இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட தொடரில் சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிராக ஆடி வருகிறது. இதில், பெங்களூரு நகரில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்திடம் தோல்வியுற்றது. தற்போது புனே நகரில் இவ்விரு அணிகள் மோதும் 2-வது போட்டி நடைபெற்று வருகிறது.
ஏற்கனவே தொடரில் 1-0 என்கிற கணக்கில் முன்னிலை வகிக்கும் நியூசிலாந்து, இந்தப் போட்டியிலும் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. முதல் இன்னிங்சில் 259 ரன்கள் குவித்த அந்த அணி, இந்தியாவை 156 ரன்களுக்குள் சுருட்டியது. தற்போது 2வது இன்னிங்சில் ஆடி வரும் நியூசிலாந்து 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 198 ரன்கள் சேர்த்து, இந்தியாவை விட 301 ரன்கள் முன்னிலை வகித்து வருகிறது.
ஏறக்குறைய வெற்றியை நோக்கி நடைபோட்டு வரும் நியூசிலாந்து, இந்தியாவை கடும் இக்கட்டான சூழலுக்குள் தள்ளிவிட்டுள்ளது. இந்தத் தொடரை அவர்கள் கைப்பற்றும் பட்சத்தில், இந்திய மண்ணில் நியூசிலாந்து வெல்லும் முதல் டெஸ்ட் தொடராக இது அமையும். இதன் மூலம் அவர்கள் வரலாற்றுச் சாதனை படைப்பார்கள்.
2012 ஆம் ஆண்டுக்கு பிறகு, தொடர்ந்து 12 ஆண்டுகளாக சொந்த மண்ணில் இந்திய அணி ஒரு டெஸ்ட் தொடரில் கூட தோல்வியை சந்திக்காமல் பயணித்து வருகிறது. தொடர்ச்சியாக 18 டெஸ்ட் தொடர்களில் இந்தியா வென்று வெற்றி நடை போட்டு வருகிறது. அதற்கு முற்றுப் புள்ளி வைக்கும் திட்டத்தில் இருக்கிறது நியூசிலாந்து.
தற்போது நியூசிலாந்து பவுலர்களுக்கு எதிராக இந்திய பேட்ஸ்மேன்கள் திணறி வரும் நிலையில், இந்தியாவின் தடுப்பாட்ட நாயகனான சேதேஷ்வர் புஜாராவை மீண்டும் அணியில் சேர்க்க வேண்டும் என்று ரசிகர்கள் தெரிவித்து வருகிறார்கள். புஜாரா தற்போது நடைபெற்று வரும் 2024-25 ஆண்டுக்கான ரஞ்சி டிராபியில் சவுராஷ்டிரா அணிக்காக சத்தீஸ்கருக்கு எதிராக இரட்டை சதம் அடித்து மிரட்டினார். முதல் தர போட்டியில் புஜாராவுக்கு இது 18-வது இரட்டை சதம் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“