ICC World Cup India Team Players 2019: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது. இந்திய கிரிக்கெட் அணியில் தமிழ்நாட்டை சேர்ந்த தினேஷ் கார்த்திக், விஜய்சங்கர் இடம் பெற்றனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரிஷாப் பாண்ட் சேர்க்கப்படவில்லை.
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி மே 30-ம் தேதி ஜூலை 14-ம் தேதி வரை இங்கிலாந்தில் நடைபெற இருக்கிறது. இந்தப் போட்டிக்கான அணிகளை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் விதித்த காலக் கெடுவுக்குள் (ஏப்ரல் 23) அறிவித்தாக வேண்டும். அதன்படி வெவ்வேறு நாடுகளும் 15 பேர் அடங்கிய வீரர்கள் பட்டியலை அறிவித்து வருகின்றன.
இந்திய கிரிக்கெட் தேர்வுக்குழு இன்று (ஏப்ரல் 15) மும்பையில் கூடி, 2019 உலகக் கோப்பைக்கான இந்திய அணியை தேர்வு செய்தது. எம்.எஸ்.கே.பிரசாத் தலைமையிலான தேர்வுக் குழுவினருடன் கேப்டன் விராட் கோலி, பயிற்சியாளர் ரவி சாஸ்திரி உள்ளிட்டோரும் இணைந்து அணியை தேர்வு செய்தார்கள். இது தொடர்பான லைவ் செய்திகளை இங்கு காணலாம்.
Live Blog
India World Cup 2019 Live: ICC World Cup 2019 India Team Players List- உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்திய அணியில் இடம் பெறுவது யார், யார்?
இந்திய அணி வீரர்கள் தேர்வு குறித்து, முன்னாள் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனும் ஐதராபாத் சன் ரைசர்ஸ் ஃபீல்டிங் கோச்சுமான முகம்மது கைஃப் கூறுகையில், ‘6 மாதங்களுக்கு முன்பு வரை முகமது ஷமி, டெஸ்ட் போட்டிகளுக்கு மட்டுமே பரிசீலிக்கப்படுகிறவராக இருந்தார். ஆனால் சில அபாரமான செயல்பாடுகள், அவரை இரண்டாவது முறையாக உலகக் கோப்பை அணியில் இடம்பெற வைத்திருக்கின்றன. அவரைப் போலவே ரவீந்திர ஜடேஜாவும் கடுமையாக போராடி மீண்டு இடம் பிடித்திருக்கிறார்.
அணியில் இடம் பிடிக்க முடியாத துரதிருஷ்டசாலிகள் சிலரும் இருக்கிறார்கள். எனினும் டீம் இந்தியாவுக்கு வாழ்த்துகள்’ என கூறியிருக்கிறார் கைஃப்.
2019 உலகக் கோப்பை போட்டிக்காக இங்கிலாந்து செல்லும் இந்திய அணி வீரர்கள் இவர்கள்தான்: 1. விராட் கோலி 2. ரோகித் சர்மா 3. ஷிகர் தவான் 4. லோகேஷ் ராகுல் 5. விஜய் சங்கர் 6. மகேந்திரசிங் டோனி 7. கேதர் ஜாதவ் 8. தினேஷ் கார்த்திக் 9. யுஸ்வேந்திர சாஹல் 10. குல்தீப் யாதவ் 11. புவனேஷ்வர் குமார் 12. ஜஸ்பிரித் பும்ரா 13. ஹர்திக் பாண்ட்யா 14. ரவீந்திர ஜடேஜா 15. முகமது ஷமி
இந்திய அணியில் இடம் பெறக்கூடும் என எதிர்பார்க்கப்பட்ட அம்பத்தி ராயுடு, ரிஷாப் பாண்ட் ஆகியோர் சேர்க்கப்படவில்லை. டோனிக்கு லேசான முதுகுவலிப் பிரச்னைகள் இருக்கும் சூழலில், மாற்று விக்கெட் கீப்பராக ரிஷாப் பாண்டைவிட தினேஷ் கார்த்திக்கிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது.
அதேபோல, 4-வது பேட்ஸ்மேன் வரிசைக்கு அவுட் ஆப் பார்மில் இருக்கும் ராயுடுவைவிட, விஜய்சங்கருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது.
இந்திய கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டது. விராட் கோலி தலைமையிலான இந்திய அணியில் தமிழக வீரர்கள் விஜய்சங்கர், தினேஷ் கார்த்திக் இடம் பெற்றனர். ஆல்ரவுண்டர்கள் ரவீந்திர ஜடேஜா, ஹர்திக் பாண்ட்யா ஆகியோரும் இடம் பெற்றிருக்கிறார்கள்.
இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் இன்று மும்பையில்தான் இருக்கிறார். மாலையில் அவரது தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதுகிறது. விராட் கோலியின் வசதியையும் கருத்தில் கொண்டே இன்று தேர்வுக் குழு கூடியதாக தெரிய வருகிறது.
இன்று பிற்பகல் 2 மணிக்கு தேர்வுக் குழுக் கூட்டத்திற்கு பின் வாசல் வழியாக வந்தார் விராட் கோலி. போட்டோகிராபர்களின் பிடியில் இருந்து தப்பவே இந்த தந்திரம்!
எம்.எஸ்.கே.பிரசாத் தலைமையிலான தேர்வுக் குழுவினர் மும்பையில் இந்திய கிரிக்கெட் வாரிய தலைமையகத்திற்கு வந்தனர். உலகக் கோப்பை போட்டிக்காக இந்திய அணித் தேர்வு நடக்கிறது. மாலை 3 மணிக்கு மேல் வீரர்கள் விவரம் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கலாம்.
இந்திய அணியின் 4-வது பேட்ஸ்மேன் இடத்திற்கு ரிஷாப் பாண்ட், ஒரு சுவாரசியமான தேர்வுதான். ஆனால் தமிழக வீரர் விஜயசங்கர், டெல்லி கேப்பிடல்ஸ் கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் ஆகியோர் கடும் போட்டி கொடுப்பார்கள்.
தமிழக வீரர் விஜய்சங்கர், பேட்டிங்கில் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார். ஆனால் இவரது மிதவேகப் பந்துவீச்சு பெரிதாக தேர்வாளர்களை கவரவில்லை. எனவே முழுக்க பேட்ஸ்மேனாக இவர் இடம் பெறுவாரா? என்கிற கேள்வி இருக்கிறது.
மும்பையில் இன்று பிற்பகலில் இந்திய கிரிக்கெட் அணி தேர்வுக் குழுக் கூட்டம் நடைபெற இருக்கிறது. அதைத் தொடர்ந்து மாலை 3 மணிக்கு 15 பேர் அடங்கிய வீரர்கள் பட்டியல் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.வீரர்கள் தேர்வு தொடர்பான லைவ் செய்திகளுக்கு இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழுடன் இணைந்திருங்கள்.
இந்திய அணியின் இரு பிரதான சுழற்பந்து வீச்சாளர்களில் சாஹல் சில நேரங்களில் தடுமாறி விடுகிறார். அவர் அளவுக்கு சி.எஸ்.கே. சிங்கம் ரவீந்திர ஜடேஜா ஸ்பின்னர் இல்லையென்றாலும், சிக்கனமாக பந்து வீசுவதில் கெட்டிக்காரர்! பேட்டிங்கில் சாஹலைவிட திறமைசாலி!இதையெல்லாம்விட ஒரே ஒரு ரன் அவுட் அல்லது அபாரமான ஒரு கேட்சில் ஆட்டத்தை திசைதிருப்பும் தன்மை மிக்கவர் ஜடேஜா. எனவே ஜடேஜா 3-வது ஸ்பின்னர் கம் ஆல்ரவுண்டராக அணியில் இடம் பெறுவார் என்றே தெரிகிறது.
பெரும் விவாதமாக இருப்பது இந்திய அணியில் 4-ம் வரிசை பேட்ஸ்மேனாக இடம் பெறப் போவது யார்? என்பதுதான்? இந்திய அணி முதலில் பேட் செய்யும் பட்சத்தில் மிடில் ஆர்டரில் ஒரு அதிரடி பேட்ஸ்மேன் இருந்தால்தான் இலக்கை அதிகமாக வைக்க முடியும் என சில வாரங்களுக்கு முன்பு ஒரு பேட்டியில் கோலி கூறியிருந்தார். அந்த அடிப்படையில் ரிஷாப் பாண்ட் தேர்வாகலாம். மாற்று விக்கெட் கீப்பராகவும் அவரே இருந்து கொள்ள வாய்ப்பு இருக்கிறது.ஆனால் ரிஷாப் பாண்ட் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்பது மைனஸ்.
11 பேர் தவிர இந்திய அணியில் இடம்பெறும் எஞ்சிய 4 இடங்களுக்கு பலத்த போட்டி நிலவுகிறது. ஆல் ரவுண்டர்கள் என்ற அடிப்படையில் ரவீந்திர ஜடேஜா, விஜய் சங்கர் ஆகியோரும், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் என்ற அடிப்படையில் ஷ்ரேயாஸ் அய்யர், டெஸ்ட் அணியின் துணை கேப்டன் ரஹானே, மாற்று விக்கெட் கீப்பர் என்கிற அடிப்படையில் தினேஷ் கார்த்திக், 4-வது வரிசை பேட்ஸ்மேன் மற்றும் அவசர தேவைக்கு விக்கெட் கீப்பிங் செய்யத் தெரிந்தவர்கள் என்ற அடிப்படையில் லோகேஷ் ராகுல், ரிஷாப் பாண்ட் என இந்தப் பட்டியல் நீளுகிறது.
இங்கிலாந்து செல்லும் இந்திய அணியில் 15 பேர் இடம் பெறுவார்கள். அதில் 11 பேர் யார், யார்? என ஏறக்குறைய உறுதி ஆகிவிட்டது. உறுதியாக எதிர்பார்க்கப்படும் 11 பேர் இவர்கள்தான்.
விராட் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா (துணை கேப்டன்), ஷிகர் தவான், மகேந்திரசிங் டோனி (விக்கெட் கீப்பர்), கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்ட்யா, குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், ஜஸ்பிரித் பும்ரா, புவனேஷ்வர் குமார், முகமது ஷமி
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights