Asian-games 2023 | india-vs-afghanistan: 19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா உள்பட 45 நாடுகளை சேர்ந்த 12,400 வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டுள்ளனர். இந்நிலையில், இந்த போட்டி தொடரின் 14-வது நாளான இன்று பல்வேறு போட்டிகள் நடைபெற்று வருகிறது. அதில் இந்தியா பதக்கங்களை அள்ளி வருகிறது.
இந்நிலையில், ஆசிய விளையாட்டு போட்டி வரலாற்றில் முதல் முறையாக இந்தியா 100 பதக்கங்களை வென்று புதிய சாதனை படைத்துள்ளது. இந்தியா இதுவரை 25 தங்கம், 35 வெள்ளி, 40 வெண்கலம் என மொத்தம் 100 பதக்கங்களை வென்று பதக்க பட்டியலில் 4ம் இடத்தில் உள்ளது.
கிரிக்கெட் இறுதிப் போட்டி
இந்நிலையில், நடப்பு ஆசிய விளையாட்டு போட்டியில் சேர்க்கப்பட்ட கிரிக்கெட் தொடர் மிகவும் பரபரப்பாக நடந்து வருகிறது. 14 அணிகள் கலந்து கொண்ட இந்த தொடருக்கான முதலாவது அரையிறுதிப் போட்டியில் வங்க தேசத்தை இந்தியா 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இதேபோல், 2வது அரையிறுதிப் போட்டியில் ஆப்கானிஸ்தான் பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இந்த நிலையில், இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இறுதிப்போட்டி ஹாங்சூ நகரில் உள்ள பிங்ஃபெங் கேம்பஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடக்கிறது. இந்த போட்டியானது இந்திய நேரப்படி காலை 11.30 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், போட்டிக்கு முன்னதாக லேசான மழைப் பொழிவு இருந்தது. இதனால் போட்டிக்கு டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது.
டாஸ் வென்ற இந்தியா பவுலிங்: ஆப்கான் பேட்டிங்
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதனால், ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. ஆப்கானிஸ்தான் அணியின் ஷாஹிதுல்லா கமால் 49 ரன்களுடனும், கேப்டன் குல்பாடின் நைப் 27 ரன்னுடனும் களத்தில் இருந்த போது மழை பெய்ய தொடங்கியது. அப்போது அந்த அணி 18.2 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 112 ரன்கள் எடுத்து இருந்தது. மழை தொடர்ச்சியாக பொழிந்த நிலையில், போட்டி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
தங்கம் வென்ற இந்தியா
நடப்பு ஆசிய கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டுள்ளது. காலிறுதி, அரையிறுதி என இரண்டு முக்கிய போட்டிகளிலும் இந்தியா சிறப்பாக இருந்தது. பேட்டிங் மற்றும் பவுலிங் என ஒட்டுமொத்தமாக தரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால், இந்திய அணி தங்கம் வென்றதாக அறிவிக்கப்பட்டது. ஆப்கானிஸ்தான் அணிக்கு வெள்ளிப் பதக்கமும், வங்கதேச அணிக்கு வெண்கல பதக்கமும் கிடைத்துள்ளது.
/indian-express-tamil/media/post_attachments/LDz9tYMs2VfksmJfF4dp.jpg)
ஆசிய விளையாட்டு போட்டியில் நடப்பாண்டு முதல் கிரிக்கெட் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், முதல் தொடரிலே இந்தியா ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் தங்கம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளனர்.
இரு அணிகளின் ஆடும் லெவன் வீரர்கள் பட்டியல்
இந்தியா:
யஷஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), திலக் வர்மா, வாஷிங்டன் சுந்தர், ஷிவம் துபே, ரிங்கு சிங், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), ஷாபாஸ் அகமது, ரவி பிஷ்னோய், ரவிஸ்ரீனிவாசன் சாய் கிஷோர், அர்ஷ்தீப் சிங்.
ஆப்கானிஸ்தான்:
ஜுபைத் அக்பரி, முகமது ஷாஜாத் (விக்கெட் கீப்பர்), நூர் அலி சத்ரான், ஷாஹிதுல்லா கமால், அப்சர் ஜசாய், கரீம் ஜனத், குல்பாடின் நைப் (கேப்டன்), ஷரபுதீன் அஷ்ரஃப், கைஸ் அகமது, ஃபரீத் அகமது மாலிக், ஜாஹிர் கான்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“