இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்யும் வங்கதேச கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர்களில் விளையாட உள்ளது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது. அதன்படி, இந்த முதலாவது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வரும் 19 ஆம் தேதி தொடங்க உள்ளது.
இந்நிலையில், இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரில் முதல் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், வங்கதேச அணிக்கு எதிரான சென்னை டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் ஆடும் லெவன் எப்படி இருக்கும் என்றும், எந்தெந்த வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பது பற்றியும் இங்கு பார்க்கலாம்.
இந்தியா vs வங்கதேசம் - சென்னை டெஸ்ட்: ஆடும் லெவன்
வங்கதேச அணிக்கு எதிரான சென்னை டெஸ்ட் போட்டியில் கேப்டன் ரோகித் சர்மாவுடன், இந்த ஆண்டு தொடக்கத்தில் இங்கிலாந்துக்கு எதிராக விளையாடிய 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் போது இந்திய அணிக்காக ரெட்-ஹாட் ஃபார்மில் இருந்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் இந்தியாவுக்காக இன்னிங்ஸைத் தொடங்குவார். இங்கிலாந்துக்கு எதிரான 5 டெஸ்டில் ஒன்பது இன்னிங்ஸ்களில், ஜெய்ஸ்வால் மொத்தம் 712 ரன்கள் குவித்து, டெஸ்ட் தொடரில் 700+ ரன்களை எடுத்த இரண்டாவது இந்திய கிரிக்கெட் வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.
தரம்சாலாவில் இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா விளையாடிய கடைசி டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் சதம் அடித்த கில், தனது நம்பர் 3 இடத்தைத் தக்க வைத்துக் கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், நட்சத்திர வீரர் விராட் கோலி தனது வழக்கமான நம்பர் 4 இடத்தில் பேட் செய்வார்.
இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்டில், சர்ஃபராஸ் கான் இந்தியாவுக்காக நம்பர் 5 இல் பேட்டிங் செய்தார். ஆனால் அவர் சென்னை டெஸ்டில் ஆடும் லெவனில் கே.எல் ராகுலுக்கு இடம் கொடுக்க அதிக வாய்ப்பு உள்ளது. ராகுல் கடைசியாக 2024 ஜனவரியில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் ஆடினார். தற்போது, பெங்களூரில் நடந்து வரும் துலீப் டிராபி தொடரில் இந்தியா பி அணிக்கு எதிரான போட்டியில் இரண்டு இன்னிங்ஸிலும் இந்தியா ஏ அணிக்காக அதிக ஸ்கோர் எடுத்த வீரராக (57 & 37 ரன்கள்) இருந்தார்.
ரிஷப் பண்ட் 21 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் டெஸ்ட் அணியில் இடம்பிடித்துள்ளார். மேலும் அவர் வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விக்கெட் கீப்பர்-பேட்டராக துருவ் ஜூரெலை விட விரும்பப்படுகிறார். அஷ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா முதல் டெஸ்டில் விளையாடுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. ஆனால் குல்தீப் யாதவ் மற்றும் அக்சர் படேல் ஆகியோரில் விளையாடும் லெவன் அணியில் யார் இடம் பெறுவார்கள் என்பதைப் பார்ப்பதில் சுவாரஸ்யமாக இருக்கும். குல்தீப் தனது கடைசி டெஸ்டில் இந்தியாவுக்காக ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதேசமயம் இந்தியா டி அணிக்கான துலீப் டிராபி போட்டியில் அக்சர் தனது ஆல்ரவுண்டர் திறனை வெளிப்படுத்தி அசத்தினார்.
ஜஸ்பிரித் பும்ரா வழக்கம் போல் இந்தியாவின் வேகப் பந்துவீச்சு தாக்குதலை வழிநடத்துவார். மேலும் முகமது சிராஜ் ஆகாஷ் தீப் மற்றும் யாஷ் தயாள் போன்றவர்களை விட அவரது முதல் தேர்வு வேகப்பந்து வீச்சாளராக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அணி வீரர்கள் பட்டியல்:
ரோகித் சர்மா (கேப்டன்), ஜெய்ஸ்வால், சுப்மன் கில், விராட் கோலி, ரிஷப் பண்ட், துருவ் ஜூரல், கே.எல் ராகுல், சர்பராஸ் கான், அஸ்வின், ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், ஆகாஷ் தீப், பும்ரா மற்றும் யாஷ் தயாள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.