விராட் கோலியின் டென்ஷன் ஆக்ஷன் காரணமாக அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. 2-வது டெஸ்டில் இந்திய அணி இக்கட்டான நிலையில் தத்தளிக்கிறது.
இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் செஞ்சூரியனில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்கா 335 ரன்களில் ஆல்அவுட் ஆனது.
இந்தியா முதல் இன்னிங்சில் 307 ரன்கள் சேர்த்தது. 28 ரன்கள் முன்னிலையுடன் தென்ஆப்பிரிக்கா 2-வது இன்னிங்சை தொடங்கியது. இந்தியாவின் நேர்த்தியான பந்து வீச்சால் தென்ஆப்பிரிக்கா 258 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. இதனால் இந்தியாவிற்கு 287 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இந்திய அணி 287 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2-வது இன்னிங்ஸை ஆரம்பித்தது. 8-வது ஓவரில் முரளி விஜய் ரபாடா பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து புஜாரா களம் இறங்கினார். மறுமுனையில் விளையாடிய லோகேஷ் ராகுலும் 4 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
கேப்டன் விராட் கோலி, 3-வது விக்கெட்டுக்கு புஜாராவுடன் ஜோடி சேர்ந்தார். முதல் இன்னிங்ஸில் 150 ரன்களை கடந்து அணிக்கு உதவிய விராட் கோலி, இந்த முறை 5 ரன்கள் எடுத்த நிலையில் நிகிடி பந்தில் எல்.பி.டபிள்யூ ஆனார். அப்போது இந்தியா 26 ரன்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்து திணறியது.
4-வது விக்கெட்டுக்கு பார்தீவ் பட்டேல் முன்னதாகவே களம் இறக்கபட்டார். அவரும் புஜாராவும் மேற்கொண்டு விக்கெட் சரியாமல் பாதுகாத்தனர். 4-வது நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு இந்தியா 35 ரன்கள் எடுத்துள்ளது. புஜாரா 11 ரன்னுடனும், பார்தீவ் பட்டேல் 5 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
இன்று (17-ம் தேதி) கடைசி நாளில் இந்தியாவின் வெற்றிக்கு 252 ரன்கள் தேவைப்படுகிறது. கைவசம் 7 விக்கெட்டுக்கள் உள்ளன. கடைசி நாளில் 252 ரன்கள் என்பது மிகவும் கடினமான ஒன்று. ஒருவேளை இந்த ஜோடி இன்று மதிய உணவு இடைவேளை வரை நிலைத்து நின்றால், இந்தியாவிற்கு வெற்றி வாய்ப்புள்ளது. இல்லையெனில் இந்தியா தோல்வியை தவிர்க்க முடியாது.
நேற்றைய ஆட்டத்தில் இந்தியா பந்து வீசியபோது, பந்தின் தன்மை குறித்து கள நடுவரிடம் விராட் கோலி அடிக்கடி புகார் கூறினார். அது ஏற்கப்படாத கோபத்தில் ஒருமுறை பந்தை ஓங்கி மைதானத்தின் வீசியெறிந்தார். இது விளையாட்டின் உத்வேகத்திற்கு எதிரானது எனக் கூறியும், ஐசிசி-யின் விளையாட்டு ஒழுங்குமுறையை மீறியதாகவும் குறைந்தபட்ச தண்டனையாக விராட் கோலிக்கு அவரது ஊதியத்தில் 25 சதவிகிதம் அபராதம் விதிக்கப்பட்டது.
டெஸ்ட் போட்டியின் முக்கியமான கட்டத்தில் 5 ரன்களில் அவுட் ஆனதுடன் அபராதத்தையும் எதிர்கொண்ட விராட் கோலிக்கு நேற்றைய தினம் மோசமான நாளாக அமைந்தது.