India vs England, 5th Test, Dharamsala: இந்திய மண்ணில் சுற்றுப்பயணம் செய்து வரும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில், ஐதராபாத்தில் நடந்த தொடக்க டெஸ்டில் இங்கிலாந்து 28 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதற்கு பதிலடி கொடுத்த இந்தியா விசாகப்பட்டினம், ராஜ்கோட்டில் நடந்த அடுத்த இரு டெஸ்டுகளில் வெற்றியைப் பெற்றது.
இந்நிலையில், ராஞ்சியில் 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம், இந்திய அணி 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி அசத்தி உள்ளது. இந்த நிலையில், இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இமாச்சல் பிரதேசத்தில் உள்ள தர்மசாலாவில் மார்ச் 7 ஆம் முதல் தொடங்கி நடைபெற உள்ளது.
2 முக்கிய வீரர்களுக்கு ஓய்வு
இந்நிலையில், இங்கிலாந்து அணிக்கு எதிரான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இருந்து இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம் பணிச்சுமை மேலாண்மை காரணமாக இரண்டு முக்கிய வீரர்களுக்கு ஓய்வு அளிக்க உள்ளது. அதில் ஒருவர் பேட்ஸ்மேன் என்றும், மற்றொருவர் பந்து வீச்சாளர் தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய அணி நிர்வாகம் 2 முக்கிய வீரர்களுக்கு ஓய்வு அளிக்க திட்டமிட்டுள்ளது. ஆனால், அணி நிர்வாகம் மற்றும் தேர்வாளர்களால் பரிசீலிக்கப்படும் கிரிக்கெட் வீரர்களின் பெயர்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.
அணிக்கு திரும்பும் பும்ரா
இதுஒருபுறமிருக்க, தரம்சாலாவில் நடக்கும் போட்டிக்கு வேகப்பந்து வீச்சாளரமான ஜஸ்பிரித் பும்ரா ஆடும் லெவன் அணியில் திரும்புவதற்கு தயாராக இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. டி20 உலகக் கோப்பையை மனதில் வைத்து ராஞ்சியில் நடந்த நான்காவது டெஸ்ட் போட்டியில் இருந்து அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது.
ராகுலுக்கு தொடரும் ஓய்வு
இதற்கிடையில், காயம் காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் கடைசி மூன்று டெஸ்ட் போட்டிகளைத் தவறவிட்ட இந்திய மிடில் ஆடர் வீரர் கே.எல் ராகுல், தரம்சாலாவில் நடக்கும் ஆட்டத்தையும் தவற விடுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் டெஸ்டில் ஏற்பட்ட குவாட்ரைசெப்ஸ் காயத்தில் இருந்து ராகுல் முழுமையாக குணமடையவில்லை என்றும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) அவரை நிபுணர் கருத்துக்காக லண்டனுக்கு அனுப்பியுள்ளது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
3வது டெஸ்ட் போட்டியில் விளையாட ராகுலுக்கு '90 சதவீதம்' அனுமதி கிடைத்ததாக கூறப்படுகிறது, ஆனால் அணி நிர்வாகமும் தேசிய கிரிக்கெட் அகாடமியும் (என்.சி.ஏ - NCA) அவரது நிலைமையை மறுபரிசீலனை செய்ய முடிவு செய்தன. டி20 உலகக் கோப்பையை மனதில் வைத்து அவர் மீண்டு வருவதற்கு தேர்வாளர்கள் கூடுதல் அவகாசம் வழங்கலாம் என்று தெரிகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“