ஆஸ்திரேலியா - இந்திய அணிகளுக்கு இடையே இன்று சிட்னியில் நடைபெற்ற முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அங்கே இந்திய கிரிக்கெட் அணி 3 ஒரு நாள், மூன்று 20 ஓவர் மற்றும் 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது.
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே வெள்ளிக்கிழமை இன்று ஒரு நாள் கிரிக்கெட் போட்டி சிட்னியில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்தது.
ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான வார்னர் மற்றும் பின்ச் ஆரம்பத்தில் இருந்தே அதிரடியாக விளையாடினார்கள். ஆஸ்திரேலியாவின் ரன் அதிகரித்தது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 6வது ஓவரை வீசுவதற்கு வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சைனி தயாராக இருந்தபோது, ஆஸ்திரேலியாவில் அதானி குழுமத்தின் நிலக்கரிச் சுரங்கம் திட்டத்துக்கு 1 மில்லியன் டாலர் கடன் வழங்காதே என்று எதிர்ப்பு தெரிவித்து 2 போராட்டக்காரர்கள் மைதானத்துக்குள் நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை பாதுகாவலர்கள் வெளியேற்றினர். இதையடுத்து போட்டி தொடங்கியது.
சிறப்பாக விளையாடி சதம் அடித்த பின்ச் 114 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அவர் 124 பந்துகள் 9 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் அடித்தார். வார்னர் 69 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அதிரடியா விளையாடிய ஸ்மித் 66 பந்துகள் 11 பவுண்டரிகள், 4 சிக்சர்கள் அடித்து
105 எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஸ்டாய்னிஸ் அவுட் ஆனார். மேக்ஸ்வெல் 45 ரன்களும் லாபஸ்சக்னே 2 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அந்த அணியின் கேரி 17 ரன்களுடனும் கம்மின்ஸ் 1 ரன்களுடன் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். 50 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா 6 விக்கெட்டுகளை இழந்து 374 ரன்கள் எடுத்தது.
அதனால், இந்திய அணி 375 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களம் இறங்கியது.
தொடக்க வீர்களாக களம் இறங்கிய ஷிகர் தவான் மற்றும் மயங்க் அகர்வால் முதல் ஐந்து ஓவர்களில் 53 ரன்கள் எடுத்தனர். ஆனால், ஆறாவது ஓவரில் மயங்க் அகர்வால் 18 பந்துகளில் 22 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். அடுத்து வந்த விராட் கோலி 21 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அவருக்கு அடுத்து ஸ்ரேயாஸ் ஐயர் 2 ரன்கள், கே.எல்.ராகுல் 12 ரன்கள் ஷிகர் தவான் 74 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். ஹாதிக் பாண்டியா அதிரடியாக விளையாடி 90 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்த போட்டியில் ஹர்திக் பாண்டிய ஒரு நாள் போட்டிகளில் அதிவேகமாக 1,000 ரன்களை கடந்த இந்தியர் என்ற சாதனையை படைத்தார். 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 8 விக்கெட்டுகளை இழந்து 308 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால், இந்திய அணி முதல் ஒரு நாள் போட்டியில் 66 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”