IND vs AUS Nagpur Test: இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 4 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் வரும் 9-ம் தேதி நாக்பூரில் நடைபெற உள்ளது. இந்த போட்டிக்காக இரு அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.
இந்த தொடருக்கான இந்திய அணியை கேப்டன் ரோகித் வழிநடத்துகிறார். கே.எல். ராகுல் துணை கேப்டனாக செயல்படுகிறார். கார் விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வரும் விக்கெட் கீப்பர் வீரர் ரிஷப் பந்த் மற்றும் காயத்தில் இருந்து மீண்டு வரும் வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா இல்லமல் இம்முறை இந்தியா பார்டர் - கவாஸ்கர் கோப்பை போட்டியில் களமாடுகிறது. தவிர, ஷுப்மான் கில், கே.எஸ்.பாரத், ஜெய்தேவ் உனட்கட் மற்றும் குல்தீப் யாதவ் ஆகிய வீரர்களின் வருகை டிராவிட்டிற்கு பெரிய தலைவலியை கொடுத்துள்ளது.
மேலும், ரோகித் சர்மாவுடன் ஓப்பன் செய்வது யார்? பண்ட்டுக்கு பதில் விக்கெட் கீப்பராக செயல்படுப்போவது யார்? ஷுப்மான் கில் எந்த இடத்திற்கு பொருந்துகிறார்? வேகப்பந்துவீச்சுக்கு உமேஷ் யாதவா அல்லது ஜெய்தேவ் உனத்கட்டா? சுழற்பந்துவீச்சு அக்சர் படேலா அல்லது குல்தீப் யாதவா? என அடுக்கடுக்கான கேள்விகள் எழுந்துள்ளன.
ரோகித் சர்மாவுடன் ஓப்பன் செய்வது யார்?
இது இந்திய அணியை கவலையடையச் செய்யும் ஒரு பெரிய கேள்வியாக உள்ளது. கேஎல் ராகுல் முதன்மையான தொடக்க ஆட்டக்காரராக இருந்தாலும், ஷுப்மான் கில்லின் தற்போதைய ஃபார்ம் எதிரணிகளை அச்சுறுத்தும் வகையிலும், தேர்வாளர்களுக்கு தலைவலி கொடுக்கும் அளவிற்குக்கும் உள்ளது.
சமீபத்தில் சொந்த மண்ணில் இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான நடந்த தொடர்களில் சதம், இரட்டை சதம் என அடித்து மிரட்டி இருந்தார் கில். இதனால் அவரை 3 வடிவங்களிலும் தொடர்ந்து விளையாட அணி நிர்வாகம் ஆதரவு கொடுத்துள்ளது. ஏற்கனவே டெஸ்ட்டில் சதம் விளாசியுள்ள அவர் 3 வடிவங்களிலும் சதம் அடித்த 5வது இந்திய வீரராக உள்ளார். எனவே, தொடக்க வீரர் இடத்தில் அவருக்கான வாய்ப்பே அதிகம். ராகுல் ஒருநாள் தொடர்களில் போல் மிடில்-ஆடரில் களமிறக்கப்படலாம்.
டிசம்பர் 2022 முதல் சுப்மான் கில்
டெஸ்ட்: 2, இன்னிங்ஸ்: 4, ரன்கள்: 157, சதம்: 1, சராசரி: 39.25
ஒருநாள் போட்டிகள்: 6, ரன்கள்: 567, சராசரி: 113.4, சதம்: 3 (இரட்டை சதம் உட்பட), அரைசதம்: 1
டி20: 6, ரன்கள்: 202, சராசரி: 40.40, சதம் 1, ஸ்டரைக் ரேட்: 165.57
ரிஷப் பண்ட் இடத்தில் யாருக்கு வாய்ப்பு?
விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்டுக்கு பதில் கே.எஸ்.பாரத் களமாட வாய்ப்புள்ளது. நீண்ட நாள்களாக காத்திருக்கும் அவர் இன்னும் இந்தியாவுக்காக அதிகாரப்பூர்வமாக அறிமுகமாகவில்லை. கேஎல் ராகுலிடம் முதல் டெஸ்டுக்கான கீப்பிங் கடமையை ஒப்படைக்க இந்தியா முடிவு செய்தால், அவர் தனது அறிமுகதிற்கு காத்திருக்க வேண்டியிருக்கும். இருப்பினும், ராகுல் இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் முழுநேர விக்கெட் கீப்பராக மாற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
விக்கெட் கீப்பர் விருப்பங்கள்:
கேஎல் ராகுல்
இஷான் கிஷன்
கேஎஸ் பாரத்
உமேஷ் யாதவ் அல்லது ஜெய்தேவ் உனத்கட்?
ஜஸ்பிரித் பும்ரா இல்லாத நிலையில், உமேஷ் யாதவ் மட்டுமே ஒரு உண்மையான ஸ்விங் பந்துவீச்சாளராக இருக்கிறார். அவரது வேகம், துல்லியம் மற்றும் சிவப்பு SG பந்தில் அதை நன்றாக ஸ்விங் செய்வார். முகமது ஷமியும் இதேபோன்ற வேகப்பந்து வீச்சாளர்தான். எனினும், இந்தியாவின் வேகப்பந்து வீச்சு வரிசை சிராஜ்-ஷமி தலைமை தாங்குவார்கள் என்று கூறப்படுகிறது. ஆனால் மூன்றாவது சீமர் யார்? என்பது இன்னும் முடிவாகவில்லை.
மறுபுறம் அணியில் ஜெய்தேவ் உனட்கர் மட்டுமே இடது கை வேகப்பந்து வீச்சாளராக உள்ளார். உள்நாட்டு தொடரில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தியிருக்கும் அவர் அணிக்கு முக்கிய விருப்பமாகவும் இருப்பார்.
அக்சர் படேல் அல்லது குல்தீப் யாதவ்?
மற்றொரு விவாத பொருளாக அக்சர் படேல் மற்றும் குல்தீப் யாதவ் உள்ளனர். இருப்பினும், நாக்பூர் ஒரு ஸ்போர்ட்டி ஆடுகளத்தை வழங்கினால் இருவரும் விளையாட வாய்ப்பில்லை. அது ஒரு ரேங்க்-டர்னராக மாறினால், ஒரு சீமரின் செலவில் அக்சர் படேலுக்கு வாய்ப்பு கிடைக்கும். பச்சை நிறத்துடன் வந்தால், இந்தியா குறைவான பேட்டிங்கில் இறங்க வாய்ப்புள்ளது.
பார்டர் - கவாஸ்கர் கோப்பை: இந்தியா உத்தேச லெவன்:
ரோகித் சர்மா, சுப்மன் கில், சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி, கேஎல் ராகுல், கேஎஸ் பாரத் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா
ரவிச்சந்திரன் அஸ்வின், உமேஷ் யாதவ் அல்லது ஜெய்தேவ் உனட்கட், முகமது ஷமி, முகமது சிராஜ்
இந்திய அணி வீரர்கள் பட்டியல்:
ரோஹித் சர்மா (கேப்டன்), கே.எல். ராகுல் (துணை கேப்டன்), ஷுப்மன் கில், சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி, கே.எஸ். பாரத் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷான் (விக்கெட் கீப்பர்), ஆர். அஷ்வின், அக்சர் படேல், குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா, முகமது. ஷமி, முகமது. சிராஜ், உமேஷ் யாதவ், ஜெய்தேவ் உனட்கட், சூர்யகுமார் யாதவ்.
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.