India Test Squad for England 2018: இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டது. பந்து வீச்சு பலவீனத்தை இந்த அணி சரி செய்யுமா?
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டிருக்கிறது. முன்னதாக இங்கிலாந்தில் நடந்த டி 20 தொடரை இந்திய அணி 2-1 என வென்றது. அடுத்து நடந்த ஒருநாள் போட்டித் தொடரை இங்கிலாந்து அதேபோல 2-1 என வென்று பதிலடி கொடுத்தது.
எனவே அடுத்து வர இருக்கிற டெஸ்ட் தொடர் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது. ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் டெஸ்ட் தொடங்குகிறது. மொத்தம் 5 போட்டிகள் கொண்ட நீண்ட தொடரில் இந்தியாவும், இங்கிலாந்தும் மோதுகின்றன. இந்தச் சூழலில் முதல் 3 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி இன்று (ஜூலை 18) அறிவிக்கப்பட்டது.
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் இடம்பெற்ற வீரர்கள் பட்டியல் இதோ:
விராட் கோலி (கேப்டன்), ஷிகர் தவான், கே.எல்.ராகுல், எம்.விஜய், சத்தீஷ்வர் புஜாரா, அஜிங்ய ரஹானே, கருண் நாயர், தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ரிஷாப் பாண்ட், ஆர்.அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, இஷாந்த் ஷர்மா, முகம்மது ஷமி, உமேஷ் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, ஷர்துல் தாகூர்.
இந்திய டெஸ்ட் அணியின் ரெகுலர் விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹா இன்னமும் விரல் காயத்தில் இருந்து மீளாததால், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இடம் பெற்ற தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் மீண்டும் விக்கெட் கீப்பராக இடம் பிடித்திருக்கிறார். அதே சமயம் 2-வது விக்கெட் கீப்பராக இளம் அதிரடி வீரர் ரிஷாப் பாண்ட் சேர்க்கப்பட்டிருக்கிறார். டெஸ்ட் அணியில் அவர் இடம் பிடித்திருப்பது இதுதான் முதல் முறை!
தென் ஆப்பிரிக்க டெஸ்ட் தொடரில் சோபிக்காத ரோஹித் ஷர்மா இடம் பெறவில்லை. அவருக்கு பதிலாக கருண் நாயர் இடம் பிடித்திருக்கிறார். தொடக்க வீரர்கள் பட்டியலில் ஷிகர் தவான், லோகேஷ் ராகுல், முரளி விஜய் ஆகிய மூவர் உள்ளனர். இவர்களில் 2 பேருக்கு வாய்ப்பு கிடைக்கலாம்.
வழக்கம்போல புஜாரா ஒன் - டவுன் பேட்ஸ்மேனாக வருவார். அண்மையில் கவுண்டி போட்டிகளில் ஆடிய அனுபவம் புஜாராவுக்கு கை கொடுக்கும் என எதிர்பார்க்கலாம். அடுத்து விராட் கோலி, ரஹானே, தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் அணி வகுப்பார்கள். கருண் நாயருக்கு பிளேயிங் லெவனில் இடம் கிடைப்பது சிரமம்!
பந்து வீச்சுப் படையைப் பொறுத்தவரை, காயத்தில் இருந்து மீளாத புவனேஷ்வர் குமாருக்கு இடமில்லை. பும்ராவின் பெயர் இடம் பெற்றிருந்தாலும், கட்டை விரல் காயத்தில் அவதிப்படும் அவரது பெயர், 2-வது போட்டிக்குத்தான் பரிசீலிக்கப்பட இருக்கிறது.
எனவே இஷாந்த் ஷர்மா, உமேஷ் யாதவ் அல்லது ஷர்துல் தாகூர், அஸ்வின், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் இடம் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 5-வது பந்து வீச்சாளராக ஆல் ரவுண்டர் பாண்ட்யா கை கொடுப்பார்.
பந்து வீச்சைப் பொறுத்தவரை, பும்ரா-புவனேஸ்வர் முழு உடல் தகுதியுடன் இல்லாதது இந்தியாவுக்கு பெரிய பின்னடைவு. ஒருநாள் தொடரை இந்தியா இழந்ததுகூட அதனால்தான்! எனவே டெஸ்ட் தொடரில் அவர்களின் இழப்பை மற்ற வீரர்கள் எப்படி சரி கட்டுவார்கள் என்பதைப் பொறுத்தே இந்தியாவின் வெற்றி அமையும்!
குல்திப் யாதவ் அணியில் இடம் பிடித்திருக்கிறார். எனினும் 3-வது ஸ்பின்னரை சேர்க்க விரும்பினால், அவருக்கு இடம் கிடைக்கலாம். அதாவது சுழற் பந்துவீச்சுக்கு சாதகமான மைதானமாக இருந்தால் இஷாந்த் ஷர்மா, பாண்ட்யா, அஸ்வின், ஜடேஜா, குல்தீப் என பந்துவீச்சு வரிசை அமையக்கூடும்!
எப்படிப் பார்த்தாலும் பும்ரா-புவனேஷ்வர் இடம்பெறாத பட்சத்தில் வேகப் பந்து வீச்சு பலமற்றதாகவே தென்படும். நீண்ட டெஸ்ட் தொடரில் அந்தப் பலவீனத்தை சரி செய்வது மிகக் கடினமானது.