India-vs-australia: பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. இதில், இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி பஞ்சாப் மாநிலம் மொகாலியில் இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 1:30 மணிக்கு தொடங்குகியது.
டாஸ் வென்ற இந்தியா பவுலிங்; ஆஸி,. முதலில் பேட்டிங்
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கே.எல். ராகுல் பந்துவீசுவதாக அறிவித்துள்ளார். அதனால், ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்கிறது.
ஆஸ்திரேலிய அணியில் தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர் - மிட்செல் மார்ஷ் ஜோடி களமிறங்கினர். இந்த ஜோடியில் மிட்செல் மார்ஷ் 4 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஸ்டீவ் ஸ்மித் வார்னருடன் ஜோடி அமைத்தார். இந்த ஜோடியை உடைக்க இந்தியா சிறிது நேரம் போராடியது. வார்னர் அரைசதம் விளாசினார். அவர் 53 பந்துகளில் 6 பவுண்டரிகள் 2 சிக்ஸர்களை பறக்கவிட்டு 52 ரன்கள் எடுத்த நிலையில் ஜடேஜா வீசிய 18.2 பந்தில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவருடன் மறுமுனையில் இருந்த ஸ்மித் 41 ரன்னில் ஷமி 21.3 பந்துவீச்சில் அவுட் ஆனார்.
சிறிது நேரம் திக்குப்பிடித்த மார்னஸ் லாபுசாக்னே - கேமரூன் கிரீன் ஜோடியில் லாபுசாக்னே 39 ரன்னில் ஆட்டமிழந்தார். கேமரூன் கிரீன் 31 ரன்னில் அவுட் ஆனார். 5 பவுண்டரிகளை அதிரடியாக விரட்டிய மார்கஸ் ஸ்டோனிஸ் 29 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஜோஷ் இங்கிலிஸ் 45 ரன்னில் அவுட் ஆனார். கேப்டன் பேட் கம்மின்ஸ் 21 ரன்னில் ஆட்டமிழந்தார். ஆட்டத்தின் கடைசி பந்தில் ஆடம் ஜம்பா ரன் ஆகினார். இறுதியில், 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த ஆஸ்திரேலிய அணி 276 ரன்கள் எடுத்தது.
இந்திய அணி தரப்பில் மிரட்டலான பந்துவீச்சை வெளிப்படுத்திய முகமது ஷமி 5 விக்கெட்டுகளையும், பும்ரா, ஜடேஜா, அஸ்வின் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். இதன் மூலம் இந்திய அணிக்கு 277 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணையிக்கப்பட்டது.
தொடர்ந்து வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு ருத்ராஜ் கெய்க்வாட் சுப்மான் கில் ஆகியோர் சிறப்பான தொடக்கம் கொடுத்தனர். இருவரும் அவ்வப்போது பவுண்டரி சிக்சர் விளாசி ரன்கள் சேர்த்தனர். இதனால் இந்திய அணியின் ஸ்கோர் சீராக அதிகரித்து வந்த நிலையில், கில், ருத்ராஜ் இருவரும் அடுத்தடுத்து அரைசதம் கடந்து அசத்தினர். இவர்களை பிரிக்க முடியாமல் ஆஸ்திரேலியா அணியின் பந்துவீச்சாளர்கள் திணறினர்.
அரைசதம் கடந்த இருவரும் சதத்தை நோக்கி பயணித்த நிலையில், இந்திய அணி 21.4 ஓவர்களில் 142 ரன்கள் எடுத்திருந்தபோது ருத்ராஜ் கெய்க்வாட் ஸாம்பா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 77 பந்துகளை சந்தித்த அவர், 10 பவுண்டரியுடன் 71 ரன்கள் குவித்தார். அடுத்து களமிறங்கிய ஸ்ரேயாஸ் அய்யர் 3 ரன்களில் ரன் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் ராகுல் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
மறுமுனையில் சற்று அதிரடியாக விளையாடிய சுப்மான் கில்63 பந்துகளை சந்தித்து 6 பவுண்டரி 2 சிக்சருடன் 74 ரன்கள் குவித்து ஸாம்பா பந்துவீச்சில் போல்ட் ஆனார். தொடக்க விக்கெட்டுக்கு 142 ரன்கள் சேர்த்த இந்திய அணி அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை இழந்த நிலையில், சிறிது நேரம் தாக்குபிடித்த இஷான் கிஷன் 26 பந்துகளில் 18 ரன்கள் குவித்து கம்மின்ஸ் பந்துவீச்சில் வெளியேறினார்.
இதனால் இந்திய அணி 185 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்த நிலையில், 6-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய சூர்யகுமார் யாதவ், கேப்டன் ராகுலுடன் ஜோடி சேர்ந்து விக்கெட் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இவர்கள் இருவரின் சீரான ஆட்டத்தால் இந்திய அணி வெற்றியை நோக்கி பயணித்த நிலையில், சற்று அதிரடியாக விளையாடிய சூர்யகுமார் யாதவ் ஒருநாள் தொடரின் தனது 3-வது அரைசதத்தை கடந்தார்.
இருவரும் 50-வது விக்கெட்டுக்கு 80 ரன்கள் சேர்ந்த நிலையில், 49 பந்துகளில் 5 பவுண்டரி ஒரு சிக்சருடன் அரைசதம் கடந்த சூர்யகுமார் யாதவ், அபார்ட் பந்துவீச்சில் சிக்சர் அடிக்க முயற்சித்து ஆட்டமிழந்தார். சூர்யகுமார் வெளியேறும்போது இந்திய அணியின் வெற்றிக்கு 12 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், 49-வது ஓவரின் 3-வது மற்றும் 4-வது பந்தில் சிக்சர் பவுண்டரி விளாசிய கேப்டன் ராகுல் இந்திய அணிக்கு வெற்றி தேடி கொடுத்தார். 48.4 ஓவர்களில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 281 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியது
கடைசிவரை களத்தில் இருந்த கேப்டன் ராகுல் 63 பந்துகளில் 4 பவுண்டரி 1 சிக்சருடன் 58 ரன்களும், ரவீந்திர ஜடேஜா 3 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 2-வது ஒருநாள் போட்டி நாளை மறுநாள் இந்தூர் ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.