இந்தியா-இலங்கை இடையிலான 2-வது ஒருநாள் போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர், ஆடும் லெவனில் இடம் பிடித்தார்.
இந்தியா-இலங்கை இடையிலான கிரிக்கெட் தொடர், இந்தியாவில் நடந்து வருகிறது. டெஸ்ட் தொடரை 1-0 என இந்தியா வென்றது. தர்மசாலாவில் நடைபெற்ற முதல் ஒருநாள் சர்வதேசப் போட்டியில் இலங்கை பந்துவீச்சுக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் இந்தியா சுருண்டது. அந்த ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை வென்றது.
இந்தியா-இலங்கை இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி, பஞ்சாப் மாநிலம் மொகாலியில் இன்று பகல் 11.30 மணிக்கு தொடங்கியது. கடந்த போட்டியைப் போலவே ‘டாஸ்’ வென்ற இலங்கை, மீண்டும் பந்துவீச்சையே தேர்வு செய்தது.
இந்திய அணியில் ஒரு மாற்றமாக ‘சைனாமேன்’ பவுலர் குல்தீப் யாதவுக்கு பதிலாக தமிழக ஆல்ரவுண்டரான வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்பட்டார். 18 வயதான சுந்தருக்கு இது அறிமுகப் போட்டி! நடந்து முடிந்த டி.என்.பி.எல். தொடரில் சுழற்பந்து வீச்சிலும், பேட்டிங்கிலும் கலக்கியவர் இவர்! அதுவே இவருக்கு சர்வதேச வாய்ப்பை பெற்றுத் தந்திருக்கிறது. இவர் இடம் பெற்றதன் மூலமாக நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்திய ஒருநாள் அணியில் இரு தமிழக வீரர்கள் (இன்னொருவர், தினேஷ் கார்த்திக்) இடம் பெற்றிருக்கிறார்கள்.
இந்தியா தரப்பில் கேப்டன் ரோகித்ஷர்மாவும், ஷிகர் தவானும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். இலங்கை பந்துவீச்சை மிக எச்சரிக்கையுடன் இருவரும் கையாண்டனர். 13 ஓவர்கள் முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 55 ரன்கள் எடுத்தது. அப்போது தவான் 32 ரன்களிலும், ரோகித்ஷர்மா 22 ரன்களிலும் களத்தில் நின்றனர். இலங்கை தரப்பில் நுவான் பிரதீப்பும், திசரா பெரேராவும் ஆரம்பகட்ட ஓவர்களை வீசினர்.