உலகக் கோப்பை கிரிக்கெட்த் தொடரில் தொடர்ச்சியாக மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள இந்திய அணி புள்ளிப் பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளது.
உலகின் டாப் 10 அணிகள் பங்கேற்றுள்ள மாபெரும் விளையாட்டுத் திருவிழாவான உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் அக்டோபர் 5 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்திய அணி கடைசியாக 2011 இல் தோனி தலைமையில் உலகக் கோப்பையை வென்றது. அப்போது உலகக் கோப்பை போட்டிகள் இந்தியாவிலும் நடந்தன. இந்தநிலையில், 2011க்குப் பிறகு உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெறுகிறது. அதுவும் முழுவதுமாக இந்திய மண்ணில் நடைபெறுகிறது. எனவே 2011 போலவே, 12 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்திய அணி சாம்பியன் பட்டம் வெல்லும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எழுந்துள்ளது.
இந்தநிலையில், உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலியா அணியை எதிர்கொண்டது. சென்னையில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங் தேர்வு செய்தது. இருப்பினும் இந்திய பவுலர்களின் சிறப்பான பந்துவீச்சால் ஆஸ்திரேலியா அணி 49.3 ஓவர்களில் 10 விக்கெட்களையும் இழந்து 199 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இந்திய அணி எளிதாக வென்றுவிடும் என்று எதிர்ப்பார்த்த நிலையில், தொடக்கமே அதிர்ச்சியாக இருந்தது. எக்ஸ்ட்ராக்கள் மூலம் 2 ரன்கள் கிடைத்த நிலையில், ரோகித், இஷான் கிஷன், ஸ்ரேயாஸ் ஐயர் மூவரும் டக் அவுட் ஆகினர். இந்தநிலையில் ஆபத்வாந்தனாக கோலி – ராகுல் ஜோடி சிறப்பாக விளையாடி வெற்றிக்கு வித்திட்டது. இந்திய அணி 41.2 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கோலி 85 ரன்களும் ராகுல் 97 ரன்களும் எடுத்தனர்.
இதனையடுத்து இந்திய அணி தனது இரண்டாவது போட்டியில் இன்று ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொண்டது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. ஷஹிதி 80 ரன்களும் அஸ்மத்துல்லா 62 ரன்களும் எடுக்க ஆப்கானிஸ்தான் 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 272 ரன்கள் எடுத்தது. பும்ரா 4 விக்கெட் வீழ்த்தினார்.
சேசிங்கில் களமிறங்கிய இந்திய அணியில் கேப்டன் ரோகித் ருத்ர தாண்டவம் ஆடினார். பவுண்டரிகளும் சிக்சருமாக விளாசி ஆப்கான் பந்துவீச்சாளர்களை திணறடித்தார். ரோகித் – இஷான் கிஷன் ஜோடி முதல் விக்கெட்க்கு 156 ரன்கள் சேர்த்தது. பின்னர் ரோகித் 63 பந்துகளில் சதம் அடித்து புதிய சாதனை படைத்தார். தொடர்ந்து கோலியின் அரைசதத்துடன் இந்திய அணி எளிதாக ஆப்கானை வென்றது. இவ்விரு வெற்றிகள் மூலம் இந்திய அணி புள்ளி பட்டியலில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியது.
இதனையடுத்து இந்திய அணி தனது 3 ஆவது போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்க்கொண்டது. பாகிஸ்தானுடன் இந்திய அணி மோதுகிறது என்றாலே விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது. அந்த வகையில் இந்தப் போட்டியும் அமைந்தது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய பந்துவீச்சு தேர்வு செய்தது. டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடினாலும் பின்னர் வந்தவர்கள் சோபிக்க தவறியதால், பாகிஸ்தான் அணி 42.5 ஓவர்களில் 10 விக்கெட்களையும் இழந்து 191 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இந்திய பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசி பாகிஸ்தான் அணிக்கு நெருக்கடி கொடுத்தனர். ரன் விட்டுகொடுக்காமல் பந்துவீசியதோடு குறிப்பிட்ட இடைவெளியில் விக்கெட்களையும் வீழ்த்தினர். பும்ரா, சிராஜ், பாண்டியா, குல்தீப், ஜடேஜா தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.
சேசிங்கில் சுப்மன் கில் மற்றும் கோலி விரைவாக அவுட் ஆனாலும், ரோகித் ஆப்கானிஸ்தானிடம் இருந்த பார்மை பாகிஸ்தானிடமும் காட்டினார். 36 பந்துகளில் அரைசதம் அடித்த ரோகித், 6 சிக்சர்கள் மற்றும் 6 பவுண்டரிகளும் 86 ரன்கள் எடுத்தார்.
பின்னர் ஸ்ரேயாஸ் ஐயரின் நிதானமான அரைசதத்தால், இந்திய அணி 30.3 ஓவர்களிலே இலக்கை எட்டியது, 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை தோற்கடித்தது. இதன்மூலம் உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணியை தொடர்ச்சியாக 8 ஆவது முறை தோற்கடித்துள்ளது. உலகக் கோப்பையில் இந்திய அணியை பாகிஸ்தான் வென்றதில்லை என்ற வரலாற்றையும் தக்கவைத்துக் கொண்டது.
இந்த வெற்றி மூலம் இந்திய அணி புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. தொடர்ச்சியாக 3 வெற்றிகள் மூலம் 6 புள்ளிகளுடன் இந்தியா முதலிடத்தில் உள்ளது. நியூசிலாந்து 6 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. 4 புள்ளிகளுடன் தென்னாப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.