இலங்கைக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 213 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியுள்ள நிலையில், முதல் முறையாக அனைத்து விக்கெட்களையும் சுழற்பந்துவீச்சுக்கு பறிகொடுத்துள்ள சம்பவம் நடந்துள்ளது.
ஆசியக் கோப்பையின் சூப்பர் 4 கட்டத்தில் இந்தியா – இலங்கை அணிகள் இன்று மோதின. இந்த ஆட்டத்தில் இந்திய அணி 213 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதில் இந்திய அணி அனைத்து விக்கெட்களையும் முதல்முறையாக சுழலுக்கு பறிகொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இன்றையப் போட்டியில், இலங்கை சுழற்பந்துவீச்சாளர் துனித் வெல்லலகே 5 விக்கெட்களை வீழ்த்தினார். துனித் 10 ஓவர்கள் வீசி 40 ரன்கள் விட்டுக் கொடுத்தார். கில், ரோகித், கோலி ஆகிய டாப் பேட்ஸ்மேன்களை வீழ்த்திய துனித், மிடில் ஆர்டரில் ராகுல், பாண்டியா விக்கெட்களையும் வீழ்த்தினார்.
மற்றொரு சுழற்பந்துவீச்சாளர் அசலங்கா 4 விக்கெட்களை வீழ்த்தினார். அதில் அசலங்கா 9 ஓவர்கள் வீசி 18 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். அதில் ஒரு ஓவர் மெயிடன். இஷான் கிஷன், ரவீந்திர ஜடேஜா மற்றும் குல்தீப் ஆகியோரது விக்கெட்களை அசலங்கா வீழ்த்தினார்.
மீதமுள்ள ஒரு விக்கெட்டை தீக்ஷனா வீழ்த்தினார். சுழற்பந்துவீச்சாளரான தீக்ஷனா, அக்சர் படேல் விக்கெட்டை வீழ்த்தினார். இலங்கை சுழலில் சிக்கிய இந்திய அணி முதல்முறையாக அனைத்து விக்கெட்களையும் சுழற்பந்துவீச்சுக்கு இழந்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“