Asia Cup 2023: இந்தியாவில் வருகிற அக்டோபர், நவம்பர் மாதங்களில் ஒருநாள் (50 ஓவர்) உலகக்கோப்பை போட்டிகள் நடைபெற உள்ளது . கடந்த 10 வருடங்களாக எந்த வித ஐசிசி கோப்பையையும் வெல்லாத இந்திய அணி இந்த முறை சொந்த மண்ணில் நடைபெறும் உலகக்கோப்பையை கைப்பற்றும் முனைப்புடன் உள்ளது.
இந்நிலையில், இந்த உலகக்கோப்பைக்கு ஆசிய கண்டத்தைச் சேர்ந்த கிரிக்கெட் அணிகள் தயாராகும் வகையில் வரும் 30ம் தேதி ஆசிய கோப்பை தொடங்குகிறது. உலக கோப்பைக்கு தேவையான அணியை தேர்வு செய்வதற்கு உதவும் இந்த தொடரில் பாகிஸ்தான், வங்கதேசம் போன்ற நாடுகள் ஏற்கனவே தங்களுடைய அணிகளை அறிவித்து விட்டன.
இந்த நிலையில், இந்திய அணி இன்று மதியம் அறிவிக்கப்பட்டது. ஆசிய கோப்பைக்கான 17 பேர் கொண்ட இந்திய அணியை டெல்லியில் அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக் குழு கேப்டன் ரோகித் சர்மா மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகியோர் உடனான ஆலோசனைக்குப் பிறகு அறிவித்தது.
இந்திய அணியில் அனுபவம் மற்றும் இளம் வீரர்கள் கலந்த அணியாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் ஜஸ்பிரித் பும்ரா போன்ற அனுபவமிக்க முன்னணி வீரர்களுடன் இளம் வீரர்களான இஷான் கிஷன், திலக் வர்மா போன்றோருடன் இணைந்துள்ளனர்.
மற்றொரு குறிப்பிடத்தக்க விஷயமாக காயம் காரணமாக ஓய்வில் இருந்த மிடில் ஆடர் வீரர்களான கே.எல் ராகுல் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் இருவரும் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் இளம் வீரரான திலக் வர்மாவுக்கும் முதல் ஒருநாள் போட்டி அழைப்பு வந்துள்ளது.
செய்தியாளர் சந்திப்பின் போது திலக் வர்மாவின் தேர்வு குறித்து பேசிய அஜித் அகர்கர், “வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக சில நிச்சயமிக்க ஆட்டத்தை அவர் வெளிப்படுத்தியதை நாம் பார்த்தோம். அது அவருக்கு சில வெளிப்பாட்டைக் கொடுக்கும். இப்போது நாங்கள் 17 பேரைத் தேர்வு செய்துள்ளோம். உலகக் கோப்பையில் அது 15 ஆகவும் இருக்கும்.
ஸ்ரேயாஸ் நல்ல உடற்தகுதியுடன் உள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கே.எல். ராகுலுக்கு சிறிய காயம் உள்ளது. அதனால் தான் சஞ்சு அணியில் பேக்-அப் வீரராக இருக்கிறார்,” என்று அவர் கூறினார்.
ஆசிய கோப்பை இந்திய அணி:
ரோகித் சர்மா (கேப்டன்) விராட் கோலி, சுப்மான் கில்,ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஜஸ்பிரித் பும்ரா, குல்தீப் யாதவ், முகமது சிராஜ், முகமது ஷமி, இஷான் கிஷன், ஷர்துல் தாகூர், அக்சர் பட்டேல், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, பிரசித் கிருஷ்ணா,
சஞ்சு சாம்சன் ஆசிய கோப்பைக்கு பேக்-அப் விக்கெட் கீப்பராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிபிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil