பெங்களூருவில் நடந்து வரும் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், ஆப்கானிஸ்தான் தனது முதல் இன்னிங்ஸில் 109 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் இடையேயான ஒரேயொரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் பெங்களூருவில் நேற்று (ஜூன் 14) தொடங்கியது. இதில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 104.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 474 ரன்கள் எடுத்தது. ஷிகர் தவான் 107 ரன்களும், முரளி விஜய் 105 ரன்களும் எடுத்தனர். ஹர்திக் பாண்ட்யா 71 ரன்கள் சேர்த்தார்.
இதைத் தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸில் ஆடிய ஆப்கானிஸ்தான், இந்திய பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல், அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.
இதனால் அந்த அணி 27.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 109 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக மொஹம்மத் நபி 24 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் அஷ்வின் 4 விக்கெட்டுகளும், ஜடேஜா மற்றும் இஷாந்த் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
இதையடுத்து, இந்திய அணி ஃபாலோ ஆன் கொடுத்தது. இதனால், தனது இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்து ஆப்கானிஸ்தான் அணி விளையாடுகிறது.
இந்த டெஸ்டில் அஷ்வின் 2வது விக்கெட்டை வீழ்த்திய போது, இந்திய அணி சார்பில் டெஸ்ட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய நான்காவது வீரர் எனும் பெருமையை பெற்றார். இப்போட்டிக்கு முன், அஷ்வின் 57 டெஸ்ட் போட்டியில், 311 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்தார். இன்றைக்கு 4 விக்கெட்டுகள் வீழ்த்தியதன் மூலம், டெஸ்ட் போட்டிகளில் அவரது எண்ணிக்கை 315-ஆக உயர்ந்துள்ளது.
இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கான், 311 விக்கெட்டுகள் வீழ்த்தி 4-வது இடத்தில் இருந்தார். தற்போது அஷ்வின் அவரை பின்னுக்கு தள்ளியுள்ளார். ஹர்பஜன் சிங் 417 விக்கெட்டுகளுடன் 3-வது இடத்திலும், கபில்தேவ் 434 விக்கெட்டுகளுடன் 2-வது இடத்திலும், 619 விக்கெட்டுகளுடன் அனில் கும்ப்ளே முதல் இடத்திலும் உள்ளனர்.