இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் முதலாவது டி20 போட்டி மான்செஸ்டரில் நேற்று (3.7.18) இரவு நடைபெற்றது
விரட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. 3 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள், 5 டெஸ்ட் போட்டிகளில் இரு அணிகளும் மோதுகின்றன. முதலாவது டி20 போட்டி பகல் இரவு மேட்சாக மான்செஸ்டர் நகரில் உள்ள ஓல்ட் ட்ராட்போர்ட் மைதானத்தில் நேற்று நடைபெற்றது.
இங்கிலாந்து அணியை அதன் சொந்த மண்ணில் தோற்கடிப்பது அவ்வளவு எளிதானதல்ல. எனவே, நேற்றைய போட்டி இந்திய அணிக்கு பெரும் சவாலாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், இந்திய அணி தனது அபாரமான பந்து வீச்சால் இங்கிலாந்து அணியை வெறித்தனமாக பந்தாடியது. முதலில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி, பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.இதனையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி இந்திய பந்துவீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் திணறியது.
இந்திய பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் தன்னுடைய அபார சுழற்பந்து வீச்சால் 24 ரன்கள் மட்டுமே வழங்கினார். இங்கிலாந்தின் அணியை சேர்ந்த 2வது முதல் 6வது வரையான ஆட்டக்காரர்களை அசால்ட்டாக வெளியேற்றி இங்கிலாந்தை அணியை திக்குமுக்காட செய்தார் குல்தீப் யாதவ். ஒரு ஓவரில் 3 ஆட்டக்காரர்களை குல்தீப் யாதவ் வெளியேற்றியது பரபரப்பின் உச்சம்.
20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து 159 ரன்கள் எடுத்தது. இந்தியா சார்பில் குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளையும், உமேஷ் யாதவ் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் ஷிகர் தவான், 4 ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். பின் வந்த லோகேஷ் ராகுல் சிக்சர் மழை பொழிந்தார். பிளங்கட் வீசிய 11வது ஓவரில் 2 சிக்சர், 2 பவுண்டரி உட்பட 20 ரன்கள் எடுக்க, வெற்றி இலக்கை வேகமாக நெருங்கியது இந்தியா.
இந்திய அணி 18.2 ஓவரில் 163 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. லோகேஷ் ராகுல் சிறப்பாக ஆடி சதமடித்தார். லோகேஷ் ராகுல் 101 ரன்னுடனும், விராட் கோலி 20 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இதையடுத்து, இந்தியா 1-0 என தொடரில் முன்னிலை பெற்றுள்ளது