ஐ.சி.சி சாம்பியன்ஸ் டிராபி தொடர் 8 ஆண்டுகளுக்கு பிறகு நடக்க உள்ளது. பாகிஸ்தானில் நடக்கும் இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்க 8 அணிகள் தகுதிபெற்றுள்ளன. உலகக் கோப்பை தொடரில் டாப் 8 இடங்களை பிடித்த அணிகள் இந்த தொடரில் விளையாட உள்ளன. இந்த தொடர் அடுத்த ஆண்டு பிப்ரவரி 19-ம் தேதி முதல் மார்ச் 9-ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான வரைவு கால அட்டவணையை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், ஐ.சி.சி-யிடம் சமர்பித்தது. பாகிஸ்தான் அணி சமர்பித்த இந்த வரைவு அட்டவணைக்கு பி.சி.சி.ஐ. தரப்பில் எந்த ஒப்புதலும் இதுவரை அளிக்கப்படவில்லை. அதனால் இந்திய அணி பாகிஸ்தான் செல்லுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
பி.சி.சி.ஐ தரப்பில் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ தகவலும் இல்லை. இதனிடையில் ஐ.சி.சி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்க இந்திய அணி பாகிஸ்தான் செல்ல வாய்ப்பில்லை என்று கூறப்பட்டுள்ளது. மேலும், போட்டியை ஹைபிரிட் மாடலில் நடத்த பி.சி.சி.ஐ கோரிக்கை வைப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதாவது, இந்திய அணிகள் பங்கேற்கும் போட்டிகளை துபாய் அல்லது இலங்கையில் நடத்துமாறு ஐசிசியிடம் பிசிசிஐ வலியுறுத்துவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரிலும், இந்திய அணி பங்கேற்ற போட்டிகள் இதே போன்று நடைபெற்றன. இந்நிலையில் இந்தியா- பாகிஸ்தான் இடையே அரசாங்க மத்தியில் பிரச்சனைகள், நல்லுறவு இல்லாத காரணத்தால் இந்திய அணிகள் பாகிஸ்தான் செல்ல வாய்ப்பில்லை என்று கூறப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“