India Schedule For ICC Men’s T20 World Cup 2022 Tamil News: 7-வது டி 20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் வருகிற அக்டோபர் 16-ம் தேதி முதல் நவம்பர் 13-ம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. மொத்தம் 16 நாடுகள் பங்கேற்கவுள்ள இந்தத் தொடரில், நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 அணிகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாட இருக்கின்றன.
முன்னதாக நடந்த ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில், ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி, தொடர்ச்சியாக பெற்ற தோல்விகளால் சூப்பர் 4 சுற்றுடன் வெளியேறியது. இதனையடுத்து, எதிர் வரும் டி20 உலகக்கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடுவதில் இந்திய அணி கவனம் செலுத்தி வருகிறது.
2 குழுக்கள் - சூப்பர் 12 ஆட்டங்கள்…
இந்நிலையில், ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடர் அக்டோபர் 16ஆம் தேதி தகுதிச் சுற்றுடன் தொடங்குகிறது. இந்த சுற்றில் தகுதி பெறும் 2 அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறும். சூப்பர் 12 சுற்றில், அணிகள் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு, குரூப் 1ல் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து போன்ற அணிகளும், குரூப் 2-ல் இந்தியா, பாகிஸ்தான், வங்க தேசம் மற்றும் தென்னாப்பிரிக்கா போன்ற அணிகளும் இடம்பிடித்துள்ளன.
சூப்பர் 12 சுற்றின் போது, ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் ஒரு போட்டியில் விளையாடும். எனவே, ஒவ்வொரு அணியும் மொத்தம் 5 போட்டிகளில் விளையாடும். இந்த சுற்றின் முடிவில் புள்ளிகள் பட்டியலில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும். அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறுபவர்கள் இறுதிப் போட்டியில் மோதுவார்கள்.
மீண்டும் மோதும் இந்தியா - பாகிஸ்தான் அணிகள்
நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய கிரிக்கெட் அணி ஏற்கனவே சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறியுள்ளது. எனவே, இந்திய அணி வருகிற அக்டோபர் 23-ம் தேதி பாகிஸ்தானுக்கு எதிராக தனது தொடக்க ஆட்டத்தில் விளையாடுகிறது. ஏற்கனவே நடந்த ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி அதன் முதல் தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானை எதிர்கொண்டது. அந்த ஆட்டத்தில் இந்திய அணி அசத்தல் வெற்றி பெற்றது. தொடர்ந்து நடந்த சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தானிடம் இந்தியா தோல்வி கண்டது. அதன்பிறகு இலங்கையிடனான ஆட்டத்தில் தோல்வியுற்ற இந்தியா தொடரில் இருந்து வெளியேறும் நிலை ஏற்பட்டது.
இதேபோல், கடந்த ஆண்டு ஐக்கிய அரபு மண்ணில் நடந்த ஆட்டத்தில் இந்திய அணி அதன் முதல் தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானிடம் படுதோல்வி அடைந்தது. இதனால் இந்தியா தகுதிச் சுற்றுடன் நாடு திரும்பியது. எனவே, இந்த தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்துமா? என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
டி 20 உலகக் கோப்பையில் இந்தியா மோதும் ஆட்டங்கள் பின்வருமாறு:
அக்டோபர் 23 - இந்தியா vs பாகிஸ்தான் (16வது போட்டி, சூப்பர் 12) மெல்போர்ன் கிரிக்கெட் மைதானம், மெல்போர்ன் பிற்பகல் 1:30
அக்டோபர் 27 - இந்தியா vs A2, (23வது போட்டி, சூப்பர் 12) சிட்னி கிரிக்கெட் மைதானம், சிட்னி மதியம் 12:30
அக்டோபர் 30 - இந்தியா vs தென்னாப்பிரிக்கா, (30வது போட்டி, சூப்பர் 12) பெர்த் ஸ்டேடியம், பெர்த் மாலை 4:30
நவம்பர் 2 - இந்தியா vs பங்களாதேஷ், (35வது போட்டி, சூப்பர் 12) அடிலெய்டு ஓவல், அடிலெய்டு பிற்பகல் 1:30
நவம்பர் 6 - இந்தியா vs B1, (42வது போட்டி, சூப்பர் 12) மெல்போர்ன் கிரிக்கெட் மைதானம், மெல்போர்ன் பிற்பகல் 1:30
15 பேர் கொண்ட இந்திய அணி
இதற்கிடையில், இந்த உலக கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை நேற்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அறிவித்தது. அதன்படி, ரோகித் ஷர்மா தலைமையிலான இந்திய அணியில் கேஎல் ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். ஆசிய கோப்பை தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டு இருந்த நட்சத்திர பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா அணிக்கு திரும்பியுள்ளார். தமிழக வீரர்களான தினேஷ் கார்த்திக் மற்றும் ரவிச்சந்திரன் அஷ்வின் ஆகியோருக்கும் இடம் கிடைத்துள்ளது.
டி-20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி வீரர்கள் பட்டியல் பின்வருமாறு:
ரோகித் ஷர்மா (கேப்டன்), கேஎல் ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவிச்சந்திரன் அஷ்வின், சாஹல், அக்சர் படேல், ஜஸ்பிரித் பும்ரா, புவனேஸ்வர் குமார், ஹர்ஷல் படேல், அர்ஷ்தீப் சிங்.
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.