ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்யும் இந்திய கிரிக்கெட் அணி, பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில், இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பெர்த்தில் இன்று வெள்ளிக்கிழமை (நவ.22) முதல் தொடங்கி நடைபெறுகிறது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: India vs Australia LIVE Cricket Score, 1st Test
முதல் நாள் ஆட்டம் - டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது. இந்திய அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய கே.எல்.ராகுல் யெஸ்ஸ்வி ஜெய்ஸ்வால் இருவரும் தடுப்பாட்டத்தில் ஈடுப்பட்ட நிலையில், 8 பந்துகளை சந்தித்த ஜெயஸ்வால் ரன் கணக்கை தொடங்காமலே ஆட்டமிழந்தார். அடுத்து பந்த படிக்கல் 23 பந்துகளை சந்தித்தும் ரன் கணக்கை தொடங்காமல் வெளியேறி அதிர்ச்சி அளித்தார்.
4-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய முன்னாள் கேப்டன் விராட்கோலி, 5 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த நிலையில், இந்திய அணி 32 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து நிலையில், 74 பந்துகளை சந்தித்த ராகுல் 3 பவுண்டரியுடன் 26 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தாா. உணவு இடைவேளை வரை இந்திய அணி 54 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. பண்ட் 10 ரன்களுடனும், ஜோரல் 4 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
உணவு இடைவேளை முடிந்து மீண்டும் களமிறங்கிய இந்திய அணியில், மேற்கொண்டு 7 ரன்கள் சேர்த்த துருவ் ஜோரேல், 20 பந்துகளில் 11 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த வாஷிங்டன் சுந்தர் 4 ரன்னுக்கு அவுட் ஆகி வெளியேறினார்.
இதன்பிறகு களத்தில் இருந்த பண்ட் - நிதிஷ் ரெட்டி ஜோடி, ஆஸ்திரேலிய பந்துவீச்சுக்கு தாக்குப் பிடித்து ஆடியது. இதில், பண்ட் 37 ரன்னில் அவுட் ஆனார். ஹர்ஷித் ராணா 7 ரன்னுக்கும், கேப்டன் பும்ரா 8 ரன்னுக்கும் அவுட் ஆனார். மிடில் ஆடரில் களமாடிய நிதிஷ் ரெட்டி 6 பவுண்டரிகள், 1 சிக்சருடன் 41 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.
களத்தில் சிராஜ் மட்டும் இருக்க, இந்தியாவின் முதல் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. 49.4 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்த இந்தியா 150 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஜோஷ் ஹேசில்வுட் 4 விக்கெட்டையும், கம்மின்ஸ், ஸ்டார்க், மார்ஷ் தலா 2 விக்கெட்டையும் கைப்பற்றினர்.
தொடர்ந்து ஆஸ்திரேலிய அணி அதன் முதல் இன்னிங்சில் ஆடி வருகிறது. ஆஸ்திரேலிய அணியில் தொடக்க வீரர்களாக உஸ்மான் கவாஜா - நாதன் மெக்ஸ்வீனி களமிறங்கிய நிலையில், மெக்ஸ்வீனி 10 ரன்னுக்கும், கவாஜா 8 ரன்னுக்கும் அவுட் ஆகினர். அடுத்து வந்த ஸ்மித் டக்-அவுட் ஆகி வெளியேறினார். இந்த மூவரின் விக்கெட்டையும் கேப்டன் பும்ரா கைப்பற்றி மிரட்டினார்.
இதன்பின்னர், மார்னஸ் லாபுசாக்னே - டிராவிஸ் ஹெட் ஜோடி அமைத்த நிலையில், ஹெட் 11 ரன்னுக்கும், அடுத்து வந்த மிட்செல் மார்ஷ் 6 ரன்னுக்கும் சிராஜ் பந்தில் அவுட் ஆகி வெளியேறினர். 52 பந்துகள் தாக்குப்பிடித்து களத்தில் இருந்த லாபுசாக்னே 2 ரன்னுக்கு அவுட் ஆனார். அவருக்குப் பின் வந்த கேப்டன் பேட் கம்மின்ஸ் 3 ரன்னில் அவுட் ஆனார்.
அலெக்ஸ் கேரி 19 ரன்னுடனும், மிட்செல் ஸ்டார்க் 6 ரன்னுடனும் களத்தில் இருக்க முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. 27 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 67 ரன்கள் எடுத்துள்ள ஆஸ்திரேலிய அணி இந்திய அணியை விட 83 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது. நாளை வழக்கம் போல் காலை 7:50 மணிக்கு 2ம் நாள் ஆட்டம் தொடங்கி நடைபெறும்.
இரு அணியின் ஆடும் லெவன் வீரர்கள் பட்டியல்:
இந்தியா: கே.எல் ராகுல், யஷஸ்வி ஜெய்ஸ்வால், தேவ்தத் படிக்கல், விராட் கோலி, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), துருவ் ஜூரல், நிதிஷ் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், ஹர்ஷித் ராணா, ஜஸ்பிரித் பும்ரா (கேப்டன்), முகமது சிராஜ்.
ஆஸ்திரேலியா: உஸ்மான் கவாஜா, நாதன் மெக்ஸ்வீனி, மார்னஸ் லாபுசாக்னே, ஸ்டீவன் ஸ்மித், டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), பேட் கம்மின்ஸ் (கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், நாதன் லியான், ஜோஷ் ஹேசில்வுட்.
இரு அணி வீரர்கள் பட்டியல்
இந்திய அணி: யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல், தேவ்தத் படிக்கல், விராட் கோலி, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), துருவ் ஜூரல், நிதிஷ் ரெட்டி, ரவிச்சந்திரன் அஷ்வின், ஆகாஷ் தீப், ஜஸ்பிரித் பும்ரா (கேப்டன்), முகமது சிராஜ், சர்பராஸ் கான், பிரசித் கிருஷ்ணா, ரவீந்திர ஜடேஜா , ஹர்ஷித் ராணா, வாஷிங்டன் சுந்தர், அபிமன்யு ஈஸ்வரன்.
ஆஸ்திரேலிய அணி: உஸ்மான் கவாஜா, நாதன் மெக்ஸ்வீனி, மார்னஸ் லாபுசாக்னே, ஸ்டீவன் ஸ்மித், டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), மிட்செல் ஸ்டார்க், பாட் கம்மின்ஸ் (கேப்டன்), நாதன் லியான், ஜோஷ் ஹேசில்வுட், ஜோஷ் இங்கிலிஸ், ஸ்காட் போலண்ட்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.