India vs Thailand Highlights, Women's Kabaddi Asian-Games 2023 Tamil News: ஆசிய விளையாட்டு போட்டிகள் சீனாவின் ஹாங்சோ நகரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கபடி போட்டிகள் கடந்த திங்கள்கிழமை (அக்டோபர் 2 ஆம் தேதி) முதல் தொடங்கி நடந்து வருகிறது. இந்த கபடி போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்கள் இரு அணிகளும் மோதுகின்றன.
ஆண்களுக்கான போட்டியில் 7 அணிகளும், பெண்கள் பிரிவில் 9 அணிகளும் பங்கேற்க உள்ளன. இந்த அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஆண்களுக்கான 'ஏ' பிரிவில் இந்தியா, ஜப்பான், வங்கதேசம், தாய்லாந்து, சீன தைபே ஆகிய அணிகளும், 'பி' பிரிவில் ஈரான், பாகிஸ்தான், கொரியா குடியரசு, மலேசியா ஆகிய அணிகளும் உள்ளன. பெண்களுக்கான 'ஏ' பிரிவில் இந்தியா, சீன தைபே, தாய்லாந்து, கொரியா குடியரசு ஆகிய அணிகளும், 'பி' பிரிவில் வங்கதேசம், நேபாளம், ஈரான் அணிகளும் உள்ளன.
இந்த அணிகள் லீக் சுற்றில் ரவுண்ட்-ராபின் முறையில் ஒவ்வொரு அணியும் ஒருமுறை நேருக்கு நேர் சந்திக்கும். ஒவ்வொரு ஆடவர் போட்டியின் கால அளவு 45 நிமிடங்களாகவும், பெண்களுக்கான போட்டிகள் 35 நிமிடங்களாகவும் இருக்கும். லீக் சுற்று முடிவில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். இந்தப் போட்டிகளில் வெற்றி பெறுபவர்கள் இறுதிப் போட்டியில் களமிறங்குவார்கள், தோல்வியுற்றவர்கள் வெண்கலப் பதக்கத்தைப் பெறுவார்கள். ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகளுக்கான இரண்டு இறுதிப் போட்டிகளும் 7 ஆம் தேதி நடைபெற உள்ளது.
ஆசிய விளையாட்டு கபடியில் இந்திய ஆண்கள் 7 முறை பட்டத்தை வென்று ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அதேவேளையில், இந்திய பெண்கள் கபடி அணி 2010 முதல் இதுவரை இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றுள்ளது.
தாய்லாந்தை புரட்டி எடுத்த இந்தியா
இந்நிலையில், இன்று பிற்பகல் நடந்த பெண்களுக்கான கபடி குரூப் ஏ பிரிவு போட்டியில் இந்தியா - தாய்லாந்து அணிகள் மோதின. மிகவும் பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் இந்திய அணி 32-9 என்கிற கணக்கில் முன்னிலையில் இருந்தது.
தாய்லாந்தை புரட்டி எடுத்த இந்திய டிஃபண்டர்கள் 4 ஆல்-அவுட்களை எடுத்தார்கள் மற்றும் ரெய்டர்கள் 5 போனஸ் புள்ளிகளைப் பெற்றனர். இறுதியில், ஆட்ட நேர முடிவில் தாய்லாந்தை 54-22 என்ற புள்ளிக்கணக்கில் இந்தியா வீழ்த்தியது.
இந்த வெற்றியின் மூலம் ரிது நேகி தலைமையிலான இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. மேலும் ஒரு பதக்கத்தையும் உறுதி செய்துள்ளது. இந்தியா அரையிறுதியில் நேபாளத்தை எதிர்கொள்கிறது. இப்போட்டியானது நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 6) காலை 7 மணிக்கு நடக்கிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.