறது. காலிறுதிப் போட்டியில் உலக தரவரிசையில் 4 வது இடம் வகிக்கும் இந்திய அணி, 5 ஆம் நிலை அணியான பிரிட்டன் அணியை வீழ்த்தியுள்ளது. லீக் சுற்றில் ‘ஏ’ பிரிவில் இடம் பிடித்த இந்திய அணி, ஆஸ்திரேலியாவை தவிர்த்து ஒலிம்பிக் சாம்பியன் அர்ஜென்டினா உள்ளிட்ட 4 அணிகளையும் வீழ்த்தியது.
இன்றைய ஆட்டத்தில் இந்திய வீரர்கள் சிறப்பாகச் செயல்பட்டனர். ஆட்டத்தின் 3-வது நிமிடத்தில் பிரிட்டன் அணியினருக்கு கிடைத்த பெனால்டி கார்னரை கோலாக்கவிடாமல் இந்திய அணியினர் தடுத்தனர். 7-வது நிமிடத்தில் சிம்ரன்ஜித் சிங்கிடம் இருந்து கிடைத்த பாஸை சரியாகப் பயன்படுத்திய தில்பிரித் சிங் பிரிட்டன் அணியினரை ஏமாற்றி அணிக்கு முதல் கோலைப் பெற்றுக் கொடுத்தார்.
2-வது கால்பகுதிநேரம் தொடங்கிய உடனே, பிரிட்டன் கோல்கீப்பர் பெய்னேவை ஏமாற்றி, இந்திய வீரர் குர்ஜந்த் சிங் கோல் அடித்து இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெறச் செய்தார்.
3-வது கால்பகுதி நேரத்தில் 45-வது நிமிடத்தில் பிரிட்டன் வீரர் பிலிப் ரோப்பர் அணிக்கு முதல் கோலைப் பெற்றுக் கொடுத்தார்.
4-வது மற்றும் கடைசிக் கால்பகுதி ஆட்டத்தில் இரு அணிகளும் கடுமையாக மோதின. இருப்பினும், 47-வது நிமிடத்தில் பிரிட்டன் அணிக்கு பெனால்டி கார்னர் வாய்ப்புக் கிடைத்தும் அணி வீரர்களுக்கு இடையே சரியான புரிதல் இல்லாததால் அந்த வாய்ப்பை சொதப்பினர்.
54-வது நிமிடத்தில் இந்திய அணியின் கேப்டன் மன்பிரித் சிங்கிற்கு நடுவர் மஞ்சள் அட்டை வழங்கி எச்சரித்தார். 57-வது நிமிடத்தில் இந்திய வீரர் நிலாகந்தா சர்மா அளித்த பாஸை அருமையாகப் பயன்படுத்தி பந்தை வேகமாக கடத்திச் சென்ற இந்திய வீரர் ஹர்திக் சிங் அணிக்கு 3-வது கோலைப் பெற்றுக் கொடுத்தார். இதனால் இந்திய அணி 3-1 என்ற கோல்கணக்கில் முன்னிலை பெற்றது.
ஆனால் ஆட்ட இறுதிவரை பிரிட்டன் அணி மேற்கொண்டு கோல் அடிக்க முடியாததையடுத்து, இந்திய அணி 3-1 என்ற கோல்கணக்கில் வென்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.