India vs Australia 1st T20I: இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. நாளை(பிப்.24) முதல் டி20 போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெறுகிறது.
மே மாதம் இங்கிலாந்தில் தொடங்கவுள்ள உலகக் கோப்பைத் தொடருக்கு முன்பாக, இந்தியா விளையாடும் கடைசி சர்வதேச தொடர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்த தொடராகும். இதனால், இந்த சீரிஸ் மீதான எதிர்பார்ப்பு மிக அதிகமாக உள்ளது.
இதில் பங்கேற்கப் போகும் வீரர்களின் சிறப்பான செயல்பாடே, உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் அவர்களது பங்கேற்பை உறுதி செய்யும் என்பதால், தேர்வுக் குழு முதல் ரசிகர்கள் வரை, இத்தொடரின் ஒவ்வொரு நொடியையும் துல்லியமாக கவனிப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.
இந்நிலையில், நாளை இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான முதல் டி20 போட்டி விசாகப்பட்டினத்தில் உள்ள ஒய்.எஸ்.ஆர் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இதற்காக இரு அணி வீரர்களும் அங்கு தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் சேனல்களில் இப்போட்டியை லைவாக காணலாம். ஆன்லைனில் ஹாட்ஸ்டாரில் காணலாம். தவிர, தமிழ்.இந்தியன்எக்ஸ்பிரஸ் தளத்தில் லைவ் ஸ்கோர் கார்டை கண்டுகளிக்கலாம்.
இந்திய டி20 அணி:
விராட் கோலி(C), ரோஹித் ஷர்மா (vc), லோகேஷ் ராகுல், ஷிகர் தவான், ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக், எம் எஸ் தோனி (WK), ரவீந்திர ஜடேஜா, க்ருனல் பாண்ட்யா, விஜய் ஷங்கர், யுவேந்திர சாஹல், ஜஸ்ப்ரித் பும்ரா, உமேஷ் யாதவ், சித்தார்த் கவுல், மாயன்க் மார்கண்டே.
முன்னதாக அணியில் சேர்க்கப்பட்டிருந்த ஹர்திக் பாண்ட்யா, காயம் காரணமாக இத்தொடரில் இருந்து முழுவதுமாக விலகியதால், ரவீந்திர ஜடேஜாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
வரும் 24-ம் தேதி பெங்களூரில் இரண்டாவது டி20 போட்டி நடைபெறுகிறது.
ஒருநாள் தொடர் மார்ச் 2-ல் ஹைதராபாத்திலும், மார்ச் 5-ம் தேதி நாக்பூரிலும், 3-வது போட்டி 8-ம் தேதி ராஞ்சியிலும், 10-ம் தேதி மொஹாலியிலும், 13-ம் தேதி 5-வது போட்டி டெல்லியிலும் நடக்கிறது.