asian-games 2023 | indian-hockey| India vs South Korea HIGHLIGHTS: 19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா உள்பட 45 நாடுகளை சேர்ந்த 12,400 வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டுள்ளனர். இந்நிலையில், இந்த போட்டி தொடரின் 12-வது நாளான இன்று பல்வேறு போட்டிகள் நடைபெற்று வருகிறது. அதில் இந்தியா பதக்கங்களை அள்ளி வருகிறது.
இந்நிலையில், ஆசிய விளையாட்டு தொடரில் 18 தங்கம், 31 வெள்ளி, 32 வெண்கலம் என மொத்தம் 81 பதக்கங்களுடன் இந்தியா பதக்க பட்டியலில் 4ம் இடத்தில் உள்ளது.
இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்திய ஆக்கி அணி
இந்நிலையில், இன்று ஆண்களுக்கான ஆக்கி அரையிறுதி போட்டியில் இந்தியா - தென்கொரியா அணிகள் மோதின. மிகவும் விறுவிறுப்பாக அரங்கேறிய இந்தப் போட்டியில் ஆரம்பம் முதலே இந்தியா ஆதிக்கம் செலுத்தியது. போட்டி தொடங்கிய 5வது நிமிடத்தில் ஹர்திக் சிங் முதல் அடித்து இந்தியாவின் கணக்கை தொடங்கி வைத்தார்.
இதன்பின்னர் 11வது நிமிடத்தில் மன்தீப் சிங் கோல் அடித்தார். 15வது நிமிடத்தில் லலித் குமார் உபாத்யாய் மற்றும் 24வது நிமிடத்தில் அமித் ரோஹிதாஸ் தங்களது பங்கிற்கு கோல் அடித்து மிரட்டினார். இதனிடையே தென் கொரியா சார்பில் ஜங் மஞ்சே 17 வது மற்றும் 20வது நிமிடத்தில் கோல் அடித்து அசத்தினார். இதனால் முதல் பாதி முடிவில் இந்தியா 4 - 2 என்கிற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தது.
2வது பாதியில் தென் கொரியாவின் ஜங் மஞ்சே 42வது தனது 3வது கோல் அடிக்க, இந்தியாவின் அபிஷேக் 54வது நிமிடத்தில் பதில் கோல் அடித்து மிரட்டினார். இறுதியில் ஆட்ட நேர முடிவில் இந்தியா 5-3 என்ற கோல் கணக்கில் தென் கொரியாவை வீழ்த்தியது. இந்த அசத்தல் வெற்றியின் மூலம் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறி அசத்தியது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“