India vs Afghanistan Score, T20 World Cup 2024 Match Today: டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர் 8 சுற்றில் இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் இடையே பிரிட்ஜ்டவுனில் நடைபெற்ற போட்டியில் இந்திய அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.
இந்திய அணியில் ஒரே மாற்றமாக முகமது சிராஜிக்கு பதிலாக சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் சேர்க்கப்பட்டார். பெங்களூருவில் இறந்த இந்திய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் டேவிட் ஜான்சனின் மறைவுக்கு அனுதாபம் தெரிவிக்கும் வகையில் இந்திய வீரர்கள் கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடினர்.
'டாஸ்' வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பேட்ங்கை தேர்வு செய்தார். இதன்படி ரோஹித் சர்மா, விராட் கோலி தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.
ரோஹித் சர்மா 8 ரன் மட்டும் எடுத்து பசல்ஹக்கின் பந்து வீச்சில் கேட்ச் ஆனார். 2-வது விக்கெட்டுக்கு வந்த ரிஷப் பண்ட் அதிரடியாக விளையாடி 11 பந்துகளில் 20 ரன் எடுத்திருந்தபோது, ரஷித்கான் பந்தில் எல்.பி.டபிள்யூ. முறையில் அவுட் ஆனார்.
மறுமுனையில் நிதானமாக விளையாடிய விராட் கோலி 24 பந்துகளில் 24 ரன் எடுத்து ரஷித்கான் பந்தில் அவுட் ஆனார்.
அடுத்து வந்த ஷிவம் துபே 10 ரன்னில் அவுட் ஆனார். இதனால், இந்திய அணி 4 விக்கெட்டுக்கு 90 ரன்களுடன் தடுமாறியது.
இந்த சூழலில் சூர்யகுமார் யாதவும், ஹர்திக் பாண்ட்யாவும் இணைந்து சிறப்பாக விளையாடினர். சூர்யகுமார் சிக்சர்களைப் பறக்கவிட்டு ரசிகர்களைப் பரவசப்படுத்தினார். சூர்யகுமார் தனது 19-வது அரைசதத்தை பதிவு செய்தார்.
இந்திய அணி 150 ரன் எடுத்திருந்தபோது, சூர்யகுமார் 53 ரன்னில் (28 பந்து, 5 பவுண்டரி, 3 சிக்சர்) கேட்ச் ஆனார். இதையடுத்து, அடுத்த ஓவரிலேயே ஹர்திக் பாண்ட்யா 32 ரன்னில் (24 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) வெளியேறினார். கடைசி கட்டத்தில் ஜடேஜா 7 ரன்னும், அக்ஷர் பட்டேல் 12 ரன்னும் எடுத்தனர். ஆப்கானிஸ்தான் தரப்பில் ரஷித்கான், பசல்ஹக் பரூக்கி தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுக்கு 181 ரன் குவித்தது. இதைத் தொடர்ந்து, 182 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள், ரமனுல்லா குர்பாஸ், ஹஸ்ரத்துல்லா ஜசாய் களமிறங்கினர்.
பும்ரா மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகிய இருவரின் சிறப்பான பந்துவீச்சால் ஆப்கானிஸ்தான் அணி பேட்டர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
ரமனுல்லா குர்பாஸ் (11 ரன்), ஹஸ்ரத்துல்லா ஜசாய் (2 ரன்), இப்ராகிம் ஜட்ரனும் (8 ரன்) என அவுட் ஆனார்கள். தொடர்ந்து, குல்படின் நைப் (17 ரன்) அஸ்மத்துல்லா ஒமர்ஜாய் (26 ரன்), நஜிபுல்லா ஜட்ரன் (19 ரன்) என அவுட் ஆனார்கள்.
ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 134 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் இந்தியா 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்திய அணி தரப்பில் பும்ரா, அர்ஷ்தீப்சிங் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். குல்தீப் யாதவ் 2 விக்கெட் எடுத்தார்.
9-வது டி20 உலகக்கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் கடந்த 2 ஆம் தேதி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பங்கேற்ற 20 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதின.
லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடித்த இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், ஆப்கானிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, வங்கதேசம் ஆகிய அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறின. முன்னாள் சாம்பியன்கள் பாகிஸ்தான், இலங்கை மற்றும் நியூசிலாந்து உள்ளிட்ட 12 அணிகள் லீக் சுற்றுடன் வீட்டு நடையைக் கட்டின
சூப்பர் 8 சுற்றில் அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. குரூப் 1-ல் இந்தியா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், குரூப் 2-ல் வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. இதில், ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும். அதில் வெல்லும் அணிகள் வருகிற 29 ஆம் தேதி நடக்கும் இறுதிப் போட்டியில் மல்லுக்கட்டும்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: India vs Afghanistan Live Score, T20 World Cup 2024
இந்த நிலையில், டி-20 உலகக்கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்று போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், இன்று இரவு 8மணிக்கு பார்படோஸில் உள்ள கென்னிங்க்ஸ்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ள சூப்பர் 8 சுற்றின் 3-வது ஆட்டத்தில் இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோத உள்ளன.
ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி, நியூயார்க்கில் உள்ள நாசாவ் கவுண்டி மைதானத்தில் அயர்லாந்துக்கு எதிராக 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று உலகக் கோப்பையை தொடங்கியது. அதே மைதானத்தில் நடந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் அமெரிக்காவை தோற்கடித்து அடுத்த சுற்றில் இடம்பிடித்தது. புளோரிடாவில் கனடாவுக்கு எதிரான அவர்களின் கடைசி லீக் ஆட்டம் ஈரமான அவுட்பீல்டு காரணமாக டாஸ் போடாமல் கைவிடப்பட்டது.
ரஷித் கான் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி சி குழுவில் 3 போட்டிகளில் வெற்றி பெற்று இரண்டாவது இடத்தில் இருந்தது. அந்த அணி வெஸ்ட் இண்டீஸிடம் தோற்றதற்கு முன் உகாண்டா, நியூசிலாந்து மற்றும் பப்புவா நியூ கினியாவை தோற்கடித்து, ஆப்கானிஸ்தான் கடந்த ஆண்டு நடந்த ஒருநாள் உலகக் கோப்பையில் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் போன்ற முன்னணி அணிகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது.
அதனால், வலுவான சுழற்பந்துவீச்சு வரிசையை வைத்துள்ள ஆப்கான் அணி இந்தியாவுக்கு குடைச்சல் கொடுக்கவே நினைக்கும். அதனை சமாளித்து இந்திய அணி வெற்றியுடன் தொடங்கவே நினைக்கும். சூப்பர்-8 இல் இவ்விரு அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவிருக்காது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.