Indian cricket team announced: இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாட உள்ள வங்கதேச கிரிக்கெட் அணிக்கு எதிராக டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் விளையாட உள்ள இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. டி20 அணியில் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால் ரோஹித் சர்மா கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்யும் வங்கதேச கிரிக்கெட் அணி 3 டி20, 2 டெஸ்ட் போட்டி தொடர்களில் விளையாட உள்ளது. இதில் டி20 போட்டிகள் அடுத்த மாதம் நவம்பர் 3 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 10 ஆம் தேதி நிறைவடைகிறது. டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நவம்பர் 14 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 26 ஆம் தேதி நிறைவடைகிறது.
வங்கதேச கிரிக்கெட் அணிக்கு எதிராக டி20 மற்றும் டெஸ்ட் தொடர்களில் விளையாடவுள்ள இந்திய கிரிக்கெட் அணியை இன்று மும்பையில் எம்.எஸ்.கே பிரசாத் தலைமையிலான தேர்வுக்குழு அறிவித்தது. டி20 தொடரில் கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக துணை கேப்டன் ரோஹித் சர்மான் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். அதோடு, இந்த தொடரில் மகேந்திரசிங் தோனியின் பெயர் இடம்பெறவில்லை.
டி20 கிரிக்கெட் அணியில் இடம்பெற்றவர்கள் விவரம்: ரோஹித் சர்மா (கேப்டன்) ஷிகர் தவான், கே.எல்.ராகுல், சஞ்சு சாம்சன், ஸ்ரேயஸ் ஐயர், மணீஷ் பாண்டே, ரிஷப் பண்ட்( விக்கெட் கீப்பர்) வாஷிங்டன் சுந்தர், குருணால் பாண்டியா, சஹல், ராகுல் சஹார், தீபக் சஹார், கலீல் அஹமது, ஷிவம் துபே, ஷர்துல் தாக்குர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
டெஸ்ட் கிரிக்கெட் அணியில் இடம்பெற்றவர்கள் விவரம்: விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா, மயங்க் அகர்வால், புஜாரா, ராஹானே, விஹாரி, சஹா (விக்கெட் கீப்பர்) ஜடேஜா, அஸ்வின், குல்தீப் யாதவ், ஷமி, உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா, ஷுப்மன் கில், ரிஷப் பண்ட் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இதில் டி20 அணியில் சஞ்சு சாம்சன், ஷிவம் துபே ஆகியோர் புதியதாக இடம்பெற்றுள்ளனர். இந்த மாத தொடக்கத்தில் கேரளாவிற்கும் கோவாவுக்கும் இடையிலான விஜய் ஹஸ்ரே கிரிக்கெட் போட்டியில், சஞ்சு சாம்சன் தனது முதல் இரட்டை சதத்தை அடித்தார். விக்கெட் கீப்பரும் பேட்ஸ்மேனுமான சஞ்சு சாம்சன் 129 பந்துகளில் 212 ரன்கள் எடுத்தார். இதில் 20 பவுண்டரிகள் மற்றும் 10 சிக்சர்கள் அடங்கும்.
அதே போல, தென் ஆப்பிரிக்காவுடன் விளையாடிய இந்திய ஏ அணியில் இடம்பெற்ற ஷிவம் துபே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் அவரும் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார்.
போட்டிகள் விவரம்:
டி 20 தொடர்
1 வது டி20 போட்டி நவம்பர் 3 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) புது தில்லியில் ஃபெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெறுகிறது.
2 வது டி20 போட்டி நவம்பர் 7 ஆம் தேதி (வியாழக்கிழமை) ராஜ்கோட் (குஜராத்) சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெறுகிறது.
3 வது டி20 போட்டி நவம்பர் 10 (ஞாயிற்றுக்கிழமை) நாக்பூர் (மகாராஷ்டிரா) விதர்பா கிரிக்கெட் அசோசியேஷன் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.
டெஸ்ட் தொடர்
முதல் டெஸ்ட் போட்டி நவம்பர் 14-18 வரை (வியாழன்-திங்கள்) இந்தூர் (மத்தியப் பிரதேசம்) ஹோல்கர் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.
2 வது டெஸ்ட் போட்டி நவம்பர் 22-26 வரை (வெள்ளி-செவ்வாய்) கொல்கத்தா (மேற்கு வங்கம்) ஈடன் கார்டன் விளையாட்டரங்கில் நடைபெறுகிறது.
இந்திய அணிக்கு எதிராக விளையாட உள்ள வங்கதேச டி20 அணி:
ஷாகிப் அல் ஹசன் (கேப்டன்), தமீம் இக்பால், லிட்டன் தாஸ், சௌமிய சர்க்கார், நெய்ம் ஷேக், முஷ்ஃபிகுர் ரஹீம் (விக்கெட் கீப்பர்), மஹமுதுல்லா ரியாத், அஃபிஃப் ஹொசைன், முசாதெக் ஹொசைன், அமினுல் இஸ்லாம் பிப்லோப், அராஃபத் சன்னி, மொஹமத் சைஃபுத்தின், அல் அமின் ஹொசைன், முஸ்தாஃபிஸுர் ரஹ்மான், ஷபியுல் இஸ்லாம் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.