India’s ICC Champions Trophy 2025 Squad Announcement Live Updates: 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தானில் வருகிற பிப்ரவரி 19 ஆம் தேதி முதல் மார்ச் 9 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் பங்கேற்கும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்காளதேசம் அணிகளும், 'பி' பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பெற்றுள்ளன.
ஆங்கிலத்தில் படிக்கவும்: India’s ICC Champions Trophy 2025 Squad Announcement Live Updates
பிப்ரவரி 19 ஆம் தேதி கராச்சியில் தொடங்கும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பாகிஸ்தான் அணி, நியூசிலாந்தை சந்திக்கிறது. இதில் இந்திய அணிக்குரிய ஆட்டங்களும், முதலாவது அரையிறுதியும் துபாயில் நடைபெற உள்ளன. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த தொடரின் முக்கியமான இந்தியா- பாகிஸ்தான் இடையிலான ஆட்டம் பிப்ரவரி 23 ஆம் தேதி அமீரகத்தில் உள்ள துபாயில் நடக்க உள்ளது. இந்தப் போட்டிக்கு முன் பிப்ரவரி 20 ஆம் தேதி வங்கதேசத்தையும், மார்ச் 2 ஆம் தேதி நியூசிலாந்தையும் இந்திய அணி எதிர்கொள்கிறது.
இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு
இந்நிலையில், ஐ.சி.சி சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான அணிகளை கடந்த 12 ஆம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என ஐ.சி.சி. காலக்கெடு விதித்திருந்தது. ஆனால், பி.சி.சி.ஐ இந்திய அணியை அறிவிக்க ஐ.சி.சி.-யிடம் கூடுதல் கால அவகாசம் கேட்டிருந்தது. இதையடுத்து, சாம்பியன்ஸ் டிராபி தொடர் மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர்களுக்கான இந்திய அணி இன்று பிற்பகல் 12.30 மணி அளவில் அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகியது.
ஆனால், அணி தேர்வு கூட்டம் நிறைவு பெற கால தாமதம் ஏற்பட்டது. இதனால் அணி உரிய நேரத்தில் அறிவிக்கப்படவில்லை. கிட்டத்தட்ட 2 மணி நேர தாமதத்திற்கு பிறகு அறிவிக்கப்பட்டது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: India squad for ICC Champions Trophy announced
இந்நிலையில், ஐ.சி.சி சாம்பியன்ஸ் டிராபி தொடர் மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர்களுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. மும்பையில் உள்ள பி.சி.சி.ஐ தலைமையகத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் மூத்த தேர்வுக் குழுத் தலைவர் அஜித் அகர்கர் ஆகியோர் இணைந்து அணியை அறிவித்தனர். இந்த அணிகளுக்கு ரோகித் சர்மா கேப்டனாகவும், சுப்மன் கில் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்திய அணியில் பும்ரா, ஷமி, குலதீப், ஸ்ரேயாஸ் ஆகியோர் இடம் பிடித்துள்ளார்கள். அதே சமயம் விஜய் ஹசாரே தொடரில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கருண் நாயருக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. மேலும், டி20 அணியில் தொடக்க வீரராக களம் இறங்கி வரும் சஞ்சு சாம்சனுக்கும் இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை.
இங்கிலாந்து தொடர் மற்றும் சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணி:
ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில் (துணை கேப்டன்), விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல், ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிஷப் பண்ட், ஜடேஜா