ஆசிய கிரிக்கெட் கவுன்சிலில் 2025 ஆண்டுக்கான ஆடவர் ஆசியக் கோப்பை இந்தியா நடத்துவதாக அறிவித்த நிலையில், 34 வருட நீண்ட இடைவெளிக்குப் பிறகு, ஆடவர் ஆசியக் கோப்பை மீண்டும் இந்திய மண்ணில் நடைபெற உள்ளது.
2024-27 சுழற்சிக்கான ஸ்பான்சர்ஷிப் உரிமையைக் கோருவதற்கான அழைப்பை ஆசிய கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டது. அதில், ஆடவர் ஆசிய கோப்பை 2025 மற்றும் 2027 பதிப்புகள் உரிமை வழங்கப்படும் என்றும், 2025 மற்றும் 2027 பதிப்புகள் இந்தியா மற்றும் வங்கதேசத்தில் நடக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இருப்பினும், 2026 மகளிர் ஆசியக் கோப்பை, 2025, 2026 மற்றும் 2027 ஆண்கள் யு-19 ஆசிய கோப்பை மற்றும் ஆண்கள் வளர்ந்து வரும் அணி ஆசிய கோப்பை, அத்துடன் 2025 மற்றும் 2027 பெண்கள் வளரும் அணி ஆசிய கோப்பை போட்டிகள் நடைபெறும் இடங்கள் பற்றி அதில் குறிப்பிடப்படவில்லை.
2025 ஆம் ஆண்டு ஆடவர் ஆசிய கோப்பை டி20 வடிவத்தில் விளையாடப்படும் என்றும், 2027 ஆசிய கோப்பை ஒருநாள் போட்டியாக இருக்கும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐ.சி.சி உலகக் கோப்பை நடப்பதை ஒட்டி ஆசிய கோப்பை அதற்கு ஏற்ப வடிவத்தில் ஆட முன்னுரிமை அளிக்கப்படும் என 2016-ல் முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி, 2026ல் டி20 உலகக் கோப்பை நடப்பதால் 2025 ஆசிய கோப்பை டி20 வடிவத்திலும், 2027ல் ஒருநாள் உலகக் கோப்பை நடப்பதால் அதற்கு முன் நடக்கும் ஆசிய கோப்பை ஒருநாள் வடிவத்திலும் ஆடப்படும்.
போட்டி நடக்கும் தேதிகள் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை என்றாலும் இரண்டு 2025 மற்றும் 2027 பதிப்புகளிலும் ஆறு அணிகள் பங்கேற்கும் என்றும், மொத்தம் 13 போட்டிகள் நடக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதாவது, 2018, 2022 மற்றும் 2023-ல் பயன்படுத்தப்பட்ட அதே வடிவத்தில் போட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது.
ஆசிய கோப்பை வரலாற்றில் இந்தியா ஒரே ஒருமுறைதான் (1990/91) போட்டியை நடத்தியது. 2018-ல் போட்டியை நடத்தும் உரிமையை ஐக்கிய அரபு அமீரகத்திடம் இந்தியா கொடுத்த நிலையில், மீண்டும் அதையே செய்யுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். மறுபுறம், வங்கதேசம் ஆசிய கோப்பை தொடரை ஆறாவது முறையாக நடத்துகிறது. 1998, 2000, 2012, 2014 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் முன்பு நடத்தியது.
2025 மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை, 2026 ஆண்கள் டி20 உலகக் கோப்பை (இலங்கையுடன் இணைந்து), 2029 ஆண்கள் சாம்பியன்ஸ் டிராபி போட்டிகளையும் இந்தியா நடத்த உள்ளது. வங்கதேசம் இந்த ஆண்டு இறுதியில் 2024 மகளிர் டி20 உலகக் கோப்பையை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதேநேரத்தில், 2031 ஆண்களுக்கான ஒருநாள் உலகக் கோப்பையை இந்தியாவும் வங்கதேசமும் இணைந்து நடத்துகின்றன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.